திங்கள், 4 நவம்பர், 2013

எல்லாம் கொடுத்தது... சொல்வதெல்லாம் உண்மை - லட்சுமி ராமகிருஷ்ணன்.


( தினமலர் தீபாவளி (2.11.2013) சிறப்பு மலரில் இடம் பெற்ற எனது பேட்டி கட்டுரை) எல்லாம் கொடுத்தது... சொல்வதெல்லாம் உண்மை - லட்சுமி ராமகிருஷ்ணன். தமிழ் சினிமாவின் அழகான அம்மா, சினிமா இயக்குநர், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். 17 வயதில் திருமணம் முடிந்து, 3 பெண் குழந்தைகளின் அம்மாவாக இருக்கிறார். சினிமாவில்அம்மாவாக நடித்துக் கொண்டிருந்த லட்சுமிராமகிருஷ்ணன், ஆரோகணம் படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். இப்போது ஜீதமிழ் டி.வி.யில்‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிறார். * சினிமாவுக்கு வந்தது எப்படி? சிறுவயது முதல் எனக்குள் ஒரு தேடல் இருந்தது. அது என்னதென்று புரியாமல் இருந்தேன். என் தேடல் பற்றி புரிவதற்குள் 17 வயதில் திருமணம் ஆகிவிட்டது. பிறகு, கணவன், குழந்தைகள், குடும்பம் என்று காலம் கடந்தது. துபாயில் மஸ்கட் நகரத்தில் ஈவன்ட் மேனேஜ்மெண்ட்டாக 12 ஆண்டுகள் இருந்தேன். 2006ல் சென்னை வந்தேன். எனக்கு சினிமாத்துறையில் ஈடுபடவேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. நான் சினிமாத்துறைக்குச் செல்ல வீட்டில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். என் லட்சியம் டைரக்ஷன் தான். அதை அடைய சினிமாத்துறையினர் பரிச்சயம் வேண்டும் என்பதற்காகவே நடிக்கிறேன் என்றேன். சம்மதித்தனர். அதன்படி 2006ல் மலையாளத்தில் முதலில் நடித்தேன். அதன்பிறகு தமிழில் பல படங்கள் நடித்தேன். தொடர்ந்து 40 படங்கள் வரை நடித்து கொண்டிருந்தேன். திரையுலகினர் பலரது நட்பு கிடைத்தது. தொடர்புகளை வளர்த்துக்கொண்டேன். ஐந்து ஆண்டுகள் ஓடியபிறகு, இதுதான் தக்க தருணம் என்று முப்பது லட்சரூபாயில் ‘ஆரோகணம்’ படம் திட்டமிடப் பட்டது. முதல் இலக்கு, தயாரிப்பாளரைக் காப்பாற்றுவது. இந்த எண்ணத்தில் படம் தொடங்கப்பட்டது. முப்பது லட்ச ரூபாய்க்கு மேல் செலவானால் நான் என் கைக்காசிலிருந்து செலவழிப்பேன் என்றேன். இது என்னிடம் பணம் உள்ளது என்று காட்ட அல்ல. அதை விட அதிகம் செலவழிக்க மாட்டேன் என்று காட்டத்தான், அப்படிச் சொன்னேன். சொன்னபடியே முடித்து விட்டேன். படம் ஆரம்பித்தது முதல் ஏழெட்டு மாதங்கள் குடும்பத்தை மறந்து உழைத்தேன். முப்பது லட்சத்தில் படத்தை முடித்தேன். யாருக்கும் இழப்பு தராத படம் ‘ஆரோகணம்’. ¬*முதல் படித்தின் அனுபவம் எப்படி இருந்தது? நல்ல அனுபவம் கொடுத்தது. கே.பி., பாரதிராஜா, விஜய் போன்ற இயக்குனர்கள் பாராட்டினார்கள். குறிப்பாக பாரதிராஜா பாராட்டியது மறக்க முடியாதது. “இந்தப் படத்தை இதுவரை நான் பார்க்காமல் இருந்ததற்கு வருந்துகிறேன். சத்யஜித்ரே , அடூர் கோபாலகிருஷ்ணன் போன்று வாழ்க்கையை அப்படியே படமெடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் பணம் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் எனது சிந்தனை திசைமாறி விட்டது. இந்தப் படத்தை இவ்வளவு நேர்த்தியாக , வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே அதே நேரத்தில் மிகவும் சுவராஸ்யமாக லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அவரது முதல் படம் என்று சொல்கிறார் என்னால் நம்பவே முடியவில்லை..” என்று வாழ்த்தினார் பாரதிராஜா. *சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பற்றி... நான் ஆரோகணம் படம் இயக்கிக்கொண்டிருந்தபோது அந்த வாய்ப்பு வந்தது. நேரமின்மையால் அதை மறுத்து விட்டேன். அரோகணம் இயக்கி முடித்தப்பிறகு மீண்டும் அந்த வாய்ப்பு வந்தது. யோசித்தேன். வீடுவரை தேடி வந்த வாய்ப்பை ஏன் மறுக்க வேண்டும்? வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். வீட்டில் எல்லாரும் தடுத்தனர். டி.வி. நிகழ்ச்சி எல்லாம் உன்னால் சாமார்த்தியமாக செய்ய முடியாது. அது ரொம்ப ரிஸ்க் என்றனர். சவாலாக எடுத்துக்கொண்டேன். இப்போ இந்த நிகழ்ச்சி 200வது எபிசோட் வரை கடந்து விட்டது. * இந்த நிகழ்ச்சிக்கு அதிகமாக எந்தப் பிரச்னைகளுடன் வருகிறார்கள்? பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். அதிலும் கூலி தொழிலாளர்கள் குடும்பத்தில்தான் அதிக பி ரச்னைகள் இருக்கிறது. கள்ளக்காதல், சமூக மரபுக்கு மாறான செயல்களில் ஈடுபட்டு அதன் விளைவாக பயங்கர விமர்சனங்கள் கண்டவர்கள், பெண் கொடுமை, மாமியார் மருமகள் பிரச்னை இப்படி பல கோணங்களில் பல உறவு சிக்கல், தொல்லைகளுடன் வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி வழியாக பெண்களை கொடுமைப்படுத்தும் ஆணாதிக்கம் எல்லா மட்டத்திலும் இருக்கிறது. * அடுத்தவர்களுடைய அந்தரங்கத்தை இப்படி மேடை ஏற்றி விவாதிப்பது நியாயமா? தப்புதான்! இருந்தாலும், அவர்களுடைய அந்தரங்கத்தில் மூக்கை நுழைத்து, அவர்களுக்குத் தீர்வு சொல்கிறோம். அவர்களுடைய நிலைமையை டி.வி.யில் பார்த்து பல உதவ முன்வருகிறார்களே! இது அவர்களுக்கு கிடைத்த நன்மைதானே! பாதிக்கப்பட்டவர்களுக்கு நிபுணர்கள் மூலம் கவுசிலிங்க் கொடுத்து, அவர்களைத் தெளிவானவர்களாக அனுப்பி வைக்கிறோமே! ஆக, ஒரு கெட்டதில் 9 நன்மைகள் இருப்பதால் இந்நிகழ்ச்சி நியாமானதுதான்! எனக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. *இந்த நிகழ்ச்சி மூலம் உங்கள் கவனத்துக்கு வந்த அநேக பிரச்னைகளுக்கு மூலமாக இருப்பது எதுவென்று அறிந்திருக்கிறீர்களா? பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக இருப்பது நமது கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை மறந்து, புதுமைக்குத் திரும்பியதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் என்பதை அறிந்திருக்கிறேன். தகவல் பரிமாற்றம் சாதனமாக இருந்த தொலைப்பேசியும் செல்போனும், எப்போது பொழுதுபோக்கு சாதனமாக மாறியதோ அப்போதே பல தொல்லைகள் எழுந்துவிட்டன. சமூகத்தில் பல குற்றங்களுக்கு, பிரச்னைகளுக்கு முக்கிய துணையாக இருப்பது இந்தச் செல்போன்தான்! முக்கியமாக கள்ளக்காதல், பள்ளிப்பருவத்தில் காதல்கொண்டு ஓடிபோதல், குடும்பப் பிரச்னைகளுக்கு இந்தச் செல்போன்தான் கருவியாக இருந்திருந்ததை அறிந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல; நேருக்கு நேரான உறவுகள் வருகை, விசாரிப்புகள் எல்லாம் இந்தச் செல்போனால் காணாமல் போய்விட்டது. எது உண்மையான பெண் சுதந்திரம், எது உண்மையான பெண் முன்னேற்றம்? என்று புரிந்து கொள்ளாமல் பெண்கள் செய்யும் சில செயல்கள் அவர்களுக்கே தொல்லையாக முடிந்திருப்பதையும் அறிந்திருக்கிறேன். * இந்த நிகழ்ச்சி தந்த மறக்க முடியாத அனுபவம் பற்றி... நிறைய அனுபவம் கொடுத்திருக்கிறது. 40 படங்களில் நடித்த, ஒரு நல்ல படம் இயக்கியதில் கிடைக்காத பெருமை, புகழ், கவுரவம், விளம்பரம் எல்லாம் இந்த ‘சொல்வதெல்லாம் உண்மை’ கொடுத்திருக்கிறது. என்னைப் பார்ப்பவர்கள் கை எடுத்து கும்பிடும் அளவுக்கு மரியாதையைக் தந்திருக்கிறது. இதில் எனக்கு பூர்ணமான சந்தோஷம்தான்! ஒரு முறை ஒரு ஆட்டோவில் வந்தேன். இறங்கியதும் பணம் கொடுத்தேன். அதை வாங்க மறுத்துவிட்டார் அந்த ஆட்டோகாரர். காரணம் கேட்டேன். அதற்கு அவர், ‘ என் மகள் இன்று நல்ல நிலைமைக்கு வர காரணம், உங்கள் நிகழ்ச்சியை பார்த்ததால்தான். என் மகள் பக்கத்து வீட்டு பையனுடன் பழகியிருக்கிறாள். ஒரு நாள் அவனுடன் ஓடிப்போக திட்டமிட்டிருக்கிறாள். அந்தச் சமயத்தில் உங்கள் நிகழ்ச்சியைப் பார்த்ததும், ஓடிப்போவதால் ஏற்படும் தனக்கும் குடும்பத்துக்கும் ஏற்படும் அவமானங்களை உணர்ந்து, திருந்தியிருக்கிறாள்’ என்று கண்ணீர் வழிய சொன்னார். இப்படி பல நிகழ்வுகள் நடந்திருக்கிறது. இன்னொரு மறக்க முடியாத விஷயம். என்னைப்பற்றிய அவதுõறு செய்தி. இந்நிகழ்ச்சி மூலம் என்னைப் பிடிக்காத யாரோ எவரோ காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது எந்தக் குற்றமும் கண்டுபிடிக்க முடியாமல், என் கேரட்டர் மீது கை வைத்திருக்கிறார்கள். இந்த வயதில் என்னை ஒரு நடிகருடன் தொடர்ப்பு படுத்தி வதந்தீ கிளப்பியது என்னை வேதனைப்பட வைத்தது. உங்களில் அடுத்து இலக்கு? டிசம்பர் மாதத்தில் என் மூத்த மகளுக்குத் திருமணம். அது முடிந்ததும் மீண்டும் ஒரு படம் இயக்க இருக்கிறேன். மிகுந்த சமூகப் பொறுப்புடன், தேசிய அளவில் பேசக்கூடிய அளவுக்கு ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறேன். அந்த நல்ல செய்தியை விரைவில் உங்களை எல்லாம் அழைத்துச் சொல்லாமல் இருப்பேனா என்ன! - தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக