திங்கள், 4 நவம்பர், 2013

‘பி.எம். என்றால் பேசாத மந்திரி!’ - எஸ்.வி. சேகரின் கலகல காமெடி நாடக அனுபவங்கள்


(தினமலர் தீபாவளி (2.11.2013) சிறப்பு மலரில் இடம் பெற்ற எனது கட்டுரை) ‘பி.எம். என்றால் பேசாத மந்திரி!’ - எஸ்.வி. சேகரின் கலகல காமெடி நாடக அனுபவங்கள் நாடக சூப்பர் ஸ்டார் எஸ்.வி. சேகர். இவர் நடத்திய நாடகங்கள் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவை. இவர் நாடகத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. நிமிடத்துக்கு நிமிடம் பட்டாசு போல் நகைச்சுவை வெடி வெடித்து கொண்டே இருக்கும்.வாய் விட்டு சிரிக்க இவர் நாடகம் உத்திரவாதம் தரக்கூடியவை. “என்னோட நாடகத்தைப் பார்க்க வர்றவங்க 100 நிமிஷத்துல 200 தடவை சிரிக்கணும் இதுதான் என்னோட லட்சியம்!- என்று சொல்லும் எஸ்.வி. சேகர், அவர் நடத்தி, நடித்த நாடகங்களில், அவருக்கு ஏற்பட்ட நகைச்சுவை அனுபவங்களை வாசகர்களுக்குப் பட்டாசு கணக்காய் கொளுத்தி போட்டிருக்கிறார். அதை அப்படியே உங்களுக்குத் தருகிறோம்... அது ஒரு நாடகம். அந்த நாடகம் முடிந்ததும், ஒரு ரசிகர் எழுந்து, “சார் நீங்க கணக்குல ரொம்ப வீக்!”- என்றார். “ எதை வைச்சு சொல்றீங்கன்னு” கேட்டேன். “ நீங்க 100 நிமிஷத்துல 200 தடவை சிரிக்க வைப்பேன்னு சொல்லியிருந்தீங்க. ஆனா நான் எண்ணிப்பார்த்தேன 210 தடவை சிரிக்க வைச்சிருக்கீங்களே!” என்றார். உடனே நான், “ அப்ப இன்னொரு நுõறு ரூபாய் கொடுத்துடுங்கன்னு”ன்னு சொன்னேன். அந்த ரசிகரின் சிரிப்பு அடங்க பல நிமிடங்கள் ஆனது. இந்தச் சம்பவம் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ந்தது. அன்னைக்கு மாலை 6.45 மணிக்கு ஆரம்பிக்க வேண்டி நாடகம் கொஞ்சம் தாமதமானது. ஒரு ரசிகர் எழுந்து கேட்டார். “ நீ எப்போதும் சொன்ன நேரத்துக்கு நாடகம் ஆரம்பிக்கிறதே இல்லை. மணி இப்போ 7.15 ” என்றார். “ அதுக்கெல்லாம் நீங்க வருத்தப்படாதீங்க சார்! நாங்க எவ்வளவு லேட்டா ஆரம்பிச்சாலும் கரெட் டைத்துக்கு நாடகத்தை முடிச்சுடுவோம்” என்றேன். அவர் வயிறு குலுங்க சிரித்ததைக் கேட்கவா வேணும்! இது ஒரு நாள் நடந்த சம்பவம். குழந்தைகள் படுத்திய களேபரம் அது. அன்னைக்கு நாடகம் ஆரம்பித்து நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. இந்த நாடகத்திற்கு கை குழந்தைகளுடன் தாய்மார்கள் சிலர் வந்திருக்காங்க போல. நாடகத்தில் முக்கியமான சீன் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆடியன்ஸ் பக்கத்தில் இருந்து ஒரு குழந்தை ‘வீல்’ன்னு பயங்கரமா அழ ஆரம்பிச்சுட்டு. அதை பார்த்த மத்த குழந்தைகளும் அழ ஆரம்பிச்சுட்டு. அந்த நேரத்தில் ஹீரோயின் “ முதல்ல எங்க அப்பா, அம்மாவை சமாதானப்படுதுங்க. அப்பதான் நம் கல்யாணம் நடக்கும்” என்று ஹீரோவான என்னைப் பார்த்து ரொம்ப சீரியஸா டயலாக் பேசறங்க. உடனே நான், “முதல்ல இங்கே அழுவுற குழந்தைகளை சமாதானப்படுத்துறேன். அப்புறம் உங்க அம்மா அப்பாவை சமாதானப்படுத்துறேன். இப்ப இவங்களை சமாதானப்படுத்தலேன்னா நாம பேசறது யாருக்குமே கேட்காதுன்னு” டைமிங் வசனம் பேசினேன். இதைக் கேட்டு அரங்கேமே அதிர்ந்தது. குழந்தையின் அழுகையும் சட்டென்று நின்றது. இது ஒரு பயங்கர கலாய்ப்பு சம்பவம். எனக்கே ரசிகர்கள் அல்வா கொடுக்க முயற்சித்த சம்பவம். அந்த நாடகத்திற்கு சில இளைஞர் மது அருந்து விட்டு, போதை தலைக்கேறி நாடகம் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் வேண்டும் என்றே கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். ஒவ்வொரு காட்சியிலும் நான் வசனம் பேசுவதற்கு முன்பாக ‘ஹேக்கே பொக்க... ஹேக்கே’ என்று சிரித்து அடிக்கடி என்னை வெறுப்பேத்திக்கொண்டிருந்தனர். பொறுத்து பொறுத்துப் பார்த்த நான், “ நானும் உங்களை கவனச்சுட்டுதான் இருக்கேன். உங்களுக்கு ரொம்ப நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கு. நீங்க இந்த நாடகத்தின் ஷெட்டரை துõக்கறதுக்கு முன்பு இருந்தே சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க.இங்க வந்திருகிருவங்க எல்லாம் காசு கொடுத்து நாடகத்தை ரசிக்க வந்திருக்காங்க. நான் பேசின பின்னாடி நல்லா இருந்தா சிரிப்பாங்க. நீங்க நான் பேசுவதற்கு முன்னாலே ஹேக்கே ஹேக்கே என்று பயங்கரமாக சிரிக்கிறீங்க. இதனால் இங்க நாடகம் பார்த்துக் கொண்டிருக்கிறவங்க என்னோட தீவிர ரசிகர்கள் சிலர் உங்க மேல கோபப்பட்டு, அடித்துவிட்டால் எனக்கு வருத்தமாயிடும். அது நடந்துவிடக்கூடாதுன்னு இறைவனை பிரார்த்தனை செய்துகிறேன்னு” சொல்லி முடித்தேன். உடனே ஆடியசில் சிலர் எழுந்து ‘அடே ய் அவனுங்கள வெளியே துõக்கி போடுங்கடான்’னு குரல் கொடுத்ததும் அந்த மது போதை ரசிகர்கள் வெளியேறி விட்டார்கள். இந்தச் சம்பவம் ரொம்ப கலாட்டாவாக ஆயிடுச்சி. அந்தச் சுவாரஸ்யத்தைச் சொல்றேன் கேட்டுக்குங்க. மற்ற நாடகங்களில் நல்லா நடிக்கிற ஒரு நடிகர் , அந்த நாடகத்தில் ரொம்ப சீரியஸாக கதையோடு ஒன்றி போய் நடித்து கொண்டிருந்தார். நகைச்சுவை நாடகம் என்று நினைத்து வந்த ரசிகர்கள் சுவாரஸ்யம் இல்லாததால் கூச்சல் போட்டனர். உடனே அவர், “ நடிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இடியட்ஸ், தைரியம் இருந்தால் என்னை மாதிரி நடிச்சுக்காட்டுங்க பார்ப்போம்” என்று கோபப்பட்டு சொல்லி விட்டார். அவர்சொல்லி முடித்த அடுத்த நிமிஷமே, ‘ ஸ்டேஜில் வந்து 50 பேர் நிற்கிறாங்க. நான் நடிக்கிறேன்! நான் நடிக்கிறேன்னு மைக்கைப் பிடிச்சுக்கிட்டு ‘கண்ணே மணியே...’ என்று டயலாக் பேசி, உங்களோட நல்லா நடிக்கிறேனான்னு கேட்கிறாங்க. இதுல என்ன வேடிக்கைனா ஆடியன்ஸ்களுக்கு சீரியஸ் கதையில் இடையில் இப்படியொரு சுவாரஸ்யம் நடக்க, அதுபிடிச்சுபோய் ஒன்மோர் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. உண்மையிலே அந்த நாடகம் ரொம்ப சீரியஸா போச்சு. ஆனால், கடைசியில இப்படி சிரிக்கற அளவு வந்துட்டு. அந்தச்சபாவில் ஆயிரம் பேர் இருக்க வேண்டிய இடத்துல 1300 பேர் இருக்காங்க. நல்ல கூட்டம். நாடகம் ஆரம்பமானது. கடைசி ரோவில் இருந்து ‘கேட்கல! கேட்கல! கேட்கல!’ என்று ஒரே கூச்சல் போட்டனர். எனக்குத் திடுக்கிட்டது! பொதுவாக என் நாடகத்தில் நாலு லைட்டும் எட்டு மைக்கும் நல்லா இருக்கும். நல்லா டெஸ்ட் பண்ணிட்டுத்தான் நாடகமே ஆரம்பிப்பேன். அடிப்படையில் நான் ஒரு சவுண்ட் என்ஜினியர். எனக்குத்தெரியாதா, இவங்க வேணும் என்று கலாட்டா செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். “ கடைசி ரோவ் வரைக்கும் நாங்க பேசறது கேட்கணும்தான் ஆசைபடுவோம். இருந்தாலும் இப்பவே மைக்கை டெஸ்ட் பண்றேன்னு சொல்லி வால்யூமே கூட்டி. “இப்ப கேட்குதான்னு கேட்டேன்”. கோரசாக “கேட்கலைன்னு” கத்தினாங்க. மறுபடியும் புல்லா வால்யூமை கூட்டி வைத்து விட்டு கேட்டேன். மறுபடியும் அவங்க ‘கேட்கலை!’ கத்தினாங்க. மறுபடியும் வால்யூமை சுத்தமாக குறைத்துவிட்ட இப்ப கேட்குதான் கேட்டேன். கேட்கலைன்னு சொன்னாங்க. கேட்கலையான்னு கேட்ட கேள்விக்குத்தான் நீங்க கேட்கலைன்னு பதில் சொல்லி இருக்கிங்க. அப்ப கடைசி ரோவ் வரை நான் பேசறது கேட்கிறது. இங்க இருக்கிற ஸ்பீக்கரில் கேட்கிறதுல கோளாறு இருந்தா நான் சரிபண்ணிடுவேன். ஆனால் உங்க காதுல இருக்கிற ஸ்பீக்கர்ல கோளாறு இருந்தா உங்களை சாமிகிரி சித்தர்கிட்டதான் கூட்டிட்டுப்போகணும் சொன்னேன். அப்படி நான் சொன்னதும் ஆடியன்ஸ் எழுப்பிய கரவொலி சபா முழுவதும் நிறைந்தது. இப்ப, நான் சொல்றது எல்லாம் என் நாடகத்தில் ரசிகர்கள் மிகவும் ரசித்த டைமிங் காமெடிகள். அந்த நாடகம் நடக்கும் சமயம் நிதித்துறை மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், உள்துறை மந்திரியாக ஆன சமயம். அந்த நாடகத்தில் எனக்கு அரசியல்வாதி வேஷம். ஒரு பத்திரிகை நிருபர் கேட்கிறார். “சார், பைனான்ஸ் மினிஸ்டரை ஹோம் மினிஸ்ட்டராக மாத்திடாங்களே! அவரு தீவிரவாதத்தை ஒழித்து விடுவாரான்னு” கேட்டார். உடனே நான், “ கண்டிப்பார் ஒழிப்பார் சார்! ஷேர் மார்க்கெட்டையே ஒழித்தவர். இதை ஒழிக்க மாட்டாரான்னு ”கேட்டேன். இதைக் கேட்டதும் ஆடியன்ஸ் எழுந்து நின்னு கைதட்டினாங்க! இது ஒரு நாடகம். “சார் மோடியை இந்தியாக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களே! கேட்கிறார் ஒருத்தர். “ரொம்ப சந்தோஷப்படாதே. அவர் லலித்மோடி!” ‘ஒருத்தர் என் குழந்தைக்கு நாலு வயசு ஆச்சு. இன்னும் பேச்சே வரல. போகாத கோயில் இல்ல; பார்க்காத டாக்டர் இல்ல. நீங்க தான் ஏதாவது செய்யணும்”னார். “இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க. 600 கோடி செலவு செய்து பல உலக நாடுகளுக்குப் போய்ட்டு வந்த நம் பிரதம மந்திரிக்கே பேச்சு வரல. பாருங்க உங்க பையன் வருங்காலத்துல பி.எம்.மா வருவான்”னு சொன்னேன். அவர் பி.எம். என்னான்னு கேட்டார். நான் பேசாத மந்திரின்னு சொõன்னேன். 2004ம் ஆண்டு பசுவதை தடுப்புச் சட்டம் வந்தது. அந்தச் சமயத்தில் வந்த டைமிங் காமெடி இது. அய்யா ஏன் பசுவதை தடுப்புச் சட்டத்தை எதிர்க்கிறான்னு கேட்டார். பசு மாடு அம்மான்னு கத்துதே அதனால்தான் ஐயாவுக்கு பிடிக்கலை! நான் சொல்வேன். அப்போ ஒரு சாமியார் பெண்கள் விவகாரத்தில் கைதான சமயம். “என்னால மாமியார்,பெண்டாட்டி தொல்லையை என்னால சமளிக்கவே முடியல. ஏதாவது ஆசிரமத்துல சாமியாரா சேர்ந்திடலாம்னு இருக்கேன்” என்பார். “இங்கே ரெண்டு பொம்பளைங்களேயே உன்னால சமாளிக்க முடியலை. ஆசிரமத்துல ஆயிரக்கணக்கான பொம்பளைகள எப்படி சமாளிப்பே?”ன்னு கேட்பேன். இது ஆந்திராவில் பெண்கள் விவகாரத்தில் அப்போது இருந்த கவர்னர் பதவி இழந்த சமயம். ‘ஐயோ, எனக்குத் தலைசுத்துங்க!’ ‘அதுக்கு நான் காரணமில்ல. நான் காரணமாயிருந்தா ஐதராப்பாத்துக்கு என்னை கவர்னர் ஆக்கியிருப்பாங்க.’ என்றேன். சபையில் சிரிப்பொலி அடங்கவே இல்லை. என்ற எஸ்.வி.சேகர், பேட்டி எடுத்த எங்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து அனுப்பி வைத்தார். - தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக