திங்கள், 4 நவம்பர், 2013

பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது எப்படி? - தேவராஜன்.


பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது எப்படி? - தேவராஜன். நாளைக்குத் தீபாவளி பண்டிகை! புத்தாடை, பட்டாசு, பலகாரம் என வீடே அமர்க்களப்படும். தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு ஜாலியான பகுதி பட்டாசு வெடித்து மகிழ்வதுதானே! இப்படி ஜாலியாக பட்டாசு வெடிக்கும் போது, காயமடையாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு, என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக் கூடாது? என்பதற்கான ஆலோசனைகள் உங்களுக்குக்காக தரப்பட்டுள்ளது. படித்து தீபாவளியை தித்திக்க தித்திக்க கொண்டாடுங்க குட்டீஸ்! பாதுகாப்பாக வெடி வெடிப்பது எப்படி? நெருக்கமான வீடுகள், மக்கள் அடர்த்தி மிக்க இடங்களில் இருந்தால், அங்கே பட்டாசு வெடிப்பதைத் தவிருங்கள். பட்டாசு வெடிக்கும் இடம் திறந்தவெளியாக இருக்கட்டும். வெடிகளை வெடிக்கும் முன் ஒரு வாளி தண்ணீர், மணல் போன்ற தீயணைப்புப் பொருட்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் குழந்தைகள் என்பதால், அருகில் கட்டாயம் பெரியவர்கள் இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது காலணி அணிந்து இருப்பதும் அணிந்திருக்கும் உடை பருத்தி ஆடைகளாக இருப்பதும் முக்கியம். உங்கள் வீரத்தைக் காட்ட கையில் பிடித்தவாறு பட்டாசுகளைக் கொளுத்தாதீர்கள். கம்பி மத்தாப்புக்களைக் கொளுத்தி முடித்ததும் அந்தக் கம்பிகளைத் தண்ணீரில் போட வேண்டும். தீக்காயங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது? உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது கண்களில் பட்டாசுத் துகள்கள் பட்டாலோ உடனே தண்ணீரில் தொடர்ந்து கழுவ வேண்டும். எரிச்சல் குறையும் வரை கழுவிவிட்டு, உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். உடலில் தீ பட்ட இடத்தில் துணிகள் ஒட்டிக்கொண்டு இருந்தால் உடனே அதை வேகமாக கழற்றக் கூடாது. பட்டாசு வெடிக்கும்போது சிறிய அளவில் புண் ஏற்பட்டுவிட்டால், அந்த இடத்தில் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைத் தடவினாலே போதும். அவசர உதவிக்கு 108 எண்ணுக்குச் சுழற்றுங்கள்! எச்சரிக்கையை கவனிங்க! ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பைக் கொளுத்தும் முன்பு செய்ய வேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகளைப் படித்து, அதன்படி பயன்படுத்த வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு பட்டாசையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்தினால் கண் உட்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப்படலாம். இங்கெல்லாம் வேண்டாம்! தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க்குகள், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள அல்லது தயாரிக்கப்படும் இடங்களைத் தவிர்த்து, குறிப்பாக விளையாட்டு மைதானங்கள் போன்ற திறந்தவெளிகளில் பட்டாசுகளை வெடித்து மகிழ்வதே நல்லது. இதெல்லாம் கூடாது! ஒரேநேரத்தில் ஒரு பட்டாசை மட்டுமே கொளுத்த வேண்டும். த்ரில்லிங்க்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது விபத்துக்குக் காரணமாகலாம். நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், ஒருபோதும் அதனை கையில் எடுப்பதற்கோ அல்லது மீண்டும் உடனே பற்ற வைப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது. அந்த பட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம். மிக அதிகமான ஒளியையும், மிக அதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்தக்கடாது. இப்படி செய்யுங்க! நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒரு பக்கெட்டில் போடு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்தலாம். இப்படிச் செய்யாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு பட்டாசை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல. நீங்கள் பட்டாசை பற்றவைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும் விதமாக பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பினைக் கொளுத்துவதற்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதை எல்லாம் தவிர்க்கலாமே! வெடிக்காத பட்டாசுகளையும், வெடிகளையும் ஒன்றாக சேர்த்து வெடிக்க வேண்டாம். பட்டாசுகளை கொளுத்தி மற்றவர்கள் மீதோ, தெருவிலோ வீசி விளையாடுவதை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும்போது வெடிகளை கொளுத்திப்போடுவதையும் தவிர்க்க வேண்டும். அதனால், பெரிய விபத்துகளை தவிர்க்கலாம். தரைச் சக்கரம் போன்றவற்றை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துகளையும் வீட்டின் தரை பாழாவதையும் தவிர்க்கலாம். குடடீஸ்க்கு தீபாவளி வாழ்த்துகள்! பாதுகாப்பான தீபாவளியே அனைரும் விரும்புவது! பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்! குட்டீஸ் அனைவருக்கும் ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக