திங்கள், 29 ஜூலை, 2013

மனிதனின் அன்பும் இறைவனின் அருளும்

.........................................101/ மனிதனின் அன்பும் இறைவனின் அருளும்............................................................... அன்பு என்ற உணர்வு அழகானது. இன்பமானது. இறைவனுமானது. கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க எடுக்க மேலும் மேலும் தண்ணீர் சுரப்பதுபோல, நெஞ்சில் இருந்து அன்பு சுரந்து கொண்டே இருக்கும். இந்தகைய அன்பு மனிதர்களிடம் அவர்களது பக்குவ நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு வடிவில் வெளிப்படுகிறது. உயர்ந்த ஞான நிலையில் உள்ளவர்களுக்கு அது ஜீவகாருன்யமாக அருளாக வெளிப்படுகிறது. உதாரணம் வள்ளலாரைச் சொல்லலாம். அவர் மனசு ‘வாடிய பயிருக்காக வாடியது’அல்லவா? பக்குவப்பட்ட மனிதர்களிடம் சுத்த அன்பாக வெளிப்படுகிறது. இது பிரதிபலன் பாரதது. இதற்கு <உதாரணமாக பல ஞானிகள், சித்தர்கள் இருக்கிறார்கள். பக்குவம் இல்லாத மனிதர்களிடம் அது ஆசையாக அல்லது காமமாக வெளிப்படுகிறது. இதற்கு உதாரணம் நம் வாழ்க்கையில் பலரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அன்பின் உயர்ந்த நிலை ஜீவகாருண்யம். அன்பின் கீழ் நிலை காமம். ஒரு எதிர்பார்ப்புடன் செலுத்தப்படுவது அன்பு. நாம் சகமனிதர்கள் மேல் காட்டுவது அன்பு. பக்தர்கள் இறைவன் மீது செலுத்துவது அன்பு. இவை எல்லாம் வெளிப்படையாக,ஒரு எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். கணவன், மனைவியிடம் அன்பு செலுத்துகிறான். அதற்கு பிரதிபலனாக அவளின் அன்பையும், கவனிப்பையும் எதிர்பார்க்கிறான். தாய் தனது பிள்ளையிடம் அன்பு செலுத்துகிறாள். பிள்ளையின் பாசத்தையும், சந்தோசத்தையும் பிரதிபலனாக எதிர்பார்க்கிறாள். இதுபோல நாம் இறைவனிடம் காட்டுகிற அன்பு அவனின் அருளையும், கவனிப்பையும் வேண்டி நிற்பதாகும். இறைவன் உலகத்து உயிர்கள் மீது செலுத்துவது அன்பு அல்ல; அது அருள். அருள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாதது. மேலான ஒருவரால் கீழான நிலையில் உள்ளவரிடத்துக் காட்டப்படுவது அருள். அது இறைவனுக்கு மட்டுமே உரியது. இறைவன் மீது நாம் அன்பு செலுத்தினால், இறைவன் நம் மீது அருள் காட்டுவான். இதற்கு உதாரணங்கள் நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் உள்ளன. கண்ணப்ப நாயனார் வழிபட்ட விதம், ஆண்டாள் வழிபட்ட விதம், சபரியின் பக்தியும் இறைவன் மீது அன்பு செலுத்தியதுதானே! இறைவன் அருள் பெற துறவியாக இருக்க வேண்டியதில்லை. தவம், தியானம் செய்ய வேண்டியதில்லை. மந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை. தூய்மையான, உறுதியான அன்போடு மனமுருகிச் செய்யும் பிரார்த்தனைகளாக இருக்க வேண்டும். இறைவன் மீது அன்பு கொண்டிருந்தால் போதும். இறைவன் நம்மைத் தேடி வருவான். தருமி என்ற தரித்திரப் புலவன், கண்ணப்பன் என்ற வேடுவன், வந்தி என்ற பிட்டு விற்கும் கிழவி இவர்களின் அன்புக்காக, இறைவன் அவர்களைத் தேடி வந்த கதைகள் நாம் அறியாதவர்களா, என்ன? - தேவராஜன். **************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக