புதன், 10 ஜூலை, 2013

சுலபமாக பாராயணம் செய்யலாம்!/99/28.7.13/

சுலபமாக பாராயணம் செய்யலாம்!/99/28.7.13/ நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எல்லாம் நீக்கி, மங்களம் தரும் ஒரு பாராயணத்தை நமது முன்னோர் வழி வழியாகச் செய்து பலனை அனுபவித்து வந்திருக்கின்றனர். ஓர் அற்புதமான பாராயணம் ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக அமைந்துள்ள சுந்தர காண்டம் பாராயணம் ஆகும். சுந்தர காண்டம் அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத காண்டம். 24,000 சுலோகங்கள் கொண்ட ராமாணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் 2885 சுலோகங்கள். 68 அத்தியாயங்கள். வேத மந்திரங்கள் தரும் அனைத்து மங்களத்தையும் தரவல்லது சுந்தரகாண்ட பாராயணம். இவ்வளவையும் எல்லாராலும் ஒரே மூச்சில் படிக்க இயலாது. பலருக்கு நேரம் கிடைப்பது இல்லை. இத்தகையவர்களின் நலன் கருதி, ஐந்தே நிமிடங்களில் சுந்தர காண்டத்தை படிக்க அதன் சுருக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சுருக்கத்தைப் படித்தாலே, சுந்தர காண்டத்தை முழுமையாக படித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களில் பெரிவாச்சான்பிள்ளை என்னும் மகான் தொகுத்து அருளிய பாசுரப்படி இராமாயணம் என்பதில் கீழ் வருமாறு சுந்தர காண்டம் உள்ளது: “சீர் ஆரும் திறல் அனுமன் மா கடலைக் கடந்து ஏறி, மும்மதிள் நீள் இலங்கை புக்கு, கடிகாவில் வார் ஆரும் முளை மடவாள் வைதேகிதனைக் கண்டு, நின் அடியேன் விண்ணப்பம் கேட்டு அருளாய்: அயோத்தி தனில் ஓர் இடவகையில் எல்லியம்போது இனிது இருத்தல் மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும் கலக்கிய மாமனத்தனளாய் கைகேயி வரம் வேண்ட மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய, “குலக்குமரா! காடுறைய போ!” என்று விடை கொடுப்ப, இலக்குமணன் தன்னொடும் அங்கு எகியதும், கங்கைதனில் கூரணிந்த வேல் வலவன் குகனோடு சீர் அணிந்த தோழமை கொண்டதுவும், சித்திர கூடத்து இருப்ப பரத நம்பி பணிந்ததுவும், சிறு காக்கை முலை தீண்டி மூவுலகும் திரிந்தோடி, “வித்தகனே! இராமா! ஒ! நின் அபயம்” என்ன, அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும், பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட, நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக, பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும், அயோத்தியர்கோன் உரைத்த அடையாளம், “ஈது அவன் கை மோதிரமே!” என்று, அடையாளம் தெரிந்து உரைக்க, மலர்க்குழலாள் சீதையும், வில்லிறுத்தான் மோதிரம் கொண்டு, “அனுமான்! அடையாளம் ஒக்கும்” என்று, உச்சி மேல் வைத்து உகக்க: திறல் விளங்கு மாருதியும் இலங்கையர் கோன் மாக்கடிகாவை இறுத்து, காதல் மக்களும் சுற்றமும் கொன்று, கடி இலங்கை மலங்க எரித்து, அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு, அன்பினால் அயோத்தியர் கோன் தளிர் புரையும், அடி இணை பணிய!” மேலே சொன்ன இந்த பாடலைப் பாராயணம் செய்ய 5 நிமிடம் போதும்! தினமும் பக்திக்காக 5 நிமிடம் ஒதுக்கி, இந்தப்பாடலைப் பாராயணம் செய்தால் சுந்தரகாண்டம் பாராயணம் செய்த புண்ணியம் கிட்டும். - தேவராஜன். **************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக