புதன், 8 மே, 2013

பக்தியினிலே ஒன்பது வகை/90/ 26.5.2013/


பக்தியினிலே ஒன்பது வகை/90/ 26.5.2013/ சாஸ்திரங்கள் கடவுள் மீது நாம் கொள்ள வேண்டிய பக்தியை இப்படி இப்படி என்று வகைப்படுத்தியுள்ளன. அப்படி பக்தி செய்தவர்கள் பெற்ற இறை அருளையும் புராணங்கள் எடுத்துக்காட்டி உள்ளன. சாஸ்திரங்கள் வகைப்படுத்தியுள்ள பக்தியினிலே ஒன்பது வகையில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பக்தியில் நீங்கள் இருக்கும் நிலையைத் தெரிந்து கொண்டு தொடர்ந்து அன்போடு, நம்பிக்கையோடு இடைவிடாது இறைவனிடம் பக்தி செய்து வாருங்கள். நிச்சயம் அதற்குரிய பலனை அப்படியே இறைவனிடம் பெறலாம். ச்ரவணம்: குருமார்களிடமும் சமய சான்றோர்களிடமும் நாம் இறைவனின் அருமை பெருமைகளைப்பற்றி கேட்டு, அறிந்து இறைவனிடம் பக்தி கொள்வது ச்ரவணம் ஆகும். சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து பாகவதம் கேட்டு, தன் பாவங்களில் விடுபட்டான். கீர்த்தனம்: இறைவனின் புகழ்பா டும் பாடல்கள் கீர்த்தனங்களாகும். இந்தக் கீர்த்தனங்களை பஜனை செய்து, இறைவனை வழிபடுவது கீர்த்தனம். சுக முனி பாடிய பாகவதக் கதையால் சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லாம். ஸ்மரணம்: ‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்று மாணிக்க வாசகரின் எண்ணப்படி முழு நம்பிக்கையுடன் எப்போதும் இறைவனை பற்றி நினைத்துருகுவது ஸ்மரணம். எத்தனையோ துன்பங்கள், இடர்கள் வந்தபோதும் பிரஹலாதன், தன் ஹரியை மறக்காமல் நினைத்துக்கொண்டிருந்தான்! பாதஸேவனம்: இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது நல்ல உள்ளத்துடன் இறை சேவை செய்தல் பாதஸே வனமாகும். இந்த பாக்கியத்தை பெற்றவள் லக்ஷ்மி தேவி. அர்ச்சனை: உள்ளன்புடன் நாளும் பொழுதும் மலர்களைக் கொண்டு ஈசனுக்கு பூஜை செய்வது அர்ச்சனை. பிருது மகாராஜா என்பவர் இறைவனுக்கு இடைவிடாது அர்ச்சனை செய்தவர்களில் பிரசித்தி பெற்றவர். இவர் இறை அருள் பெற்றவர். வந்தனம்: இந்த உடல் இறைவன் கொடுத்தது. எனவே இந்த உடலோடு என் உள்ளத்தையும் உனக்களித்தேன் எனும்படி கீழே விழுந்து சாஷ்டாங்கமாய் இறைவனை வணங்கி எழுதலுக்குப் பெயர் வந்தனம். கண்ணனை தினமும் வணங்கி கண்ணனைக் கண் கூடாகக் கண்டவர் பக்த அக்ரூரர். தஸ்யம்: எப்போதும் இறைவனுக்கு தம்மை அடிமையாய் கருதி திருப்பணிவிடை செய்தல் தஸ்யம் ஆகும். இதற்கு சிறந்த உதாரணம் அனுமன். ஸக்யம்: ஒரு பக்தன், இறைவனை தம் தோழனாய், தம் அன்பிற்குரியவனாய் கருதி நேசத்துடன் பக்தி செய்வது. முப்பொழுதும் கண்ணனோடு இருந்து,உண்டு , உறங்கி, பேசிப் பழகிய, அன்பு, நட்பு, பக்தி செய்த அர்ஜுனன் கொண்ட பக்தி சக்யம். சக்ய பக்தியினாலேயே அர்ஜூனன் கண்ணனுக்குப்பிரியவனாகி, கீதை உபதேசம் பெற்றான். ஆத்ம நிவேதனம்: இந்த ஆத்மா அவனுடையது. அது அவனுக்கு உரிமையுடையது என நினைத்து, இறைவனுக்கு தன்னையே ஒப்புக்கொடுப்பது ஆத்ம நிவேதனம் . இதற்கு சிறந்த உதாரணம் அரசன் மகாபலி. - தேவராஜன். ************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக