புதன், 8 மே, 2013

அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை/89/ 19.5.13/


அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை/89/ 19.5.13/ ஒரு பக்தனின் உண்மையான, உள்ளன்பான, முழுநம்பிக்கையான பக்திக்கு இறைவன் நிச்சயமாக அருள்பாலிக்கிறார். பிரகலாதனின் முழுநம்பிக்கையான பக்திக்கு மகா விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து காட்சியளித்தார். இதே போல, இன்னொருவருக்கும் அவர் நரசிம்மர் அவதார காட்சிகொடுத்துள்ளார். அந்தக் கதையைத் தெரிந்துகொள்வோமே! ஸ்ரீஆதிசங்கரரின் சீடர் ஸ்ரீ பத்மபாதர். அவருக்கு ஸ்ரீ நரசிம்ம மந்திரம் உபதேசிக்கப்பட்டது. அவர், சித்தி அடைய வேண்டி, ஒரு காட்டில் தனிமையில் அமர்ந்து ஜபம் செய்யலானார். காட்டில் தனிமையில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தான் ஒரு வேடன். ‘சுவாமி, பயங்கர மிருகங்கள் இருக்கும் இந்தக் காட்டில் இப்படி தனியாக அமர்ந்திருக்கீங்களே! இங்கிருந்து போய்விடுங்கள்’ என்று எச்சரித்தான் அந்த வேடன். பத்மபாதரோ, ‘நான் ஒரு அதிசய மிருகத்தைத் தேடி வந்திருக்கிறேன். அது இங்கே தான் இருக்கிறது. அதைப் பிடிப்பதற்காக அமர்ந்திருக்கிறேன்’ என்றார். ‘இந்தக் கானகத்தில் எனக்குத் தெரியாத மிருகமா? நீங்கள் அடையாளம் சொல்லுங்கள், நான் பிடித்துத் தருகிறேன்’ என்றான். பத்மபாதரும், ’சிங்கத் தலையும் மனித உடலும் உள்ள விசித்திர மிருகம் அது ’ என்றார். ’நான் இன்று சூரிய அஸ்தமனத்திற்குள் அதைப் பிடித்து வருகிறேன்’ என்று கூறிவிட்டுத் தேடப் புறப்பட்டான் வேடன். காட்டில் எங்கு தேடியும் அந்த மிருகம் கிடைக்கவில்லை. ‘அந்த தவசி உண்மையைத் தான் கூறுவார்’ என்ற நம்பிக்கை அவனுக்கு. ஆதலால் உணவின்றி, நீரும் அருந்தாமல் தேடினான். மாலையும் வந்தது. கிடைக்கவில்லை என்று அந்தத் தவசியிடம் எப்படிப் போய்ச் சொல்வேன், அவர் என்மீது நம்பிக்கை வைத்துக் காத்திருப்பாரே!!’ என்று வருத்தப்பட்டான். ‘அந்த மிருகம் கிடைக்கவில்லை என்று சொல்வதைவிட, எனக்கு மரணமே மேல்’ என்று சாகத்துணிந்து விட்டான் வேடன். அப்போது இடி இடிப்பதுபோல் பெருமுழக்கம் கேட்டது. ஆதிமூலமான இறைவன், ஸ்ரீ நரசிம்மர், வேடன் முன் தோன்றினார். ‘ வந்து விட்டாயா, உன்னை எங்கெல்லாம் தேடுவது?’ என்று கூறி, கொடிகளால் நரசிம்மரைக் கட்டினான். ’அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை’ யாக நரசிம்மர் சாதுவாக அவனுக்குக் கட்டுப்பட்டார். அவரை பத்மபாதரிடம் அழைத்துச் சென்று, ‘பாருங்கள், பிடித்து விட்டேன். நீங்கள் சொன்ன மிருகம் இதுதானா என்று பாருங்கள்’ என்றான். பத்மபாதருக்கு கொடிகளால் கட்டப்பட்டிருக்கும் பகவானைத் தெரியவில்லை. அவர் பிரமித்து நின்றிருந்த போது, நரசிம்மரின் கர்ஜனை கேட்டது. ‘முழு நம்பிக்கையுடன் தேடியதால், இவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். பக்தியில் சந்தேகம் கூடாது. இவனின் சம்பந்தம் இருந்ததால்தான் என் குரலையாவது கேட்கிறாய், காலம் வரும்போது நான் உனக்குக் காட்சியளிப்பேன் என்று கூறி மறைந்தார். இறைவன், தன்னையே கதி என்றிருப்போருக்குக் கட்டாயம் அருளுவான். - தேவராஜன். *******************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக