வெள்ளி, 8 அக்டோபர், 2010

தேவராஜனின் மேஜிக் மேஜிக் மூன்றாம் பாகம்

தேவராஜனின் மேஜிக் மேஜிக் மூன்றாம் பாகம் (51 முதல் 55 வரை)
( தினமலர் சிறுவர் மலரில் வெளிவந்து கொண்டிருக்கும் என்னுடைய மேஜிக் தொடர்)
51. அறுந்த நுõல் ஒன்றாகும் மேஜிக்

தேவையானப் பொருட்கள்: ஸ்டிரா, நுõல், கத்தரிக்கோல்
செய்முறை: ஒரு ஸ்டிராவை எடுத்து பார்வையாளர்களிடம் காட்டி அதில் ஒன்றுமில்லை என்பதை தெளிவு படுத்துங்கள். பின்னர் அந்த ஸ்டிராவில் ஒரு நுõலை நுழையுங்கள். பிறகு அதை அப்படியே இரண்டாக மடியுங்கள். மடித்த முனையை கத்தரிக்கோலால் வெட்டுங்கள். பார்வையாளர்களிடம், "" இந்த ஸ்டிராவில் உள்ள நுõலோடு இரண்டாக வெட்டி விட்டேன். நுõலும் இரண்டு துண்டாக வெட்டியாகிவிட்டது. இப்போது மேஜிக் செய்து வெட்டப்பட்ட நுõலை ஒன்றாக வெளியே எடுக்கிறேன்' என்று சொல்லி வெட்டப்பட்ட ஒரு ஸ்டிராவிலிருந்து நுõலை இழுக்கவும். நுõல் வெளியே முழுமையாக வந்துவிடும். பிறகு நுõலை இழுத்து காட்டுங்கள் அது வெட்டப்பட்டது இணைந்து இருக்கும். பார்த்த பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்யும் முன்பாக ஸ்டிராவின் மத்தியில் இரண்டு சென்டிமீட்டர் அளவு நீளவாக்கில் கத்தியால் கிழித்து கொள்ள வேண்டும். மேஜிக் செய்யும் போது இரண்டாக மடக்கி, ஸ்டிராவின் இரண்டு முனையிலும் தொங்கும் நுõலை இழுத்தால் வெட்டப்பட்ட பகுதியிலிருந்து நுõல் கீழே இறங்கி விடும். அந்த இடத்தில் நுõல் இருக்காது. ஆதலால் நீங்கள் கத்தரிக்கோலால் வெட்டும் போது நுõல் வெட்டுப்படாது. இது தான் மேஜிக் சீக்ரெட்!

52. மாயமாகும் ஓட்டை!
தேவையான பொருள்: காகிதம்
செய்முறை: நீள் சதுர காகிதத்தை எடுத்து, இரண்டாக மடிக்கவும், அடுத்த அதை இரண்டாக மடிக்கவும். இப்போது சதுர வடிவில் இருக்கும் காகிதத்தை பார்வையாளர்களிடம் காட்டி, அதன் ஒரு முனையை சிறிது கிழித்து கிள்ளி எடுக்கவும். கிள்ளி எடுக்கப்பட்டதுடன் காகித சதுரத்தை பார்வையாளர்களிடம் காட்டி,"" இந்த காகிதத்தில் ஒரு முனையை கிள்ளி எடுத்துவிட்டேன். இதனால் காகிதத்தில் நடுவில் ஓட்டை விழும் பாருங்கள்' என்று சொல்லிவிட்டு, காகிதத்தை விரித்துக்காட்டுங்கள். காகிதத்தின் நடுவில் ஓட்டை இருக்கும்.
பிறகு, இன்னொரு காகிதத்தை எடுத்து முன்பு போலவே இரண்டாக மடிக்கவும். அடுத்தும் இரண்டாக மடித்து அதன் ஒரு முனையை சிறிது கிழித்துவிட்டு, கிள்ளி எடுத்துவிடவும். பின்னர் பார்வையாளர்களிடம், "" இந்த காகிதத்தில் கிள்ளி எடுத்த பகுதியில் ஓட்டை விழாமல் இருக்கும் பாருங்கள்!'' என்று சொல்லிவிட்டு காகிதத்தை விரித்து காட்டுங்கள்! காகிதத்தின் நடுவில் ஓட்டை இல்லாதிருப்பது கண்டு பார்ப்பவர்கள் ஆச்சரியமடைவார்கள்!
மேஜிக் சீக்ரெட்: நான்காக மடிக்கப்பட்ட காகிதத்தில் ஒரு முனையை சிறிய அளவு கிழிக்கும் போதே, அதை இடது கை ஆள்காட்டி விரலால் பின்பக்கமாக மடித்து கொள்ளவும். ஆனால்வலது கை விரலால் கிள்ளி எறிந்தது போல பாவனைக்காட்டவும். இது தான் மேஜிக் சீக்ரெட்!

53. தண்ணீரில் காசு முளைக்கும்!

தேவையான பொருட்கள்: 50 காசு, தண்ணீர் கிளாஸ், கைக்குட்டை

செய்முறை: இடது கை உள்ளங்கையை விரித்துக்காட்டி கையில் காசு இல்லை என்பதை பார்வையாளர்களிடம் தெளிவுபடுத்தவும். பிறகு ஒரு கை குட்டையை எடுத்து நன்றாக உதறி அதிலும் காசு இல்லை என்பதை தெளிவுபடுத்தவும். அடுத்து, ஒரு தண்ணீருடன் உள்ள கிளாசை காட்டி அதிலும் காசு இல்லை என்பதை தெளிவு படுத்தவும்.
பின்னர், இடது உள்ளங்கையில் தண்ணீர் கிளாசை வைக்கவும். தண்ணீர் கிளாசின் மீது கைகுட்டையை போட்டு மூடவும். பார்வையாளர்களிடம், "" இப்போது கைகுட்டை எடுத்தால் தண்ணீர் கிளாசில் காசு இருக்கும் பாருங்கள்!'' என்று சொல்லி விட்டு கைகுட்டையை எடுங்கள். தண்ணீர் கிளாசை காட்டுங்கள் அதில் காசு இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து போவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் மிக தந்திரமாக செய்து பார்வையாளர்களை ஏமாற்றக்கூடிய மேஜிக் என்பதால் நீங்கள் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். மேஜிக் செய்வதற்கு முன்பு இடது கையின் நடுவிரல், மோதிர விரலுக்கு இடையில் காசு வைத்து காசின் விளிம்பு கால் பகுதி மட்டும் விரல் இடுக்கில் வைத்து மறைத்து கொள்ள வேண்டும். இப்படி மறைத்து வைக்கும் காசு புறங்கை பக்கம் தான் 90 சதவீதம் இருக்கும். உள்ளங்கை பக்கம் தெரியாது.உள்ளங்கையில் கிளாசை வைத்து, அதன் மீது கைகுட்டையை மூடிவிட்டு, விரல் இடுக்கில் இருக்கும் காசை புறங்கை பக்கத்திலிருந்து வலது கையால் தள்ளி, உள்ளங்கைக்கு கொண்டு வந்து, காசின் மீது கிளாஸ் இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும். கண்ணாடி கிளாஸ் என்பதால் அடியில் இருக்கும் காசு கண்ணாடி கிளாசில் இருப்பது போல பிம்பத்தைத் தரும். மறைத்திருக்கும் காசை, கண்ணாடி கிளாசின் அடியில் கொண்டுச் சேர்ப்பதுதான் மேஜிக் சீக்ரெட்!


54. பத்து ரூபாய் பிட்டிங் மேஜிக்!

தேவையான பொருட்கள்: பத்து ரூபாய் பணம் இரண்டு

செய்முறை: பத்து ரூபாய் பணத்தை நெடுக்கு வசத்தில் படத்தில் உள்ளது போல மடித்துக்கொள்ளவும். அதே போல் இன்னொரு பணத்தையும் நெடுக்கு வசத்தில் மடித்துகொள்ளவும்.
பிறகு, படத்தில் காட்டியவாறு முதல் பத்து ரூபாயை நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்டதை சரிபாதியாக மடிக்கவும்.
நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்ட பணத்தில், சரி பாதியாக மடிக்கப்பட்ட பணத்தை நுழைக்கவும். பிறகு, பார்வையாளர்களிடம் படத்தில் காட்டியவாறு நன்றாக இழுத்துக்காட்டவும்.
சரிபாதியாக மடிக்கப்பட்ட பணம் நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்ட பணத்தில் இருந்து வெளியே வராது.
பின்னர் நெடுக்கு வசத்தில் உள்ள பணத்தின் இரு முறையிலும் கை இருவிரலை வைத்து அடைத்துக்கொண்டு சரிபாதியாக உள்ள பணத்தை"வந்துடு வந்துடு வெளியே வந்துடு...' என்று சொல்லிவிட்டு இழுக்கவும். சரிபாதியாக மடிக்கப்பட்ட பணம் வெளியே வந்து விடும். இதைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

55. மேஜிக் எழுத்து!
தேவையான பொருட்கள்: வெள்ளை காகிதம், பேனா
செய்முறை: ஒரு அ4 காகிதத்தை படத்தில் காட்டியவாறு நான்கு பாகமாக மடித்துக்கொள்ளவும். நான்கு பாகத்திற்கு 1,2,3,4 என்று பெயரிட்டுக்கொள்ளவும்.
2 மற்றும் 3 ம் பாகத்தின் மத்தியில் மேலிருந்து கீழாக ஆ,ஈ,இ,அ என்று எழுதிக்கொள்ளவும். அடுத்து, படத்தில் காட்டியவாறு 1,2 பாகத்தின் நடுவும் 3, 4ம் பாகத்தின் நடுவும் இணையுமாறு மடிக்கவும். மடித்த பகுதியில் மேலிருந்து கீழாக அ,ஆ,இ,ஈ என்று எழுதவும். பின்னர், பார்வையாளர்கள் முன்பு 1 மற்றும் 4ம் பாகத்தை படத்தில் இருப்பது போல உள்புறமாக மடித்துக்காட்டி, அதில் வரிசை மாறி எழுதப்பட்டிருக்கும் எழுத்தைக் காட்டவும். பிறகு, "" இதில் எழுதப்பட்டிருக்கும் வரிசை மாறிய எழுத்துக்கள் இப்போது வரிசைபடி தோன்றும் பாருங்கள்!'' என்று கூறி இரண்டாக மடிக்கவும். பிறகு பிரித்துக்காட்டுங்கள். எழுத்துக்கள் வரிசைபடி இருக்கும். இதைப் பார்த்து பார்வையாளர்கள் வியப்பர்.
மேஜிக் சீக்ரெட்: 2 மற்றும் 3ம் பாகத்தை பார்வையாளர்களிடம் காட்டியிருப்பதை இரண்டாக மடிக்கும் போது மேல் பக்கம் 4ம் பாகமும் கீழ் பக்கம் 1 ம்பாகமும் இருக்கும். அதை பிரித்துக்காட்டும் போது 2,3, உள் மடித்தும் 1ம் பாகம் 4ம் பாகம் மேல் பக்கமாக விரித்துக்காட்ட வேண்டும்.
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்யும் முன் படத்தில் காட்டியவாறு நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்ட பணத்தில் மத்தியில் அரை சென்டி மீட்டர் அகலத்தில் ஜிக்ஜாக் வருமாறு மடித்து கொள்ள வேண்டும். அதை விரலால் மறைத்து கொள்ள வேண்டும். மேஜிக் செய்யும் போது, சரிபாதியாக மடிக்கப்பட்ட பணத்தை நெடுக்கு வசமாக மடிக்கப்பட்ட பணத்தில் நுழைக்கும் போது ஜிக்ஜாக்காக மடிக்கப்பட்ட பகுதியில் நுழைத்து விடவேண்டும். ஆனால் பார்ப்பதற்கு பணத்தில் முழுமையாக நுழைப்பது போலவே பாவ்லா கட்ட வேண்டும். இதில் ஜிக்ஜாக் பகுதியில் பணத்தை நுழைத்து எடுப்பது தான் சீக்ரெட்!

மேஜிக் மேஜிக்
56 . மாயமாய் வந்து போகும் ஒயர்!

தேவையான பொருட்கள்: சிறிய ஒயர் துண்டு, செல்லோ டேப்

செய்முறை: இந்த மேஜிக் செய்வது மிக சுலபம். ஆனால், பார்வையாளர்களை தந்திரமாக ஏமாற்றுவது ரொம்ப கடினம். ஆதலால் மேஜிக் சீக்ரெட்டை தந்திரமாக கையாள வேண்டும்.
பார்வையாளர்களிடம் உங்கள் வலது கை உள்ளங்கையை படத்தில் இருப்பது போல காட்டுங்கள். ""கையில் ஏதாவது இருக்கிறதா?'' என்று கேளுங்கள். பார்வையாளர்களிடமிருந்து ""இல்லை!'' என்று பதில். அடுத்து மின்னல் வேகத்தில் விரல்களை குவியுங்கள். குவித்த விரல்களுக்கு இடையில் ஒரு ஒயர் நீண்டு இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்துகொண்டிருக்கும் போது, மீண்டும் சட்டென்று குவித்த விரல்களை விரியுங்கள். இப்போது அந்த மாயமாய் மறைந்து இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியப்பின் உச்சத்துக்குப் போவார்கள்!
சீக்ரெட்:
படத்தில் இருப்பது போல வலது புறங்கை கட்டை விரல் நகப் பகுதியில் துண்டு ஒயரை செல்லோ டேப்பால் ஒட்டிக் கொள்ளவும். புறங்கை பக்கம் இருப்பதால் உள்ளங்கைப் பக்கம் தெரியாது. விரலை குவிக்கும் போது கட்டை விரலில் உள்ள ஒயர் செங்குத்தாக தெரியும். விரல்களை விரிக்கும் போது கட்டை விரலில் உள்ள ஒயர் புறங்கை பக்கம் இருப்பதால் பார்வையாளர்களுக்கு ஒயர் மாயமாய் மறைந்தது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும்.

57 . கண்ணை ஏமாற்றும் பூமாராங்!

தேவையான பொருட்கள்: அட்டை, காம்பஸ், பென்சில், கத்தரிக்கோல், கலர் ஸ்கெட்ச் பென்.
செய்முறை:
சற்று தடிமனான இரு அட்டையை எடுத்து, ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். பிறகு, காம்பஸ் உதவியுடன் பென்சிலால் ஒரு ஆர்க் வரையவும். அடுத்து, ஒரு செ.மீ கீழ் நோக்கி இன்னொரு ஆர்க் வரையவும். ஆர்க் கோடு மீது கத்தரி வைத்து நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய ஆர்க் பகுதியை தனியே எடுத்தால் அது படத்தில் காட்டியுள்ளவாறு இருக்கும். மேலே உள்ள அட்டைக்கு சிகப்பு வண்ணமும், கீழே உள்ள அட்டைக்கு மஞ்சள் வண்ணமும் பூசவும்.
வண்ணம் பூசப்பட்ட அட்டை களை படத்தில் காட்டியவாறு ஒரு டேபிளில் முதலில் சிகப்பு அட்டையும் அதன் கீழ் மஞ்சள் அட்டையை வைக்கவும். பார்வையாளர்களிடம் ""இந்த சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டையில் எது பெரியது?'' என்று கேளுங்கள். பார்வையாளர்கள் சிகப்பு அட்டைதான் பெரியது என்பர். பின்னர், மஞ்சள் அட்டைய மேலே வைத்து அதன் கீழ் சிவப்பு அட்டையை வைத்து, "" இப்போது எந்த அட்டை பெரியது?'' என்று கேளுங்கள். பார்வையாளர்களிடமிருந்து ""மஞ்சள் அட்டை'' என்று பதில் வரும். முடிவில் இரண்டு அட்டையையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து அதை பார்வையாளர்களிடம் காட்டிவிட்டு, இரண்டு ஒரே அளவு உள்ள அட்டை தான் என்று சொல்லுங்கள். பார்வையாளர்கள் தங்கள் கண்களை ஏமாற்றிய பூமாராங் அட்டையை நினைத்து ஆச்சரியப்படுவார்கள்!

சீக்ரெட்: சம அளவு உள்ள அட்டை என்ற போதிலும் ஒன்றன்கீழ் ஒன்றாக வைக்கும் போது பார்ப்பவர்கள் கண்கள் மேலே உள்ள அட்டையின் உள் வட்டத்தோடு கீழே உள்ள அட்டையின் வெளி விட்டத்தை ஒப்பீடு செய்வதால் தோன்றும் மாயபிம்பம் தான் பெரிது, சிறிது என்று சொல்ல வைக்கும் சீக்ரெட்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக