வியாழன், 13 பிப்ரவரி, 2014

யார் கிழித்த கோடுகளோ? - தேவராஜன்


யார் கிழித்த கோடுகளோ? - தேவராஜன் மானுட அறிவிற்கும் அறிவியலுக்கும் சவால் விடும் பல அதிசயங்களையும் மர்மங்களையும் இயற்கை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அந்த சவால்களைக்கண்டு மானுடம் திக்கி திணறி கொண்டுதான் இருக்கிறது இன்று வரையில்... அவற்றுள் ஒன்றுதான் நாஸ்கா கோடுகள்! நாம் சுற்றுலா செல்லும்போது ஆங்காங்கே மரங்களில், பாறைகளில், சுவர்களில் நம் பெயரையோ ஊரையோ செதுக்குவதுண்டு. சிலர் ஓவியங்கள், கவிதைகள் கூட எழுதிவைத்து ரசிப்பார்கள். இந்தப் பழக்கம் காலம் காலமாக இருந்து வந்திருக்கும் போல. நாம் சின்னதாக கிறுக்கிப் பார்க்கும் செயலை, பிரமாண்டமாக கிறுக்கினால் எப்படி இருக்கும்? பிரமாண்டமாகவே நினைத்துபாருங்கள்! அதுதான் நாஸ்கா கோடுகள்! தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் தெற்கில் அமைந்து இருக்கும் நாஸ்கா பாலைவனதிலிருந்து, லிமா, பல்பா, பம்பாஸ் சமவெளிகளுக்கிடையே 400 கி.மீ., சுமார் தெற்கு கடற்கரை நோக்கி அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான தரைக்கோடுகளுக்குப் பெயர்தான் நாஸ்கா கோடுகள்! உலகப்பரப்பில் மேற்பரப்பில் யாருக்கும் தெரியாமல் புதைந்து கிடந்த இந்தக் கோடுகளைக் கண்டுபிடித்து வியந்தது இந்த உலகம்! இந்த மகாபெரிய கோடுகளை 1994 ல் ‘உலக தொல்லியல் பாரம்பரிய தளம்’ என்று யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது. இந்த நாஸ்கா கோட்டு வடிவங்கள் சாதாரணமாக தரையில் இருந்து பார்த்தால் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாத நிலப்பரப்பாகத்தான் தெரியும். இந்த மலைத்தொடருக்கு மேலே சற்று உயரப் பறந்து வானில் இருந்து பார்க்கும் போது அதிசயமான வரிகளையும், உருவங்களையும் கொண்டதாகத் தெரிகிறது. கடல் மட்டத்தில் இருந்து 3500 மீட்டர் உயரமுள்ள இந்த மலைத் தொடரில் மிகவும் நேர்த்தியாக, துள்ளியமாக சமன் செய்யப்பட்டார் போல காட்சி தரும் இந்த நிலபரப்பு நவீன கால விமான ஓடுதளத்தைப் போன்றே காட்சி அளிக்கின்றன. இந்த நாஸ்கா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், வானம்பாடி பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் கால் கிலோ மீட்டர் நீளத்துக்கும் நேர்கோடுகள் பல கிலோ மீட்டர் நீளத்துக்கும் வரையப்பட்டுள்ளன. பலநூறு விலங்கு,பறவை, தாவர இனங்களின் உருவங்களை வெளிப்படுத்தும் இந்த நாஸ்கா தரைக்கோட்டு உருவங்களை ஒரு சாரர் இவை விவசாயிகள் உருவாகியவை என்றும், மற்றொரு தரப்பினர் இவை வேற்றுலகவாசிகளால் ஏற்படுத்தப்பட்டவை என்று கூறிவருகின்றனர். ஒரு சிலர் இதை நாஸ்கா மக்கள் தண்ணீருக்காக கடவுளிடம் வழிபாடு நடத்துவதற்காக உருவாக்கிக்கொண்ட வரைபடம் என்கிறார்கள். ஒருசிலர் இதை ஈமச்சடங்குகளுக்கான பெரும் பகுதியாக இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் இதை வானவெளி பற்றிய காலண்டர் என்று கூறுகின்றனர். மரியா ரெய்சி என்ற ஆராய்ச்சியாளர் தன் வாழ்நாள் முழுவதையும் நாஸ்கா கோடுகளை ஆராய்ச்சி செய்வதற்கே அர்ப்பணித்துள்ளார். நாஸ்கா கோடுகள் வின்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையும், சூரியன் மற்றும் சந்திரனின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் குறிப்பதாகக் கூறியுள்ளார். இவற்றில் எது உண்மை என்று இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. இருந்தும் விஞ்ஞானம் வளராத அக்காலக்கட்டத்தில் இவ்வளவு பிரமாண்டமான கோடுகளை அப்பெரும் நிலப்பரப்பில் எவ்வாறு நேர்த்தியாகவும், துல்லியமாகவும் வரையப்பட்டது? யாரால் வரையப்பட்டது? அவற்றை வரைய வேண்டிய அவசியமென்ன? இப்படி இந்த மர்மம் குறித்து பல கேள்விகள் எழுந்து, அதற்குப் பதில்தேடி நம் முன்னோர்களின் படைப்புகளை எத்தனை சூத்திரங்களைக் கொண்டு அணுகினாலும், முன்னோர்கள் போட்ட முடிச்சுகளில் உள்ள மர்மத்தையும் சிக்கலையும் இன்று வரை யாராலும்அவிழ்க்க முடிவதில்லை என்பதுதான் நிஜமாக இருக்கிறது. பாக்ஸ் செய்தி *நஸ்கா கோடுகள் மனிதர்கள் வாழாத இடமான மிகப்பெரிய நிலப்பரப்பில், பெருவெளிகளில் நேராக, நேர்த்தியாக சுமார் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வரையப்பட்டிருக்கின்றன சித்திரங்களும், கோடுகளும். *இந்தக்கோடுகள் முதன்முதலில் உலகுக்குத்தெரிய வந்தது கமெர்ஷியல் ஏர்லைன்ஸ் சேவைகள் பெரு சமவெளியின் மீது பறக்கத்தொடங்கிய 1920ம் ஆண்டில்தான். *இந்தக்கோடுகள் கி.பி.400 லிருந்து 600ம் ஆண்டுக்கு மத்தியில் வரையப்பட்டதாய் கணக்கிடப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் வசித்த நாஸ்கா நாகரிகத்தவரின் செயல் என்றும் நம்பப்படுகிறது. *******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக