வெள்ளி, 13 டிசம்பர், 2013

அட்லாண்டிஸ் எனும் மாயாலோகம்! - தேவராஜன்


இன்றைய தேதி வரை அட்லாண்டிஸ் பற்றி ஆயிரக் கணக்கில் ஆய்வுகள் , தேடல்கள், புத்தகங்கள், திரைப்படங்கள், கதைகள் என்று கொண்டே இருக்கிறது. கிரீசின் அருகில் ,ஸ்பெயினின் அருகில் , இத்தாலியின் அருகில் என்று எத்தனையோ இடங்களில் அட்லாண்டிசைக் கண்டு பிடித்து விட்டதாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இப்படி ஒரு நகரம் இந்த பூமியில் இருந்ததா, இல்லையா? இது ஒரு நல்ல எழுத்தாளனின் மிகப் பெரிய கற்பனையின் வெளிப்பாடா? போன்ற புதிர்களைச் சுமந்து கொண்டுதான் இருக்கிறது இந்த அட்லாண்டிஸ் என்னும் மாயாலோகம். அட்லாண்டிஸ் பற்றிக் கிடைத்த எழுதப்பட்ட ஆவணக் குறிப்பு என்று பார்த்தால் அது பிளாட்டோவின் தைமியஸ் மற்றும் க்ரிடியஸ் உரையாடல்கள் மட்டுமே. கி.மு 428- கி.மு 348 காலப்பகுதியில் கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவ அறிஞரான சாக்ரடீசின் மாணவன்தான்பிளேட்டோ . இவர் தான் முதன் முதலில் அட்லாண்டிஸ் பற்றிக் குறிப்பிட்டார். பிளாட்டோ எழுதிய இந்த உரையாடல் சாக்ரடிஸ்,ஹெர்மோகிரெடஸ்,தைமியஸ் மற்றும் க்ரிடியஸ்ஸுக்கு நடுவில் நடக்கிறது. சாக்ரடிஸ் சிறந்த சமூக அமைப்புகள் பற்றிப் பேசியதற்கு பதிலளிக்கும் போது, தைமியஸும், க்ரிடியஸும் அப்படிப் பட்ட சமூகத்தின் ஒரு உண்மையான கதையை சாக்ரடிசுக்கு கூற முன்வருகின்றனர். அட்லாண்டிஸ் பற்றி சொன்னதாக ப்ளாட்டோவின் உரையாடலில் சாக்ரடிஸுக்கு இந்தக் கதையைச் சொல்லும் பேர்வழி குறிக்கப்படும் தைமியஸ் நீங்கலாக இந்த உரையாடலில் குறிப்பிடப் படும் அனைவரும் புராதன கிரேக்கத்தில் இருந்ததற்கான சரித்திரக் குறிப்புக்களும் ஆவணங்களும் இருந்திருக்கின்றன என்று வரலாற்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மேலும், பல நூல்களில் இவர்களது வாழ்வும் செயல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.இதனால் இதை முழுவதும் கட்டுக்கதை என்றும் புறந்தள்ள முடியவில்லை என்று கருதுகின்றனர் சில ஆராய்சியாளர்கள். கதையில் சொல்லப்பட்டபடி ,அட்லாண்டிஸின் தலைநகர் மிகச்சிறந்த கட்டிடக்கலை மற்றும் பொறியியலுக்கு உதாரணம். பல அடுக்கு வளையமாக கட்டப்பட்ட மாளிகைகள் , பல கால்வாய்கள், அரங்கங்கள் என அனைத்தும் உண்டு அட்லாண்டிஸில் . நடுவில் உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கோயிலில் கடல் கடவுள் பொசைடான் இறக்கைகளுள்ள ஆறு குதிரைகள் கொண்ட ரதத்தைச் செலுத்துவது போன்ற பெரிய சிலை தங்கத்தில் வடிக்கப்பட்டிருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் பெண்களை முதன்மைப் படுத்திய மிகவும் முன்னேறிய சமுதாயமாக இருந்தனர். இப்படிப் போகிறது (பிளாடோவின்) வருணனை. பலர் இதனை ஒரு கட்டுக்கதை என்றும் பிளாட்டோ தன் உரையாடல்களை சுவாரசியமாக்குவதற்காக உருவகப் படுத்தியதென்று சொல்கிறார்கள். மறு தரப்போ சீரியசாக அப்படி ஒரு இடம் இருந்ததென நம்புகிறது. பிளாட்டோ சொன்ன கதை ஒரு புறம் இருக்கட்டும். இன்னொரு கதையும் இருக்கிறது. அது அட்லாண்டிசின் புராணக்கதை. அந்தப்புராண கதையின்சுருக்கம். கிரேக்கக் கடல் கடவுளான பொசைடான் ஒரு தீவில் க்ளெய்டோ என்ற அழகான ஒரு பெண்ணைப் பார்த்து காதல் கொள்கிறார். இருவருக்கும் பத்து குழந்தைகள் பிறக்கின்றன. முதல் குழந்தை பெயர் அட்லஸ். பொசைடான் ஒரு சந்தேகப் பேர்வழி. க்ளெய்டோவைக் கூட நம்பாமல் அந்த இடத்தில் யாரும் நெருங்க முடியாதபடிக்கு கடல் அகழிகள் அமைத்து ஒரு தீவு நகரமாக்கி விடுகிறார். அதுவே அட்லஸின் பெயரால் அட்லாண்டிசாக ஆகி அட்லஸ் முதல் அனைவராலும் ஆளப் பட்டது. இது கடல் கன்னிகளால் காக்கப்படும் நகரமாக இருந்தது. அங்குள்ள உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கடல் கடவுள் பொசைடான் கோயில் ஒரு உலக அதிசயம். மேகங்களே கோயிலுக்குள் உலவும் அளவு பிரம்மாண்டம். இப்படிப் போகிறது அட்லான்டிஸ் புராணக் கதை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாக நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் மீதங்களை கண்டுபிடித்துள்ளதாக சமீபத்தில் கூட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந்நகரின் சில இடிப்பாடுகளை தென் ஸ்பெயினில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும், அது ஸ்பெயினின் காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செயற்கைக்கோள் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இவ்வாராய்ச்சியை மேற்கொண்டவர் ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் . அட்லாண்டிஸ் இருந்ததற்கான சாத்தியப்பாடுகள் நிறைய இருந்தாலும் அதனை நிரூபிப்பதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் கிடைக்காதது ஒரு குறை தான். என்றாலும் அந்தக் குறைக்காக அப்படி ஒரு தேசம் இல்லையென்றே கருதுவது ஏற்புடையதாகாது என்று புவிச்சரிதவியலாளர்கள் கருதுகின்றனர். **********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக