வியாழன், 10 மே, 2012

STORY OF THIRUKKANNAPURAM BY S.DEVARAJAN

திருக்கண்ணபுரத்தின் கதை/ ச. தேவராஜன் நான் பிறந்து, வளர்ந்து, படித்து, ஆடி திரிந்து இருபதின் இளமை வரை சந்தோஷமாக கழித்தது இந்த ஊரில் தான். இருபதுக்குப் பிறகு, கொஞ்சம் பெங்களூர் நிறைய சென்னை வாசம். இப்போது காஞ்சிபுரம் வாசம். எனது வயதின் பாதி காலம் தொப்புள் கொடி உறவாய் அமைந்தது இந்த ஊர். இருபதுக்குப் பிறகு ஊரின் உறவும், வரவும், தொடர்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருந்தது. பண்டிகை நாட்கள், பிறந்த நாள் இப்படி வருகை இருந்தது ஒரு காரணமாக. தந்தை மறைவுக்குப்பிறகு(31.12.2011) திருக்கண்ணபுரம் எனக்கு ஏனோ அந்நியப்பட்டுவிட்டது. அம்மாவுக்காக வருகை இருந்தாலும், அம்மா சென்னைக்கு வந்து விட்டால் அதுவும் இருக்காதோ என்ற வாஞ்சை மனதில் சுட்டது. அந்த தாக்கம் தான் ‘திருக்கண்ணபுரத்தின் கதை’யை எழுத துõண்டியது. என் ஊரைப்பற்றி தெரிந்து கொள்ள நிறைய படித்தேன்; படித்ததை ரசித்தேன்; மகிழ்ந்தேன். இத்தனை பெருமையும் சிறப்பும் கொண்டதா? அப்பாடா வியந்தேன்! என் ஊரின் கதையை ஒரு நாள் என் மகன்(டி.சி. சிவசண்முகம்) படிக்கலாம். பாட்டன் ஊர், அப்பாவின் பிறந்த ஊர் என்று பெருமை அறியலாம் என்பதற்காகவும் இப்பதிவு. அமைவிடம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல், சன்னாநல்லுõர் அருகே நான்கு கிலோமீட்டார் தொலைவில் திருக்கண்ணபுரம் உள்ளது. வடக்கே திருமலைராயன் ஆறும், தெற்கே வெட்டாறும் ஓடிக் குளிர்விக்க இடையே கிழக்கு மேற்காக அமைந்துள்ளது இந்த ஊர். ஊர் சிறப்பு! பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் திருக்கண்ணபுரம். 108 வைணவ தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலிருஞ்சோலைமலை என்றும், திருவரங்கம் மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது. கம்பீர கோபுரம்! 95அடி உயரமும் 7 நிலைகளையும் கொண்டு கம்பீரமாய்க் காட்சி தருகிறது. ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவரை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள். சௌரிராஜப் பெருமாள்: திருக்கண்ணபுரக் கோயில் உற்சவருக்கு ‘சௌரிராஜ பெருமாள்‘ என்று பெயர். இவ்வாறு இவர் அழைக்கப்படுவதற்கான வரலாறு மிகவும் சுவையானதும், இறைவன் தீன தயாபரன் என்பதை நிரூபிப்பதாகவும் உள்ளது. ஸ்ரீசௌரி வந்த கதை... பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம்செய்ய இறையிலியாக நிலங்களை மான்யமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு அடுத்த நிலையில் மன்னர்களை மதித்து மரியாதை செய்துவந்தனர் கோயில் நிர்வாகிகள். இறைவனுக்கு அணிவித்த மாலையை மன்னனுக்களித்து மரியாதை செய்வர். கோயில் அர்ச்சகர் வழக்கம்போல் ஒரு நாள் உத்சவருக்கணிவித்த மாலையை மன்னரிடம் கொண்டுபோய்க் கொடுக்க அதில் ஒரு தலைமுடியைக் கண்டு அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்ட போது, மன்னர் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ‘தலைமுடி இறைவனுடைய முடிதான்’ என்று கூறிவிட்டார். மன்னன் இதை நம்ப மறுத்து நேராகக் கோயிலுக்குச் சென்றான். உத்சவருடைய தலையிலிருந்த நீண்ட குழற்கற்றையைக் கண்டான். அது உண்மையான முடியா என்றறிய தலையிலிருந்து ஒரு முடியை எடுத்துக் காண்பிக்குமாறு அர்ச்சகரைக் கேட்டான். அவரும் ஒரு முடியைப் பிடித்திழுக்க அந்த இடத்திலிருந்து ரத்தம் பீரிட்டுத் தெறித்தது. அஞ்சி நடுங்கிய மன்னன் தன் தவறினை உணர்ந்தான். திருக்கடவூரில் அபிராம பட்டருக்கு அமாவாசையை பௌர்ணமியாகத் திகழச் செய்த இறைவனின்அருளுக்கு ஒப்ப, இங்கும் அர்ச்சகர் இயலாமைக்கு இரக்கப்பட்டு திருமால் சௌரி முடியுடன் காட்சி தந்தார். அன்று முதல் உத்சவருக்கு தலையலங்காரம் சௌரிமுடியுடன் தான், பெயரும் சௌரிராஜப் பெருமாள் என்று வழங்கப்படலாயிற்று. நடையழகு! *இராவண வதம் முடிந்தபின் அயோத்தி திரும்பும் இராமனைப் பிரிய மனமில்லாது வருந்திய விபீஷணனுக்கு இராமபிரான் தன் நடை அழகைக்காட்டி அருள் செய்த தலம் இத்திருக்கண்ணபுரம் . இதனை நிறுவுவதுபோல் இக்கோயிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சன்னிதி உள்ளது. இராமானுஜருக்கும் தனிக்கோயில் உள்ளது. சக்கரத்தின் பெருமை! *அரக்கர் தொல்லையிலிருந்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்ட முனிவர்களுக்காக பெருமாள் தன் சக்ராயுதத்தைப் பிரயோகித்து’வீகடாக்ஷன்’ என்ற அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் வலக்கரத்தை நீட்டி சக்ராயுதத்தை வீசுவதுபோல் காட்சி தருவது மற்றொரு விசேஷம். முனையதரையன் பொங்கல் வந்த கதை... *முனையதரையன் என்ற பக்தன் ஒருவன் இரவு தான் உண்ணக் கையில் எடுத்த பொங்கலின் நறுமணத்தை வியந்து, இது இறைவன் சுவைக்க வேண்டிய பொங்கல் என்று எண்ணிய மாத்திரத்தில் மானசீகமாக அவனால் அது இறைவனுக்கு நிவேதனம் ஆயிற்று. அடுத்த நாள் காலையில் இறைவன் மேனியில் முந்தைய நாளின் மானசீகமாய் நிவேதனமான பொங்கல் நெய்யோடு வழிந்திருப்பது கண்டு மக்கள் திகைத்ததுடன் அன்று முதல் தினமும் அர்த்தசாம பூஜையின் போது இந்த பக்தன் செய்து தரும் பொங்கலையே நிவேதனம் செய்ய ஏற்பாடாயிற்று. ஆழ்வார்கள் பாடிப்பரவிய தலம் : தமிழ்க் குடும்பங்களில் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டு பாடும் தாய்மார்கள் குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டைத்தான் பாடுவார்கள் ‘மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே‘ என்று தொடங்கி 10 பாசுரம் பாடியுள்ள குலசேகர ஆழ்வார் இத்திருத்தலத்து பெருமாளைத்தான் தாலாட்டிப் பாடியுள்ளார். ‘சிலைவலவா சேவகனே‘ என்றும், ‘ஏ மருவும் சிலை வலவா‘ என்றும் ‘ஏ வரி வெஞ்சிலை வலவா‘ என்றும் இராமபிரான் வில்லாற்றலைத்தான் புகழ்ந்து பாடுகிறார். கண்ணனைக் குழந்தையாகவும் தன்னை யசோதையாகவும் பாவித்து கண்ணனை சீராட்டி, நீராட்டி தாலாட்டிப் பெரியாழ்வார் பாடும் பாசுரங்கள்தாம் பிற்காலப் பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கியத்திற்கு வித்திட்டது. பிள்ளைத்தமிழில் கூறப்படும் 10 பருவங்களில் செங்கீரைப் பருவம் தவழ்ந்துவரும் குழந்தை தலை நிமிர்த்தி முன்னும் பின்னும் ஆடும் அழகைப் பாடுவதாகும். பெரியாழ்வாரும் இத்தலத்து இறைவனை அழைத்து, ‘கண்ணபுரத்தமுதே ஆடுக செங்கீரை ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே‘ என்று பாடுகிறார். தந்தை பாடி மகிழ்ந்த அதே கண்ணபுரப் பெருமாளை மகள் கோதை நாச்சியாரும் ’நாச்சியார் திருமொழி’யில் கூடலிழைத்துப் பார்த்துப் பாடுகிறாள். தான் எண்ணிய எண்ணம் நிறைவேறுமா என்பதைக் கூடலிழைத்துப் பார்க்கும் வழக்கம் உண்டு. கோதையும் தான் கண்ணனை மணத்தல் சாத்தியமா என்றறிய ‘காட்டில்வேங்கடம் கண்ணபுரநகர் வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன் ஒட்டாரவந்து என்கைப்பற்றி தன்னோடும் கூட்டுமாகில் நீகூடிடுகூடலே‘ என்று பாடுகின்றாள். திருக்கண்ணபுரத்தைப் போற்றி அதிக எண்ணிக்கையில் பாசுரங்கள் பாடியிருப்பவர் திருமங்கை ஆழ்வார்.100க்கும் மேற்பட்ட பாசுரங்கள் இவர் பாடியவை. நம்மாழ்வாரும் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். பூலோக வைகுந்தம் ! *திருமால் இத்தலத்தில் எட்டு அக்ஷரங்களிலும் உருக்கொண்டு உறையும் தலமாதலால் ‘அக்ஷ்டாக்ஷர மகா மந்திர ஸித்தி ஷேத்திரம்‘ என்று பேசப்படுகிறது. பூலோக வைகுந்தம் என்பதால் இங்கு சொர்க்க வாசல் தனியாகக் கிடையாது. திருவிழாக்கள்: 15 கி.மீ.தூரத்திலுள்ள திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாளைத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசிமாதத்தில் பிரம்மோத்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாதப் பிறப்பு, ஏகாதசி மாதத்தில் இரண்டு நாள்களில் திருமஞ்சனமும் உத்சவர் புறப்பாடும் உண்டு. இத்தலத்து அமாவாசை உத்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று. விபீஷணனுக்கு பெருமாள் தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தது ஒரு அமாவாசை நாளில் என்பதை நினைவுகூறும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் திருமஞ்சனம் செய்து சௌரிமுடி அணிவித்து உற்சவர் புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. துயர் துடைக்கும் ஊர்! ‘பாதம்நாளும் பணியத்தணியும்பிணி ஏதம்சாரா எனக்கேலல் இனியென்குறை? வேதநாவர்விரும்பும் திருக்கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லலில்லையே “இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில் சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே” திருவாய்மொழி 9-10-10 (3665) திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே எனது துயர்கள் எல்லாம் பாழடைந்துவிட்டன. **************************************** தமிழ் வருடப்பிறப்பு திருமஞ்சனம் ஒவ்வொரு வருடமும் தமிழ் வருடப்பிறப்பு அன்று மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். சரியாய் நண்பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த உபயம் வம்சாவளியாக தொடர்ந்து முதலியார் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். என் தந்தை இரா. சண்முக முதலியார் மற்றும் என் தந்தையின் பங்காளி பஞ்சு முதலியார் இரு குடும்பமும் ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டு என சுழற்சி முறையில் உபயம் செய்து வருகின்றனர். என் பெரியப்பா பஞ்சு முதலியார் மறைவுக்குப் பிறகு அவரது மகன் மணி என்கிற சுப்பபிரமணியன் செய்து வருகிறார். என் தந்தை இரா. சண்முக முதலியார் மறைவுக்குப்பிறகு அவரது மகன்களாகிய ச. ராமகிருஷ்ணன், ச. முத்துராமன், ச. லட்சுமணன், ச. தேவராஜன் (நான்), ச. சந்தானகிருஷ்ணன் செய்து வருகிறார்கள். *********************************************** புராணமும் திருக்கண்ணபுரமும் பாத்ம புராணத்தின் ஐந்தாவது காண்டத்தில் 96 முதல் 111 வரை உள்ள அத்தியாயங்களில் இத்தலம் விதந்து விதந்து பேசப்படுகிறது. விரைந்துமோட்சம் அளிக்க வல்லவர் யாரென்று நைமி சாரண்ய முனிவர்கள் ஒருங்கே திரண்டு ஸு த முனிவரைக் கேட்க, அவர் இத்தலத்துப் பெருமையைப் பரக்கப் பேசுகிறார். வஸு என்னும் ஒரு மஹராஜன் வானத்தில் பறக்கும் சக்தி பெற்றிருந்ததால், அவன் உபரிசரவசு என்றழைக்கப்பட்டான். ஒரு காலத்தில் தேவர்கட்கும் அசுரர்கட்கும் நடந்த யுத்தத்தில் தோற்றுப்போன தேவர்கள் உபரிசரவசுவின் உதவியை நாட இம்மன்னின் உதவியால் தேவர்கள் வெற்றிபெற்றனர். போர் முடிந்து திரும்பிய வசு தாகவிடாய் தீர்க்க கிருஷ்ணாரண்யத்தில் இறங்க அங்கு (“ஒரு விரலில் தம் உலர்ந்த சரீரத்தை உலர்த்துமாப் போல்”) மெலிந்த தேகத்தினரான முனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்க, அவர்களைச் சாமைக் கதிர்கள் என்று எண்ணிய உபரிசரவசுவின் வீரர்கள் தம் வாளால் கொய்ய, முனிவர்களின் அபயக் குரல் கேட்ட எம்பெருமான் 16வயது பாலகனாய் வந்து படையைத் துவம்சம் செய்ய அசுரர்களை வென்ற நமக்கு இச்சிறுவன் ஒரு பொருட்டோ என்றெண்ணிய உபரிசரவசு பல அஸ்திரங்களையும் ஏவி அதிர்ந்து போக இறுதியில் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து நாராயணஸ்திரத்தை ஏவ அது சுழன்று சுழன்று அப்பாலகனின் காலடியில் சரணடைய தன்னோடு போரிட்டவன் மஹாவிஷ்ணுவே என்றறிந்த வஸு மன்னன், பாலகனின் பாதத்தில் வீழ்ந்து பாவமன்னிப்பு வேண்டினான். என் பக்தர்களான மஹரிஷிகள் உலர்ந்த மாமிசத்தை உடையவர்களாய் தபஸ் பண்ணி இந்த விமானத்தைச் சேவிப்பதால் இதற்கு உத்பலவதாக விமானம் என்றும் இங்கு ஸாநித்யம் கொண்ட எனக்கு சௌரி என்றும் திருப்பெயர். உமது தவறை மன்னித்தோம். நீ வேண்டிய வரம்கேள் என்று பெருமாள் அருள, தன் மகளை திருமணம் புரிய வேண்டும் என்று மன்னன் கேட்க, மாயவனும் அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு. ************************************** மூலவர் நீலமேகப் பெருமாள், சௌரிராஜன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். உற்சவர் சௌரி ராஜாப் பெருமாள் தாயார் கண்ணபுர நாயகி தீர்த்தம் நித்ய புஷ்கரிணி விமானம் உத்பாலவதாக விமானம் காட்சி கண்டவர்கள் கன்வ முனிவர், கருடன், தண்டக மஹரிஷி உபரிசரவசு. ************************************ சிறப்புக்கள் இத்தலம் எண்ணற்ற சிறப்புக்களைக் கொண்டது. விமான தரிசனம் செய்ய முடியாத கோயில்! விமான தரிசனம் சுவாமியை தரிசனம் செய்த பலன்களைத் தரக்கூடியது. கோயில்களில் கருவறைக்கு மேல் இருக்கும் விமானத்தை சுவாமியின் வடிவமாகவே கருதுவர். ஆனால் திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயிலில் கருவறைக்கு மேல் உள்ள விமானத்தை தரிசனம் செய்ய முடியாது. உத்பலாவதகம் எனப்படும் இவ்விமானத்தில் மகரிஷிகள் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, இவ்விமானத்தை தரிசனம் செய்ய முடியாத வகையில் சுற்றிலும் உயரமான சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. இத்தலம் திவ்யதேசங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது விபீஷணர் சன்னதி! ருவாரூர் மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயில் ராமபக்தரான விபீஷணருக்கு தனிசன்னதி உள்ளது. மனித அவதாரமாக வந்த மகாவிஷ்ணுவிற்கு சேவை செய்த விபீஷணர், அவரது தெய்வ நடையைக் காண வேண்டுமென அவரிடம் வேண்டினார். மகாவிஷ்ணுவும் அவ்வாறே நடந்து காட்டினார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் விபீஷணருக்கு, விஷ்ணு நடையழகு காட்டும் நிகழ்ச்சி ஒவ்வொரு அமாவாசையன்றும் நடக்கிறது. சுவாமியின் நடையழகை தரிசிப்போரின் பாவம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 1. முக்தியளிக்கும் ஸ்தலங்களான வேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம், தோத்தாத்ரி, ஸாளக்கிராமம், பத்ரிகாச்ரமம். நைமிசாரண்யம் இவற்றில் ஒவ்வொன்றிலும் அஷ்டாச்சரத்தின் ஒவ்வோர் எழுத்தாக இயங்கும் பெருமாள் இவ்விடத்து திருவஷ்டாச்சர எழுத்துகளின் மொத்த சொரூபமாக இலங்குகிறார். இதைப்பற்றி பாத்ம புராணத்தில் 5 ஆம் காண்டத்தில் 110வது அத்தியாயத்தில் 44, 45, 46 ஆம் சுலோகங்களில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிஞ்ச முஷ்ணம் தோதபர்வம் ஸாளக்கிராம புஷ்கரஞ்ச நரநாரயணச்ரமம் நைமிசம் சேதிமே ஸ்தாநா ந்யஷ்டௌ முக்தி பரதாநிவ ரதேஷ் வஷ்டாசஷரை கை வர்ணுமுர்திர், வஸாம்யகம் திஷ்டாமி க்ருஷ்ண சேஷத்ர புண்ய ஸ்பதக யோகத அஸ்டாச் சரஸ்யை மந்தரஸ்ய சர்வாட்ச்சர மயந்த்ஸதா. 2. சௌரி, சௌரி என்னும் சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதாரம் எடுப்பவன் என்பது பொருள். 75 சதுர்யுகங்களைக் கொண்டது. இந்த ஸ்தலம் என்றும் கூறுவர். 3. இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார். வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் “ஸ்திதி காத்தருளும்” நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரை புஷ்ப மத்தியில் ச்ருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும், அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் (3 3/4 மணி நேரம்) ஸம்ஹாரம் செய்யும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு. 4. நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காணவேண்டும் என்று வீபிஷணர் கேட்க, கண்ணபுரத்தில் காட்டுவோம் வாவென்ன வீடணணுக்கு நடையழகு காட்டியதாக ஐதீகம். இன்றும் அமாவாசை தோறும் இந்நிகழ்சியை சித்திரிக்கும் திருவிழா இங்குண்டு. 5. தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம். இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாச்சர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம். 6. கிருஷ்ணாரண்யம் என்றும், தண்டகாரண்யம் என்றும் இத்தலம் வழங்கப்படும். 7. இத்தலத்திற்கு எதிரில் இரண்டு யோஜனை தொலைவில் (ஒரு யோஜனை என்பது 10 மைல்) ஒரு மலை கடலுள் அமிழ்ந்துள்ளது. கருடனின் வடிவங்கொண்ட இம்மலை கருடபர்வதமென்றே அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் இறக்கைகளை வெட்ட இம்மலை மட்டும் கடலுக்குள் மூழ்கி இந்திரனுக்குத் தப்பித்து விட்டதாம். இவ்விதம் தப்பித்ததால் இறுமாப்புக் கொண்ட கருடன் இறுமாப்போடு இங்குமங்கும் பறக்க, இத்தலத்தின் விமானத்தின் மீது பறக்க, இத்தலத்து பாலகர்கள் இவன் நிழலைப் பற்றியிழுக்க கீழே விழுந்த கருடன் தன் தவறு உணர்ந்து கருட பர்வதத்தின் மீதமர்ந்து இப்பெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி மோச்சம் பெற்றான், என்றும் இத்தலத்தைப் பற்றி புராணங்கள் கூறும். 8. சித்த சரவசு என்னும் பாண்டிய மன்னன் மணலூரைத் தலநகராகக் கொண்டு ஆண்டான். அவன் தனது மகள் உத்தமையுடன் தாமிரபரணியில் நீராட இறங்கும் தருவாயில் திடீரென்று வெள்ளம் உயர்ந்து உடனே வடிந்து காணாமல் போய்விட்டது. மன்னனைக் காணாது அவன் மனைவி மக்களும், மந்திரி பிரதானிகளுந் திகைத்து நிற்க, பாண்டியனின் அவைக்கு வந்த சகல லோக சஞ்சாரியான அகத்தியரின் சீடர், மந்திரி பிரதானிகளை நோக்கி, மன்னனும் அவன் மகள் உத்தமையும் பிரம்ம லோகத்தில் இருக்கிறார்களென்று பின்வரும் நிகழ்வைச் சொன்னார். கங்கை முதலான சகல தீர்த்தங்களும், தம்மிடம் பல தரப்பட்ட மக்களும் நீராடி தமது புண்ணியங் குறைந்து பாவம் பெருக்கெடுத்துவிட்டதெனவும், இம் மாசினைப் போக்க யாதாயினுமோர் உபாயங்கூறு மென்றும் பிரம்மாவைக் கேட்க, சகல பாவங்களையும் போக்கும் பெருமாள் எழுந்தருளியுள்ள கண்ணபுரத்தில் உள்ள நித்ய புஷ்கரணியில் நீராடி அப்பெருமானைத் துதித்தால் எல்லாப் பாவங்களும் உடனே தீருமென்று பிரம்மா உரைக்க, சகல தீர்த்தங்களும், இப்புஷ்கரணியில் புகுந்தன. அப்போது தாமிரபரணி தீர்த்தமும் இந்த புஷ்கரணியில் புக அதனால் பூலோகத்தை அடைந்த பாண்டியனும் அவன் மகளும் இப்பெருமானை வழிபாடு செய்து நிற்க, இவ்வரலாறு உணர்ந்த சோழன், பாண்டியனை எதிர் கொண்டழைத்து தன் அரண்மனையில் விருந்தினனாய்த் தங்க வைத்து இறுதியில் பாண்டியன் மகள் உத்தமையை சோழராஜனின் மகன் சுசாங்கனுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் வரலாறுண்டு. பாண்டி நாட்டின் வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நிகழ்ச்சி ஒரு ஆய்வுக்குரிய விஷயமாகும். 9. வசு என்னும் மன்னன் (உபரிசரவஸு ) விஸ்வகர்மாவைக் கொண்டு இக்கோயிலை கட்டுவித்தான். அவன் புத்திரப் பேறு இன்மையால் இத்தலத்தில் அசுவமேதயாகம் செய்யயாக குண்டலியிலிருந்து தோன்றிய ஒரு புருஷன் இரண்டு செங்கழு நீர் மலர்களைத் தர அவற்றை முகர்ந்த வசுவன் மனைவி சுந்தரி அழகிய பெண்மகவைப் பெற்று பத்மினி (பதுமினி) என்று பெயரிட்டழைக்க, அப்பெண்தான் சௌரிராஜனையே மணவாளனாக ஏற்க வேண்டுமென்று, தவமியற்ற பெருமாளும் அவ்விதமே செய்து பத்மினியைத் தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார் என்பது பாத்ம புராணம் செப்பும் செய்தியாகும். 11. இவ்வூரில் வாழ்ந்த “முனைய தரையர்” என்பவர், பெருமாளுக்கு வேண்டிய திருப்பணிகளை செய்து உண்மை பக்தராயிலங்கி வந்தார். அவர் பெருமாளுக்கு திருவாராதனம் செய்யாமல் ஒரு நாளும் உண்பதில்லை. அவ்வாறிருக்கையில் ஒரு நாள் வெளியூருக்குச் சென்று விட்டு அர்த்த சாமத்தில் திரும்ப, அவர் மனைவி ஆக்கி வைத்த பொங்கலை மானஸிகமாக இறைவனுக்குப் படைக்க, மறு நாள் காலை கோவில் திறக்கும் போது பொங்கல் மணம் எங்கும் வீச, தம் அடியார் பொருட்டு பகவான் அப்பொங்கலை உகந்து ஏற்றுக் கொண்டார் என்றும் முனியோதரம் பொங்கல் என்றே பெயர் கொடுத்து, இன்றும் அர்த்த சாமத்தில் இப்பெருமானுக்கு முனியோதரம் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12. இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்தைப் போன்று மதில்கள் இருந்தன என்றும் சோழ மன்னன் ஒருவன் இம்மதில்களை இடித்து கருங்கற்களை அருகிருந்த இன்னொரு கோயிலுக்கு எடுத்துச் சென்றான் எனவும். இது கண்டு மனம் வருந்திய இப்பெருமானின் பரம பக்தர் அறையர் என்பர் “பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று தம் கையில் உள்ள தாளத்தை பெருமானின் மீது விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை யேவி, மன்னனைக் கொன்றார். இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டு புண்ணான “நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான். 13. விருத்திரன் என்னும் அரக்கன் தேவலோகத்தையழிக்க அவனைக் கொன்று இந்திரனுக்கு மீண்டும் இந்திர போகத்தை இப்பெருமாள் அளித்தார் என்றும் புராணம் கூறும். 14. இப்பெருமாளைப் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்களிலும், திருமங்கையாழ்வார் 100 பாசுரங்களிலும், குலசேகர ஆழ்வார் 10 பாசுரங்களிலும், ஆண்டாள் ஒரு பாசுரத்தாலும், பெரியாழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். 15. 108 திவ்ய தேசங்களில் “கீழைவீடு” என்று குறிக்கப்படுவது இத்தலம்தான். 16. இங்கே ஸ்ரீமணவாள மாமுனிகள் ஓராண்டு காலம் எழுந்தருளியிருந்து மங்களாசாசனம் செய்தருளினார். ****************************************** ஆண்டாளும் திருக்கண்ணபுரமும் நோய் தீர மருந்து... செங்கமலக்காவிலுள்ள சீராரிளங்கோதை அங்கதனை நோக்கி அடி வணங்கி தெண்டனிட்டு என்னுள்ளம் நோய்தீர மருந்துண்டோ சொல்தோழீ என்னஉண்டுண்டு ஆய்ச்சியரே ஒரு மருந்து சொல்கிறேன் கேள் தென்னன்குறுங்குடி திருமாலிருஞ்சோலை யென்னும்சுக்கைத்திகழத்தட்டி ஸ்ரீசைலேச பாத்திரத்தில் சேர்த்து வஞ்சி நகரமென்னும் இஞ்சியை நறுக்கி மண்டங்குடி என்னும் வஸ்திரத்தில் வடிகட்டி பிருந்தாவனமென்னும் அடுப்பை வைத்து திருவேங்கடமென்னும் விறகை முறித்துவைத்துஓம் நம: என்னும் உமியைத்தூவி திருநீர்மலையென்னும் நெருப்பை மூட்டிதிருமாமணிக்கூடத்தில் இறக்கி வைத்து திருவாய்மொழி என்னும் தேனைக்கலந்துஅமலனாதிபிரான் என்று அழுத்தி பிசைந்து கண்ணபுரம் என்று கலக்கி எடுத்துச் சாப்பிட்டால் இந்நோய் தீருமம்மா ஆண்டாள் சொல்வது இது நல்ல மருந்து தோழீ : இதை எங்கிருந்து நீ கொண்டு வந்தாய்? இது ஊரில் இல்லாத மருந்து உல்கோர் அறியாத மருந்து ஆழ்வார்களும் ஆசார்யர்களும் விரும்பும் மருந்து இது பற்றற்ற ஞானியர் பருகும் மருந்து பாகவதோத்தமர்கட்குகந்த மருந்து நாராயணனே நமக்கே பறைதருவானென்று பாடிப்பறைகொள்ளும் மருந்து போய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில்தூசாகும் மருந்து செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமாலால்எங்கும் திருவருள் பெற்று இன்புறும் மருந்து எருதுக்கொடியானும் பிரமனும் இந்திரனும் மற்றும் யாரும் அறியாத மருந்து நோய் மூப்பு ,பிறப்பிறப்பு பிணி வீயுமாறு செய்யும் மருந்து கொண்டபெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை என்பவர்கள் கருதும் மருந்து ஊரிலேன்காணியில்லை உறவு மற்றொருவரில்லை பாரில் நின் பாத மூலம் பற்றினேன் என்பவர்கள்பகரும் மருந்து அணியனார்செம்பொன் ஆய அறுவரை அனைய கோயில் மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கும் மருந்து தாயே தந்தையென்றும் தாரமே கிளையென்றும்நோயில்படவொட்டாத மருந்துஇம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் சேமம் இன்னோய்க்கும் ஈதே மருந்துஉன்னுள்ளம் நோய் தீர்வதற்குஇதுவேஉகந்த மருந்தம்மா ** ********************************** * காளமேக புலவரும் திருக்கண்ணபுரமும் கடவுளிடமே இந்தக் கவிதை விளையாட்டை நிகழ்த்தியவன் அவன். ஒருமுறை அவன் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கனமழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தான். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவன் தீவிர சிவபக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளானே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், ‘எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்‘ என்றனர். காளமேகம் பார்த்தான். ‘சரி, உங்கள் பெருமாளைத்தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ...‘ என்று சொல்லி ‘கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்‘ என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவனை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, ‘என்ன சொன்னேன்.? என் கடவுப்ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: ‘கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்‘ என்று சொல்லி நிறுத்தினான். வைணவர்கள் திகைத்து ‘அதெப்படி?‘ என்றார்கள். ‘ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொளலையாதே‘ என்று புதிரை விடுவித்தான். ’சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?’ என்று விளக்கம் சொன்னான். கன்னபுர மாலே .....கடவுளிலும் நீ அதிகம் உன்னை விட நான் .....அதிகம்- ஒன்று கேள் உன் பிறப்போ பத்தாம் .....உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை என் பிறப்போ .....எண்ணத் தொலயாதே. கண்ணபு கோயில் கதவடைத்து... கண்ணபுரம் கோயில் கதவுஅடைத்துத் தாழ் போட்டார் மண்ணை உண்டார் வெண்ணெய்உண்ட மாயனார் என்னும் சிரக்கப் புரைஏந்திச் செங்காட்டில் ஈசர் இரக்கப் புறப்பட்டார் என்று. திருக்கண்ணபுரம் சவுரி நாராயணப் பெருமாள் பிறந்த நாள் இதுவாம் எனப் பாடியது: உத்திரத்துக்கு ஓர்நாள் உரோகணிக்குப் பத்தாம்நாள் சித்திரைக்கு நேரே சிறந்தநாள் - எத்திசையும் கார்ஆரும் பூஞ்சோலைக் கன்னபுரம் வாழ்சவுரி நார யணன்பிறந்த நாள். ****************************************** எழுத்தாளர் சாண்டில்யனும் திருகண்ணபுரமும் பெரும் புகழ் பெற்ற சரித்திர நாவலாசிரியர் திருக்கண்ணபுரத்தில் தமிழ் இலக்கிய, இலக்கணம் படித்துள்ளார். சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன. பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் < நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் < உள்ள பச்சையப்பா < மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி < செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் <தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் <இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் <உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார். தொழில் வாழ்க்கை கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி <நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் <எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் <வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக