வியாழன், 10 ஜூலை, 2014

மறுபிறப்பு எடுக்கும் மம்மோத் யானை! - தேவராஜன்.


மறுபிறப்பு எடுக்கும் மம்மோத் யானை! - தேவராஜன். பல மில்லியன்கள் ஆண்டுகளில் இருந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஐரோப்பா எங்கும் ஐஸ் பரவியிருந்தது. கண் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைப்போர்வையாக ஐஸ் சூழ்ந்திருக்கும். மனித நாகரீகக் காலப்பிரிவுகளில் இந்தக் காலக் கட்டத்தை ‘ஐஸ் காலம்‘ என்று அழைப்பார்கள். இக்காலத்திலிருந்து பத்தாயிரம் ஆண்டு அளவுகளில் தான், இந்த ஐஸ் கட்டிகள் படிப்படியாகக் கரைந்தன. துருவம் வரை சென்றன. அங்கே சங்கமம் ஆகியது. இந்த ஐஸ் காலத்தில் தான்‘மம்மோத்’ என்னும் யானை போன்ற மிகப் பெரிய விலங்குகள் வாழ்ந்தன. இப்போது காணப்படும் யானைகள் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. இப்போது வாழ்கின்றன யானைகளின் முப்பாட்டன் தான் இந்த மம்மோத். இந்த இன விலங்கு உலகமெங்கும் பரவி வாழ்ந்து வந்தன. இந்த மம்மோத், தற்கால யானைகளை விட மிகப்பெரியவை. உடலெங்கும் நீண்ட முடிகளுடனும், நீண்ட தந்தங்களுடனும் காணப்பட்டவை. யானை போன்ற தோற்றம் உள்ள இந்த மம்மோத்கள் 16 அடி உயரம் வரை வளரும். இதன் தந்தங்கள் நம் நாட்டு யானயைவிட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும். சுமார் 8 -12 டன் எடை கொண்டதாக இருக்கும். இந்த மம்மோத்களும் யானை போன்றே சுத்த சைவம். இலை தழைகளை தின்று வாழும். இதன் உடல் முழுவதும் ரோமங்கள் அடர்ந்து காணப்படும். மம்மோத், ஐஸ் உள்ள குளிர்ப் பிரதேசங்களிலேயே வாழக்கூடியவை. இங்கிலாந்தில் கூட இவை வாழ்ந்திருக்கின்றன. இன்றைய அலாஸ்கா, ரஷ்யாவின் சைபீரிய தூந்திரப் பிரதேசங்களில் அவை அதிகம் வாழ்ந்திருக்கின்றன என்று கணிக்கப் படுகிறது. இங்கிலாந்தில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவை வாழ்ந்திருக்கின்றன. காலப்போக்கில் மம்மோத் யானையினம் மனிதர்களின் வேட்டையினாலும், ஐஸ் கட்டிகள் கரைந்து இல்லாமல் போனதாலும், மொத்தமாகப் பூமியிலிருந்து அழிந்து போயின. இந்த மம்மோத்களை, ஆதி கால மனிதர்கள் அதன் ரோமத்திற்காகவும், உணவிற்காகவும் வேட்டையாடினர். உலகம் தன் தட்ப வெப்ப நிலையிலில் மாறுதல் அடைந்ததால் அவற்றிற்கான உணவுத் தாவரங்கள் அழிந்து போய் அதனால் அந்த இனம் அழிந்திருக்கலாம் என்பது ஒரு ஊகம். மேலும் பனி உருகத்தொடங்கிய காலத்தில் அவற்றிற்கான வாழ்விடப் பற்றாக்குறை காரணமாகவும் அவை இறந்திருக்கலாம். சிலவேளை மாறும் தட்ப வெப்ப நிலைக்கேற்ப பரிணாம வளர்ச்சி அடைந்து தன்னைத் தகவமைவு செய்து கொள்ளாததினாலும் அவை இறந்திருக்கலாம் என்று எண்ணப் படுகிறது. இவை அழிந்த காலத்திலிருந்து, மெல்ல மெல்லப் பனிப்பிரதேசங்கள் மரம் செடிகள் முளைக்கும் பிரதேசங்களாக மாறின. மறுபிறப்பெடுக்கும் மம்மோத் ரஷியாவில், யமல் பெனின்சுலா என்ற இடத்தில் 2007ம் ஆண்டு ஒரு மாத குட்டி மம்மோத் கண்டெடுக்கப்பட்டது! இதன் பெயர் லியுபா. இந்த மம்மோத் குட்டி ஹாங்காங்கில் ‘ஐஎப்ஸி மால்’ என்ற இடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது . இந்த குட்டி யானை இறக்கும் போது இதன் வயது ஒரு மாதம். தன் தாயிடம் குடித்த பால் கூட வயிற்றில் உறைந்த நிலையில் காணப்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் மற்ற உள் உறுப்புக்கள் கூட அப்படியே சேதம் அடையாமல் இருக்கிறதாம். பனியில் உறைந்த நிலையில் இந்த உடல் 42 ஆயிரம் ஆண்டுகள் கெடாமல் இருந்து வந்துள்ளது என்பது ஆச்சரியம்! லியுபா மூலம் ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர் அகிரா ஐரிடானி தலைமையில் மம்மோத் யானைகளை உயிர்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆராய்ச்சியாளர் அகிரா தலைமையிலான குழு, இந்த குட்டி யானையின் திசுக்களிலிருந்து அதன் டி.என்.ஏ.களை பிரித்து, அந்த டி.என்.ஏகளை பெண் ஆப்பிரிக்கா யானையின் கருமுட்டையில் செலுத்தி, அது சரியாக வளர்ச்சியடைவதன் மூலம் மம்மோத் யானைகள் பூமியில் மீண்டும் உயிருடன் வலம்வரலாம் என்கிறார்கள். விஞ்ஞானிகள் இந்த முயற்சியில் வெற்றிபெறும் பட்சத்தில் இந்த மம்மோத் இனம் மீண்டும் புவியில் மறுபிறப்பு எடுக்கலாம் யார் கண்டார்கள்! பாக்ஸ் *10000 பி.சி. திரைப்படத்தில் நவீன கணினித் தொழில்நுட்ப உதவியுடன் மிக தத்ரூபமாக மம்மோத் யானைகளை வடிவமைத்திருப்பார்கள். அவற்றைப் பிரமிடுகள் கட்ட பயன்படுத்துவதாகக் காட்டியிருப்பார்கள். * சைபீரிய நாட்டில் மம்மோத்தின் எலும்பு ஒன்று பனிக்கட்டிகளுக்கு அடியில் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது. இதனை ஆராய்ச்சி செய்த ரஷ்ய மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள், இதன் எலும்பில் இருந்து எடுக்கப்படும் டிஎன்ஏவை யானையின் கருமுட்டையில் செலுத்தி மீண்டும் இந்த மம்மோத் இனத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக