புதன், 25 ஜூன், 2014

புராண விமானங்களின் மர்மங்கள்! -தேவராஜன்


புராண விமானங்களின் மர்மங்கள்! -தேவராஜன். ************************************************************************************************************************************************************************ பழங்கால இந்தியாவில் விமானங்களை உருவாக்குவதற்கான அறிவு இருந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். புறநானூறு,மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், பெருங்கதை போன்றவற்றில் வானவூர்தி பற்றிய தகவல் காணப்படுகிறது. புறநானூற்றில் ‘வலவன் ஏவா வான ஊர்தி ’ என்ற வரி, விமானத்தை ஓட்டுபவர் இல்லா வானவூர்தியைக் கொண்டிருந்தான் என்று கூறுகின்றது. சீவகசிந்தாமணியில் வரும் மயில்பொறி வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அம்மயிற் பொறி வானமேகங்களிடையே பறக்கவோ தரையில் இறக்க முடியும் என்ற செய்தி இருக்கிறது. இராமாயணத்தில் இராவணன் புஷ்பக விமானத்தில் பறந்தான். அதை மயன் என்பவன் உருவாக்கினான். குபேரன் மன்னனுக்கே இப்புஷ்பக விமானம் சொந்தமானது. இதை இராவணன் கைப்பற்றினான் என்ற தகவல் இருக்கிறது. இது போல புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விமானங்கள் பற்றிய தகவல்களை விரிவாக சொல்லும் ஒரு புத்தகம் உண்டு. அதன் பெயöர் வைமானிக சாஸ்த்ரம். இது மகர்ஷி பாரத்வாஜரால் செய்யப்பட்டது. யந்த்ர சர்வஸ்வம் என்ற மூல புத்தகத்தின் ஒரு பகுதியே இந்த வைமானிக சாஸ்த்ரம். இந்த புத்தகம், யந்திரங்கள் என்ற கருவிகள் பற்றிச் சொல்வதாகச் சொல்லப்படுகிறது. பழங்காலத்தில் மனிதனால் இயக்கப்படும் கருவிகளே யந்திரங்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. அப்படியான யந்திரங்களைப் பற்றிச் சொல்கையில், விமானங்களைப் பற்றியும் இப்புத்தகம் சொல்வதாகக் கருதப்படுகிறது. வைமானிக சாஸ்த்ரம் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் விமானம் என்ற வார்த்தைக்குப் பொருள் சொல்லப்படுகிறது. “தரைமேலும் கடலின்மேலும் தனது சொந்த சக்தியினால் பறவையைப்போல் காற்றில் சீறிப்பாயும் ஒன்றே விமானம் எனப்படுகிறது”. “விமான சாஸ்திரத்தை நன்கு தெரிந்தவர்கள், காற்றில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும் ஒரு பொருளையே விமானம் என்று அழைக்கிறார்கள்” “காற்றில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கும், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கும், ஒரு உலகத்தில் இருந்து மற்றொரு உலகத்துக்கும் செல்லும் திறன் படைத்த ஒன்றையே விமானம் என்று அழைக்கிறார்கள்” என்று மூன்று விளக்கங்களால் விமானம் என்ற பொருளை விளக்குகிறார். விமானத்தை செலுத்தக்கூடிய நபர் எப்படி இருக்கவேண்டும், எந்த உடை அணிந்திருக்கவேண்டும், விமானத்தைப் பற்றி எந்தவிதமான தகவல்கள் அவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆகிய விஷயங்களை விளக்குகிறது இப்புத்தகம். ஒரு விமானி உண்ணக்கூடிய உணவு, எந்தெந்த நேரங்களில் விமானி உண்ணவேண்டும் என்பதும் சொல்லப்படுகிறது. விமானத்தின் அங்கமாக இருக்கும் பல உலோக வகைகளையும், அந்த உலோகங்களும் கனிமங்களும் பூமியில் எங்கு கிடைக்கும் என்றும் விளக்கம் தருகிறது. மூன்றாவது அத்தியாயத்தில், ஒரு விமானத்தில் எங்கெல்லாம் கண்ணாடிகள் இருக்கவேண்டும் என்பது சொல்லப்படுகிறது. நான்காவது அத்தியாயத்தில், விமானத்திற்கு எப்படிப் பறப்பதற்கான சக்தி கிடைக்கிறது என்பது சொல்லப்படுகிறது. அச்சக்திகளை உருவாக்கத் தேவையான கருவிகளும் விவரிக்கப்படுகின்றன. ஐந்தாவது அத்தியாயத்தில் இந்தக் கருவிகளை இயக்கும் சூத்திரங்கள் உள்ளன. ஆறாவது அத்தியாயத்தில், பலவகையான விமானங்களைப் பற்றி இருக்கிறது. இப்படியாக அந்தப் புத்தகம் முடிகிறது. இந்தப் புத்தகம் சொல்லும் விமானம் பற்றிய செய்திகள் எல்லாம் உண்மையா பொய்யா என்பது மர்மங்களாகவே இருக்கிறது. பாக்ஸ் செய்தி சக்தி யுகம் : வானத்திலிருந்தே எரிபொருளை சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்த விமானம். பூதவாஹா : முன்னும் பின்னும் சமவேகத்தில் பறக்கும் விமானம். தூமாயனா : எரிக்கப்பட்ட எரிபொருளையே தாமே புதிய எரிபொருளாகக் கொண்டு இயக்கக் கூடிய விமானம். கிதோகமா : மரங்களை எரித்துப் பெரும் எண்ணையில் இயங்கக் கூடிய விமானம். ஹம் சுவாகா : சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம். தாரமுஹா : எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கக் கூடிய விமானம். மாணிவஹா : செயற்கை ரசாயன உப்புகளாலும் செல்லக்கூடிய விமானம். மாராதசாஹா : காற்றை உறிஞ்சி மின்சார சக்தியை எடுத்து இயங்கும் விமானம். மற்றும் ஷக்டிங்கர்ப்பம், விக்யுதம், துருபதம், குண்டலிகம் போன்ற விமானங்கள் இருந்ததாகவும் பரத்வாஜர் கூறியுள்ளார். *சுப்பராய சாஸ்திரி என்பவர், 1914ல் தனது நினைவில் இருந்து இந்த சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொன்னதாகவும், அவற்றைப் பிரதி எடுத்து, 20 ஆண்டுகள் மொழிபெயர்க்கப்பட்டு அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1973ல் இப்புத்தகம் உருவாக்கப்பட்டதாக இதனைத் தொகுத்த எ.கீ ஜோஸ்யர் என்பவர் புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக