சனி, 19 ஏப்ரல், 2014

பூமியை பயமுறுத்தும் விண்கற்கள்! - &தேவராஜன்.


பூமியை பயமுறுத்தும் விண்கற்கள்! - &தேவராஜன். *************************************************************************************************************************** இந்தப் பூமியை அவ்வப்போது வந்துஅச்சுறுத்தும் எதிரிகளில் ஒன்று விண்கற்கள். இந்த விண்கற்கள் சில, பூமியை பயமுறுத்திய சம்பவங்கள் சில உண்டு. அந்த சம்பவங்கள் இதோ! ரஷ்யாவில் யுரல் மலைப் பகுதியில் 2013 ம் ஆண்டு பிப்ரவரி 15 தேதி சக்தி வாய்ந்த விண்கல் ஒன்று விழுந்தது. சுமார் 55 அடி அகலமும் 10,000 டன் எடையும் கொண்டிருந்த இந்த விண்கல் மணிக்கு 44,000 மைல்கள் வேகத்தில் பூமியை நோக்கி வந்துள்ளது. பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த இந்த விண்கல் 32.5 மணித்துளிகளில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 15 மைல் தூரத்தில் வெடித்து சிதறியது. இந்த விண்கல் சிதறி தாக்கியதில் ரஷ்ய நாட்டில் உள்ள சிலியாபின்ஸ்க் நகரில் சுமார் 1200 பேர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இந்த விண்கல் 1945 ஆம் ஆண்டு ஜப்பான் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 30 மடங்குகள் அதிகமான சக்தி வாய்ந்தது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கலிபோர்னியா, நெவாடா மாகாணத்தில் 2012ம் ஆண்டு ஏப்ரல் 22 ம் தேதி காலை 8 மணி அளவில் வானில் அதிசய ஒளி தென்பட்டது. அந்த ஒளி தோன்றியதைத் தொடர்ந்து இடி முழக்கசத்தம் இரண்டு முறை கேட்டது. வீடுகள் அதிர்ந்தன. குழந்தைகள் பயத்தால் அலறின. வீடுகளில் இருந்தவர்கள் நிலை தடுமாறி சுவர் மீதும் ஜன்னல் மீதும் மோதினர். கலிபோர்னியா, நெவாடா மாகாணங்களில் 600 கி. மீட்டர் பிராந்தியத்தில் இக்காட்சி தென்பட்டுள்ளது. வாஷிங் மெஷின் அளவிலான விண்கல் காற்று மண்டலத்தில் நுழைந்து தீப்பிடித்து வெடித்த போது தான் இப்படியான அதிசய விளைவுகள் ஏற்பட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படி அபூர்வமாக வடிவில் பெரிய கல் வந்து விழுமானால் அது காற்று மண்டலம் வழியே இறங்கும் போது பயங்கர சத்தத்துடன் வெடிக்கும். இப்படி பூமியில் வந்து விழுந்த கற்களை மியூசியத்தில் காணலாம். இவற்றை விண்கல் என்று குறிப்பிடுகின்றனர். சில சமயம் பெரிய விண்கல அவ்வளவாகச் சேதமடையாமல் பூமியில் வந்து விழுவதுண்டு. ஆப்பிரிக்காவில் நமீபியா நாட்டில் வந்து விழுந்த விண்கல் இதற்கு உதாரணம். இதன் எடை 60 டன். இது சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அபூர்வமாக பெரிய பாறை பூமியில் வந்து விழுந்ததும் உண்டு. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பாரிங்கர் கிரேட்டர் என்னும் வட்ட வடிவப் பள்ளம் பெரிய பாறை வந்து விழுந்ததால் ஏற்பட்டதே. சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், 45 மீட்டர் அகலம் கொண்ட விண்கல் வந்து விழுந்ததால் இது தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 2012ம் ஆண்டு டிசம்பரில் இலங்கையில் பொலன்னறுவை நகருக்கு மேலே வானத்தில் ஒரு நெருப்பு பந்து பூமி நோக்கி விழுந்தது. கீழே வீழ்ந்த விண்கற்களின் பாகங்களைச் சேகரித்து இலங்கையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இதன் சில பாகங்களை மேல் ஆய்வுக்காக வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினர். அதை ஆராய்ந்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அவற்றில் பாசி போன்ற உயிர் சுவட்டினை அடையாளம் கண்டுள்ளனர். பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் வாழ்க்கை ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது இது போன்ற விண்கற்களின் வீழ்கையால் தான் என்ற கணித்திருக்கின்றனர். சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் விண்கல் வந்து பூமியில் மோதியதன் விளைவாகத்தான் டைனோசார் வகை விலங்குகள் அழிந்ததாகச் சொல்லப்படுகிறது. ***பாக்ஸ் செய்தி **** வருகிற 2032 ம் ஆண்டு பூமியை ராட்சச விண்கல் ஒன்று தாக்கும். இதனால் உலகம் அழிய கூடிய ஆபத்து இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். 2032ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ம் தேதி ஒரு ராட்சச விண்கல் பூமியை தாக்க கூடிய ஆபத்து இருப்பதாகவும், சுமார் 1345 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் பூமியில் மோதினால் உலகம் முற்றிலும் அழிய கூடிய ஆபத்து இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் பூமியின் மீது மோதினால் மிக மிக சக்தியை கொண்ட அணுகுண்டு வெடித்து சிதறினால் ஏற்படக்கூடிய பாதிப்பை காட்டிலும், இது சுமார் 50 மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. ‘2013 டி.வி 135 ’என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் பற்றிய தகவல்களை இங்கிலாந்து, இத்தாலி, ரஷ்யா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எனினும், பூமியை நோக்கி வேகமாக பயணித்து வரும் இந்த ராட்சச விண்கல் பூமியை தாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என நாசா தெரிவித்துள்ளதுதான் ஆறுதல் தரும் செய்தி! *****************

1 கருத்து:

  1. திருக்கண்ணபுரத்தான் என்ற பெயர் பார்த்துவிட்டு இங்கு வந்தேன். திருக்கண்ணபுரம் உங்கள் ஊரா?

    பதிலளிநீக்கு