வியாழன், 10 ஜனவரி, 2013
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
(11.01.2013 தினமலர் சிறுவர் மலரில் இடம் பெற்ற எனது கட்டுரை:)
நாம் பூமிக்கு, மழைக்கு, சூரியனுக்கு, பயிர்களுக்கு,மாடுகளுக்கு மொத்த இயற்கைக்குமாக நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடுவதே பொங்கல் திருநாள்.
வடநாட்டில் இது சங்கராந்தி எனவும், பிறநாடுகளில் அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது
இந்த விழா. தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
போகி
போகி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் ’பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.
அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.
பொங்கல் பண்டிகை
< தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து, பொங்கல் செய்வது மரபு.< கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.<
மாட்டுப்பொங்கல்
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினை சுத்தம் செய்து, கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
காணும் பொங்கல்
நான்காவது நாள் காணும் பொங்கல். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் இந்நாளில்தான்.
இந்த நாளில் பல விளையாட்டுப் போட்டிகள், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகள், இரவில் இசை கச்சேரிகள், நாடகம் என்று ஊருக்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று தொன்மையான கலைகள் இரவு விளக்கு வெளிச்சத்தில் நடை பெறுவதும் உண்டு.
***பாக்ஸ் மேட்டர்***
*ஜல்லிக் கட்டு
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும்.
தமிழகத்தில் மதுரை மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் அலங்காநல்லுõரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடை பெறுவது வழக்கம்.
இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜப்பான்,மலேசியா, சிங்கப்பூர், ஆ ஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் வந்து குவிந்து விடுவார்கள்.
*கிராமிய கலைகள்
கிராமப்புறங்களில் கிராமியக் கலைகள் இந்த நாளில் நடத்தப்படும். கரகா ட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம்
நடைபெறும்.
*சாவக்கட்டு
‘ சாவக் கட்டு’ என்றழைக்கப்படும் கோழிச் சண்டைகள் தமிழகத்தில் பரவலாக நடை பெறுகிறது. கோழிச் சண்டை என்று சொன்னாலும் சேவல்களைத்தான் சண்டை போடவிடுவார்கள். சேவல்களை கோழிச் சண்டைக்காகவே வளர்ப்பார்கள்.
*ரேக்ளா ரேஸ்
‘ ரேக்ளா ரேஸ்’ எனப்படும் ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டிப் பந்தயம்
பல இடங்களில் நடை பெறும். இதற்கும் ஏராளமான கூட்டம் கூடும்.
எந்த வண்டி ஜெயிக்கும் என்று வேடிக்கை பார்ப்பவர்கள் பந்தயம் கட்டுவது வழக்கம்.
...........................................
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக