சனி, 19 ஜனவரி, 2013
குட்டீஸ் கேள்வி பதில் 23
குட்டீஸ் கேள்வி பதில் 23
*பாப் கார்ன் பொரிக்கும் போது மிஷினில் ஒவ்வொன்றும் துள்ளி துள்ளி குதிக்கிறதே, எப்படி?
- எஸ். ராம்மோகன், தஞ்சாவூர்.
பாப் கார்ன் வாங்கினோமா, சாப்பிட்டோமா என்று இல்லாமல் அதை கூர்ந்து கவனித்து இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கும் ராம்மோகனுக்கு பாராட்டு!
இப்படிப்பட்ட சந்தேகங்கள் அறிவு வளர்ச்சிக்கு உதவும். கீப் இட் அப்!
பாப் கார்ன் செய்ய பயன்படும் பொருள் நம்மூர் சோளம். சோளம் ஒரு மாவுப்பொருள். சோளம் கடினத் தன்மை அதிகமாக கொண்டிருக்கும். ஒரு சோளப் பொரியின் மையத்தில் கொஞ்சம் பருப்பும், அதைச் சுற்றி கடினமான மாவுப்பொருளும் இருக்கும். கொஞ்சம் ஈரப்பசையும் இருக்கும்.
இதை மிஷினில் சூடு ஏற்றும்போது, சோளத்தில் இருக்கும் ஈரப்பசை சூடாகி ஆவியாகும். அதே சமயம் விரிவடையும். மாவுப்பொருளைப் பிளந்துக்கொண்டு விரிவடையும்போது அந்த உந்து விசையினால் சோளம் வெடிக்கும். அதாவது துள்ளிக் குதிக்கும்.
*பாம்பு பால் குடிக்கும் என்பது உண்மையா, அங்கிள்?
- ஆர். கவுசல்யா, நாமக்கல்.
பாம்புகள் பற்றிய பல நம்பிக்கைகள் உள்ளன. அதில் ஒன்று பாம்பு பால்குடிக்கும் என்பது.
எப்போதாவது தாகம் எடுக்கும் போது பாம்புக்கு நீர் அருந்தும் பழக்கம் உண்டு. அப்படி ஒரு சமயத்தில் வேண்டுமானால் சிறிதளவு பாலை பருகலாம். மற்றபடி இயற்கையில் பாம்பு பால் குடிப்பது இல்லை.
காரணம் பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு இருக்கும். எனவே, பாம்பு
பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது.
பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது.
அது நீர்மப்பொருளில் வாயை வைக்கும் போது முதலில் நுழைவது
மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே
பாம்பு மூச்சுத் திணறிச் செத்துவிடும்.
பாம்பு இரையை எலி, தவளை போன்றவற்றை
அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. அதனால் முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சி குடிக்காது.
*பிளாஸ்டிக் எதில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது?
-நெடுஞ்செழியன், நெய்க்குப்பை.
முதலில் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது தாவரங்களில் இருந்துதான். தாவர செல்லுளோஸ் சங்கிலி மூலக் கூறுகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. 1862ல் அலெக்சாண்டர் பார்க்ஸ் தயாரித்த பிளாஸ்டிக் பார்க்சைன் எனப்பட்டது. 1909ல் செயற்கை முறையில்
தயாரிக்கப்பட்டது.1930ல் லியோ பேக்லேன்ட் என்ற பவுதிகவியலாளர்
பெட்ரோலில் இருந்து பிரித்தெடுக்கும் முறையை கண்டார்.
அதை பேக்லைட் என்பர். பின் பாலிதீன், நைலான் அக்ரிலிக் கண்டுபிடிக்கப்பட்டு, இன்றுவரை நடைமுறையிலுள்ளது. 1941 ல் பாலிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
பிளாஸ்டிக்கின் தனிச்சிறப்பு அதை எந்த வடிவத்திலும் உருவாக்கம் செய்ய முடியும். நடைமுறை வாழ்வில் பிளாஸ்டிக், விமானம் முதல் மனித உடல்பாகங்கள் வரை பயன் மேம்பாட்டிலிருக்கிறது.
பிளாஸ்டிக் பொருட்களால் பூமிக்கும், நம் உடலுக்கும் கேடு ஏற்படும்.
பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு 100-1000 ஆண்டுகள் ஆகுமாம்.
எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை
பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளுங்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது.
***********************************************************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக