திங்கள், 21 ஜனவரி, 2013
குட்டீஸ் கேள்வி பதில்48
குட்டீஸ் கேள்வி பதில்48
21.12.12
*கறுப்பு நிறம் வெப்பத்தை அதிக நேரம் தக்க வைத்துக் கொள்ளுமா?
- எஸ். சவுமியா, தேவனாங்குறிச்சி.
நிறத்துக்கும் வெப்பத்தை ஈர்க்கும் தன்மைக்கும் தொடர்பு உண்டு. உதாரணமாக வெள்ளை நிறமானது வெப்பத்தை அதிகமாக ஈர்ப்பது இல்லை. வெண்மையான பரப்பின் மீது வெயில் பட்டால் அது தன் மீது படுகின்ற வெப்பத்தை திருப்பிப் பிரதிபலித்து விடும். வெப்பத்தை ஈர்க்கும் தன்மை நிறத்துக்கு நிறம் மாறுபடும்.
கறுப்பு நிறமானது வெப்பத்தை நன்கு ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
விவரம் தெரிந்தவர்கள் யாரும் கோடைக் காலத்தில் கறுப்பு நிற சட்டை அல்லது கறுப்பு நிற பேன்ட் அணிய மாட்டார்கள். அப்படி அணிந்து வெயிலில் சென்றால் உடல் தகிக்கும். வெயிலை, அதாவது வெப்பத்தை, ஈர்த்துக்கொள்வதில் கறுப்பு நிறம் முதலிடம் வகிப்பதாகச் சொல்லலாம். ஆகவே தான் கிராமப்புறங்களில் அந்த நாட்களில் பாரம்பரிய உடையாக வெள்ளைச் சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்து வந்தனர்.
*பெங்குவின் பறவை வாழ்க்கைப்பற்றி விரிவாக சொல்லுங்கள்!
- மு. கலைவாணன், களம்பூர்.
பெங்குவின் அண்டார்டிகாவில் அதிகம் காணப்படுகிறது.
இது பறவை இனத்தைச் சேர்ந்தது. ஆனால், பறக்காது; நீந்த முடியும்!
தினமும் பதினைந்திலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் உணவுக்காக நீருக்கடியில் நீந்தும். நீந்தும்போது இறக்கைகளைத் துடுப்பு போல் பயன்படுத்தும்.
இவற்றின் உடல் எண்ணை பசையோடு இருக்கும்.
பெண் பெங்குவின்கள் பனிப் பரப்பில் முட்டையிடும். ஆண் பெங்குவின்கள் அந்த முட்டையின்மேல் அமர்ந்தோ அல்லது கால்களுக்கு இடையில் வைத்தோ அடைகாக்கும்.
உலகில் நுõறு மில்லியன் பெங்குவின்கள் வரை இருக்கும். இவை பனிப் பிரதேசத்தில் இருப்பதால், இவற்றுக்கு அதிக அபாயம் இல்லை.
பெங்குவின்கள் தங்கள் வாழ்க்கையில் 75 சதவீதத்தை நீருக்கடியில்தான் கழிக்கின்றன.
பெங்குவின்களில் மிகப் பெரியவை எம்பரர் மற்றும் கிங் பெங்குவின்கள். இவை நான்கடி உயரமிருக்கும். எடை எழுபத்தைந்து பவுண்டுகள் இருக்கும். மிகச் சிறியவை நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவில் காணப்படும் சின்ன நீல பெங்குவின்கள். இவை 33 செ.மீ. உயரம்தான் இருக்கும்.
இவற்றின் முக்கிய உணவு சிறிய மீன்கள். இவை பெரிய பெரிய கூட்டங்களாக வாழும்.
*
மகேந்திரசிங் தோனி பற்றி கூறுங்கள் அங்கிள்
- கா. தாமரைச் செல்வன், திட்டை.
மகேந்திர சிங் தோனி 1981ம் ஆண்டு ஜூலை 7 ராஞ்சி, (ஜார்கண்ட்) பிறந்தார். இவரின் பெற்றோர் பான் சிங்-தேவகி தேவி.
தோனிக்கு ஜெயந்தி என்ற சகோதரியும் நரேந்திரா என்ற சகோதரரும் உள்ளனர். இவர் இந்திய கிரிக்கெட் வீரரும் இப்போது இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருக்கிறார். இந்திய ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு
தலைமையேற்றதிலேயே மென்மையான கேப்டன்களில் ஒருவராக குறிப்பிடப்படுகிறார். இவரது தலைமையின்கீழ் இந்தியா 2007 ஐசிசி வேர்ல்டு டிவென்டி20, உலகக் கோப்பையை வென்றது.
ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார்.
.........................................*
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக