




இன்கா மக்களின் தொலைந்த நகரம்
- தேவராஜன்
பெரு நாட்டில் இயற்கையின் அழகின் நடுவே அமைந்திருக்கும் இந்த மச்சு பிச்சு இப்போது உலக அதிசயங்களில் ஒன்று எனும் பெருமையைப் பெற்றுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகர் இன்கா நாகரீக மக்களின் கட்டடக்கலைக்குச் சான்றாகவும், அவர்களுடைய ரசனைக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது.
உருபாமா பள்ளத்தாக்கின் அருகே அடர் காட்டில், அருவிகளின் ஆரவாரத்தில், அழகின் உச்சத்தில் இந்த நகர் அமைந்துள்ளது. கஸ்கோ நகரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது.
பளபளப்பாக்கப்பட்ட உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது மச்சு பிச்சு அரண்மனை.
இத்தனை ஆயிரக்கணக்கான கற்களை எப்படி இந்த மலை உச்சிக்கு கொண்டு வந்தார்கள் என்பது வியப்பின் உச்சம்!
இன்கா நகரின் கதை
இந்த நகர் இன்கா மன்னனின் கோட்டையாக இருந்திருக்கலாம் எனவும், ஆயிரம் பேர் இந்த அரண்மனை நகரில் வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த நகரின் வரலாற்றுக் கதை சிலிர்ப்பும், வியப்பும், அதிர்ச்சியும், சோகமும் கலந்து கிடக்கிறது.
பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய பெரு நாட்டு இன்கா மக்கள், கஸ்கா நகரை விட்டு
அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது.
காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர்.
நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
ஸ்பானியர்கள் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். 36 ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள்.
வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கண்ணில் பட்ட இன்கா மக்களைபடுகொலை செய்தனர்.
இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான். அவனை கஸ்கோ நகருக்குக் கொண்டு வந்து பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வைத்து படுகொலை செய்தனர் ஸ்பானியர்கள். என்று சில ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.
பெரு நாட்டில் வாழ்ந்த இன்கா சாம்ராஜ்யம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த 1450ம் ஆண்டில் மச்சுபிச்சு மலை கட்டுமானங்கள் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இன்கா சாம்ராஜ்யத்தின் தலைநகரான குஸ்கோ நகரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அடர்ந்த காடுகளுக்கு இடையே மச்சுபிச்சு அமைந்துள்ளது. இதன் மூன்று புறமும் சூழ்ந்து பாயும் உருபாமா நதி மச்சுபிச்சுவுக்கு இயற்கை அகழிபோல் அமைந்துள்ளது. இது இன்கா சக்கரவர்த்தியின் மலை வாசஸ்தலம் எனவும், எதிரிகள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுக்கப்பட்ட பகுதி எனவும் கூறப்படுகிறது.
கண்டு பிடிக்கப்பட்டது எப்படி?
ஹிராம் பிங்காம் எனும் யேல் பல்கலைக்கழக தத்துவ ஆசிரியருக்கு ஆர்வம் வாய்க்காமல் போயிருந்தால் இந்த மச்சு பிச்சு எப்போது உலகிற்கு அறிமுகமாயிருக்கும் என்று சொல்ல முடியாது.
இன்கா மக்களின் கதைகளிலும், அவர்களுடைய கலாச்சார வாழ்க்கை முறையிலும் ஆர்வம் கொண்ட ஹிராம் பிங்காம் 1911ம் ஆண்டு தன்னுடன் சிலரையும் அழைத்துக் கொண்டு கஸ்கோ வை விட்டு காட்டுக்குள் பயணமானார் தொலைந்து போன நகரைக் கண்டுபிடிக்க.
இவர்கள் பயணம் துவங்கிய சில நாட்களிலேயே இன்கா மக்களின் நகர் இடிபாடுகள் ஒன்றைக் கண்டனர் அதற்கு பட்டாலக்டா என்று பெயரிட்டனர்.
அற்புதமாய் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு நகரே இருந்தது. இதுவே இன்றைய மச்சு பிச்சு ! “இன்கா மக்களின் தொலைந்த நகரம்” என அதை அவர் அழைத்தார்.
வரலாற்று சின்னம்
1913ம் ஆண்டு மச்சு பிச்சுவுக்கு
ஒரு ரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பமானது. அது படிப்படியாக நடந்து 35 ஆண்டுகளுக்குப் பின் மச்சு பிச்சுவைச் சென்றடைந்தது.
1981ம் ஆண்டு மச்சு பிச்சு இருக்கும் இடத்தையும் சேர்த்து 325 சதுர கிலோமீட்டர்களை பெரு அரசு வரலாற்று இடமாக அறிவித்தது. யுனஸ்கோவின் அங்கீகாரம் இரண்டு ஆண்டுகளில் கிடைத்தது.
1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.
எத்தனையோ ஆண்டுகால கடின உழைப்பினால் இன்கா மக்களால் உருவான வில்காபாம்பா நகர், சில பத்து ஆண்டுகளிலேயே காலி செய்யப்பட வேண்டுமெனில் ஏதோ ஓர் மிகவும் வலுவான காரணம் இருந்தே ஆக வேண்டும். இடிபாடுகளுடன், சிதைந்து, பாழடைந்து கானகத்தின் சிதைந்த ஓவியமாய், ஓர் இனம் அழிந்த வரலாற்றின் சோகத்தை சொல்லிக்கொண்டிருக்கிறது இன்கா மக்களின் தொலைந்த நகரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக