‘விஜய’ வருஷம் ‘ஜெயம்’ உண்டாகட்டும்!/ 84/ 14.4.2013/
இன்று தமிழ்ப்புத்தாண்டு. இந்த விஜய வருடம் எல்லாருக்கும் விஜயத்தையே சேர்க்கட்டும். அதற்கு, நாம் வணங்கும் இறைவன் பூர்ணமாக அருள்புரியட்டும்.
இந்த இனிய புத்தாண்டின் தொடக்க நாளில், ஓர் அர்த்தமுள்ள ஆன்மிக சிந்தனையை மனதில் பதித்து, அதை பின்பற்றலாமா?
கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பர்.
கோபுரதரிசனம் செய்ய மேல்நோக்கி தலையால் வணங்க வேண்டும்.
கோயிலில் உள் சென்ற உடன் முதலில் விநாயகருக்கு
தோப்புக்கரணம் செய்யணும். கோயிலில் சிலர் பிரதட்ணம் பண்ணுவர்.
ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்கின்றனர்.
அஷ்டாங்கம் என்பது தலை, கையிரண்டு,
செவியிரண்டு, மோவாய், புஜங்களிரண்டு என்னும் எட்டவயங்களும் நிலத்தில் பொருந்தும் படி வலக்கையை முன்னால் நீட்டியும் இடது கையை பின்னும் நேரே நீட்டிய பின் அம்முறையே மடக்கி வலபுறமும் இடபுறமும் மண்னிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டிவலக்காதை
முன்னும் இடக்காதை பின்னும் மண்னிலே பொருந்தச் செய்வதாகும்.
பெண்கள் செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து அவயவங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம்.
இப்படி உடலுறுப்புகளை வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
திருப்பூந்துருத்தி தேவாரப் பாடலில் அப்பர் அடிகள் சாதாரிப்பண்ணில் அமைந்த திருவங்கமாலையில் உடலுறுப்புகளை விளித்து திருப்பூந்துருத்தித் திருக்கோயில் உறை புட்பவன நாதரைப் போற்றிப் பாடியுள்ளார்.
தலை, கண்கள், செவிகள், மூக்கு, வாய், கைகள், கால்கள் என விளித்து இறைவனை வழிபட தேவாரப் பண் இசைத்தார் அப்பர் அடிகள்.
சிவனின் திருவுருவம் கண்டு பரவசம் கொள்வதற்கே கண்கள்.
சிவன் திருநாமங்களை உளமார உச்சரிப்பதற்கே அதரம்.
சிவனின் பெருமைகளை கேட்டு இன்புறுவதற்கே செவிகள்.
இப்படி இந்த உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு உறுப்பும் இறைவனைப்போற்றுவதற்கு அமைந்தவை.
ஆக்கை யாற் பயனென்- அரன்
கோயில் வலம் வந்து
பூக்கையால் அட்டிப் போற்றியென்னாதவிவ்
ஆக்கை யாற்பயனென்?
என்று ஆரம்பித்து, வழிபாட்டில் உடல் உறுப்புகளின் பங்கு என்ன என்பதை பாடுகிறார் அப்பர்.
தலையே நீ வணங்காய்- தலை
மாலை தலைக்கணிந்து
தலையாலேபலி தேடுந் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.
கண்காள் காண்மின்களோ – கடல்
நஞ்சுண்ட கண்டன் றன்னை
எண்டோள் வீசிநின்றாடும்பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோன் மேனிப்பிரான்நிறம் எப்போதும்
செவிகாள் கேண்மின்களோ.
வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை
வாயே வாழ்த்துக் கண்டாய்.
கைகாள் கூப்பித் தொழீர் – - கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித் தொழீர்
என்றோ ஒரு நாள் மண்ணுக்கோ தீக்கோ இரையாகும் இந்த உடலை, இறைவனை வழிபட பயன்படுத்திக்கொண்டால், இந்த வருஷம் மட்டுமல்ல; எந்த வருஷமும் நமக்கு ஜெயமே தரும்!
- தேவராஜன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக