சனி, 20 ஏப்ரல், 2013


20.4.2013 தினமலர் பெண்கள் மலரில் இடம் பெற்ற எனது இல்லத்தரசியின் கடிதம் இது. அன்பு தோழிகள் அனைவரும் நலமா? இன்னும் சில தினங்களில் அக்னி நட்சத்திரம் வர இருக்கிறது. வெயில் பற்றி நினைத்தாலே, வியர்க்கிறது நமக்கு. ஆனால், இந்த வெயிலை ரசித்து,பாராட்டி ஒரு அங்கம்பாக்கம் சந்திராமணி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். படிக்கவே சுவாரஸ்யமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. தோழிகளும் படிக்கட்டுமே என்று கடிதத்தின் சுருக்கத்தை இங்கு எழுதுகிறேன். படித்துவிட்டு, வெயில் பற்றி வித்தியாசமான உங்கள் அனுபவத்தையும் எழுதி அனுப்புங்கள்! ‘மழையைப் போன்று வெயில் கொண்டாடப்படுவதில்லை. வெயில் அடிக்க வேண்டும் என்று யாரும் யாகம் வளர்ப்பதில்லை. எந்த ராகமும் வெயிலை வரவழைப்பதில்லை. மலை முகட்டில் இருந்து பொழியும் அருவியை ரசிப்பவர்கள். சூரியனிடமிருந்து பொழியும் வெயிலை யாரும் ரசிப்பதேயில்லை. மழை மகிழ்ச்சியோடு தொடர்பு படுத்தபடுகிறது. வெயிலுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. கவிஞர்கள் கூட வெயில் பற்றி அதிகம் கவிதை எழுதுவதில்லை. எப்போதாவது அடை மழை கொட்டித் தீர்த்தால், அதன் பிறகே வெயில் வரவேற்கப்படுகிறது. மரங்கள் வெயிலின் சூட்டை பருகிவிட்டு, சக்கையாய் வெளிச்சத்தை துப்பும் வெளிச்சத்தை மட்டும் நாம் ரசிக்கிறோம். வெயில் என்றதுமே பழயை நினைவுகள் அலையடிக்கின்றன மனதில். வீட்டின் ஓடுகளுக்கிடையே கம்பி கம்பியாய் விழும் வெயில், முகம் பார்க்கும் கண்ணாடியில் வெயிலை வாங்கி, சுவற்றில் அதை நடனமாட வைத்து மகிழ்ந்தது, வெயில் தகிக்கும் மணலில் ஈச்சம் பழம் பழுக்க வைத்த ருசித்தது, நுங்கு தேடி அலைந்தது, உச்சி வெயிலில் கோயில் திருக்குளத்தில் தவளைப்போல கிடந்த, மாலையில் கரையேறுவது, பூதக்கண்ணாடி வழியே வெயிலை மொத்தமாக வாங்கி, அதை காகிதத்தின் ஒரு பகுதியில் குவித்து,நெருப்பு இல்லாமல் காகிதத்தை எரிய வைத்து மேஜிக் காட்டியது எல்லாம் நினைவுக்கு வருகிறது. கோடை காலம் வெயிலின் திருவிழா. ஊர் என்னும் கோப்பையில், சூரியன் வெயிலை நிரப்பிக் கொண்டிருக்கிறான். வெயில் நிரம்பிய கோப்பையில் பகல் என்ற அழகை யார் ரசிக்கிறார்கள்? வெயில் என்ற டைட்டில் வைக்கப்பட்டதற்காகவே, வெயில் திரைப்படத்தை பத்துமுறைக்கு மேல் பார்த்தவள் நான்.’ இப்படி வெயிலின் அருமை பெருமைகளை நிறைய எழுதியிருக்கிறார். கடிதம் படித்ததும் வெயில் பற்றிய வெறுப்பு கொஞ்சம் எனக்கு குறைந்ததுதான் போனது. உங்களுக்கும் அப்படிதானே? அன்புடன், ஸ்ரீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக