திங்கள், 16 ஜூன், 2014

பாதாள ஆறு; பறக்கும் ஆறு மர்மங்கள் - தேவராஜன்


30/ பாதாள ஆறு; பறக்கும் ஆறு மர்மங்கள் - தேவராஜன் அமேசான் ஆறு தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறு. இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. இதன் நீளம் 6400 கி.மீ. உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறு இது. அமேசான் ஆறு, உலகில் பெரியதாக இருந்தாலும், நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவுதான். இந்த ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை. அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன. பாதாள ஆறு பிரேசில் அமேசான் ஆற்றுக்கு அடியில் அமேசான் ஆற்றைப்போலவே பாதாள பூமியில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பிரமாண்டமான ஆறு ஓடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதைக் கண்டுபிடித்தவர் ஓர் இந்திய ஆராய்ச்சியாளர்தான். வாலியா ஹம்சா என்ற இந்திய ஆராய்ச்சியாளரை கொண்ட பிரேசில் இயற்கை ஆராய்ச்சி மற்றும் தேசிய கண்காணிப்பு குழு மேற் கொண்ட ஆய்வில் இந்த பாதாள ஆறு ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1970ம் ஆண்டு பிரேசில் பெட்ரோப்ராஸ் எண்ணை நிறுவனம் இங்கு 241 எண்ணை கிணறுகள் தோண்டியது. அந்தக் கிணறுகள் அப்போதே செயல்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்டன. இந்தக் கிணறுகள் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு குறித்து கடந்த 40 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அமேசான் ஆற்றுக்கு அடியில் இன்னொரு ஆறு ஓடுவது தெரிந்து ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்பட்டனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து கருத்து: ‘ஆய்வின் நோக்கம் வேறாக இருந்தாலும், எதிர்பாராத விதமாக கிடைத்த அரிய தகவலின் அடிப்படையில் ஆய்வின் போக்கு மாறியது. அப்போது, அமேசான் ஆற்றுக்கு அடியில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பிரமாண்ட ஆறு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் நீளம் 6 ஆயிரம் கிலோ மீட்டர். அதாவது பூமியின் மேல் உள்ள அமேசான் ஆறும் இதன் அளவும் ஒன்றாக உள்ளது. புதிய ஆறுக்கு ‘ஹம்சா’ என்று இந்திய ஆராய்ச்சியாளரின் பெயரே வைக்கப்பட்டுள்ளது. எண்ணைநிறுவனம் பெட்ரோப்ராஸ் தந்த வெப்பம் குறித்த தகவல்கள் அடிப்படையில் அமேசான் பகுதியில் ஆய்வு நடத்திய போது, நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் ஆய்வு தீவிரப் படுத்தப்பட்டது. இதில் ஹம்சா ஆறு குறித்து தெரிய வந்தது. இதன் நீரோட்டம் நிமிடத்துக்கு 3ஆயிரம் கன அடியாக உள்ளது. அக்ரி பகுதியில் இருந்து உற்பத்தியாகி சோலிமோயஸ், அமேசோனா, மராஜோ தீவுகள் உள்ளிட்ட பகுதிகளை கடந்து அமேசான் ஆற்றுக்கு அடியில் ஆறு ஓடுவதாக கருதப்படுகிறது. இதன் நீர் மிகக் குறைந்த உப்புத்தன்மை கொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்த தொடர்ந்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது.’ பறக்கும் ஆறு * தென் அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியை வளப்படுத்திக் கொண்டிருக்கும் அமேசான் ஆறு பல அதிசயங்களைக் கொண்டது. உலகிலேயே இரண்டாவது நீளமான ஆறாக இருப்பதும், உலகின் மிகப் பெரிய வடிகாலாக அறியப்படுவதும் அமேசான்தான். உலகின் அனைத்து ஆறுகளில் ஓடும் நீரின் மொத்த அளவில், ஐந்து ஒரு பங்கு நீர் அமேசான் ஆற்றில் ஓடுகிறது. பல்லாயிரம் உயிரினங்கள், மர வகைகள் என உலகின் உயிர்சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி அமேசான். இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அமேசான் ஆற்றில் அதிகம் அறியப்படாத ஒரு அம்சம் உள்ளது. அதுதான் பறக்கும் ஆறு. கண்ணுக்குத் தெரியாத இந்த ஆறு அமேசான் காட்டுப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருக்கிறது. முற்றிலும் நீராவியால் உருவாகியுள்ளது, இந்த ஆற்றின் சிறப்பம்சம். தரையில் ஓடும் சாதாரண ஆற்றில் உள்ள நீரோட்டத்தைப் போல, இந்தப் பறக்கும் ஆற்றில் நீராவியோட்டம் இருக்கிறது. அமேசான் ஆற்று நீரை உறிஞ்சும் மரங்கள், அதை நீராவியாக வெளியேற்றுவதால் இப்படியொரு ஆறு உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மரங்கள் ஒரு நாளில் மட்டும் வெளியேற்றும் நீராவியின் மொத்த எடை பல ஆயிரம் கோடி டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, வெனிசுலா, கயானா, சூரினாம் என பல நாடுகளிலும் பரவியிருக்கிறது இந்தப் பறக்கும் மாய ஆறு. தென் அமெரிக்காவின் ஆன்டிஸ் மலைத் தொடர், இந்த பறக்கும் ஆற்றுக்கு இயற்கையே வகுத்துத் தந்த கரையாக உள்ளது. இதனால், பிரேசில் மட்டுமல்லாமல் தென் அமெரிக்காவின் பல நாடுகளிலும் பெருமளவு மழைப் பொழிவுக்கு அமேசானின் பறக்கும் ஆறே காரணமாக இருக்கிறது. அமேசான் என்ற உலகின் மிகப் பெரிய ஆற்றின் மர்மங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் அமேசானின் பாதாள ஆறும், பறக்கும் ஆறும் உலகை திரும்பி பார்க்க வைக்கும் விநோதம் என்றால் மிகையில்லை!

சனி, 7 ஜூன், 2014

29/ கடலுக்குள் ஒரு கோட்டை - தேவராஜன்.


29/ கடலுக்குள் ஒரு கோட்டை - தேவராஜன். ******************************************************************************************************************************************************************** தரங்கம்பாடி போல கடலோர கோட்டைகள் பற்றி நமக்கு தெரியும். கடலுக்குள் ஒரு கோட்டை இருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு? அந்தக் கோட்டை 300 ஆண்டுகள் பழமையானது. அதன் பெயர் கொலாபா கோட்டை. அதைக் கட்டியவர் மராட்டிய மாவீரர் சிவாஜி மஹாராஜா. இந்தக் கோட்டையை கடல்அலை இறக்கம் உள்ள நாட்களில், அலிபாக் கடற்கரையிலிருந்து நடந்தே சென்று பார்க்கலாம். மும்பையில் 98 கி.மீ. தொலைவில் இருப்பது அலிபாக். இந்த அலிபாக் கடற்கரையை ஒட்டிதான் கொலாபா கோட்டை அமைந்துள்ளது . இந்தக் கோட்டை மாவீரர் சிவாஜியின் இறுதிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோட்டைக்குச் செல்ல, மும்பை கேட் வே ஆஃப் இண்டியாவிலிருந்து படகுப்போக்குவரத்தும் உண்டு. இந்த கடல் திடீரென்று உள்வாங்கும். ரெண்டு மூணு கிலோமீட்டர்வரைக்கும் கடல் நீர் உள்ளே போயிடும். பிறகு நாலஞ்சு மணி நேரத்துக்கு அப்புறம் பழையபடி அலையோடு அலைமோதும் காட்சியை ரசிக்கலாம். கரையிலிருந்து பாக்கிறப்ப கடல் கோட்டை பக்கத்துல இருக்கிற மாதிரி இருக்கும். ஆனால், அங்க போக 20 நிமிஷத்துக்கு மேல் ஆகும். மராட்டியத்தில் மன்னர் சிவாஜியின் ஆட்சி காலத்தில் 1698 ல் முதன்மை தளபதியா இருந்த சிடோஜி குஜார் மறைவுக்குப்பின்னால், துணை தளபதியாக இருந்த கங்கோஜி அங்க்ரே என்பவர் முதன்மை தளபதியானார். கங்கோஜி கடற்படை தளபதி. கடற்படையில் அவருக்கு இருந்த திறமை மற்றும் அனுபவத்தின் காரணமாக, கொலாபாவும் மற்ற கடற்புர கோட்டைகளும் அவருடைய கண்காணிப்பில் வந்தன. இந்த கொலாபா கோட்டைக்குள்ள அவருக்குன்னு ஒரு அரண்மனையும் இருந்தது. அவரோட மனைவி பெயரால் மரியாதையா ‘நானி சாகேப் அரண்மனை’ன்னு அழைக்கப்பட்டது. அவரோட மனைவி பேர் லஷ்மிபாய். ஆனா, மக்கள் ஒரு பிரியத்தால நானின்னு கூப்பிடுவாங்களாம். இப்போது இந்தக் கோட்டை சிதிலமடைஞ்சு இருந்தாலும், வரலாற்று நினைவுகளை அது பேசற மாதிரி இருக்கிறது ஒரு ஆச்சரிய அனுபவம்தானே! இந்தக்கோட்டையில் ஒரு காலத்தில் 700 படைவீரர்கள், குதிரைகள், இன்னபிற விலங்குகள் எல்லாம் இருந்ததுண்டு. இப்போ அங்கு இருக்கிற கோயில்களுக்குப் பூஜை செய்ற பண்டிட்டுகளும், அவங்க குடும்பங்களுமா, பத்துப்பதினஞ்சு பேர் கோட்டைக்குள்ளேயே குடியிருக்காங்க அவ்வளவுதான்! கோயிலுக்கு பின்பக்கம் மஹிஷாசுரமர்த்தினி தெய்வமும் முன்புறம் பாதையின் இடது பக்கம் நானிசாகிப்பின் அரண்மனை. இதுக்கு பக்கத்தில்தான் அவரோட மகன் ரகுஜி அங்க்ரே கிபி 1816 ல் இன்னொரு அரண்மனை கட்டியிருக்கார். ஐந்து மாடி கட்டடமா இருந்தது. இப்போது முதல் நிலை வரைமட்டும் எஞ்சி இருக்கு. இந்த அரண்மனைகளுக்கு முன்புறம் குதிரைகள், சண்டை ஆடுகள், செல்லப்பறவைகள் இவையெல்லாம் தங்குறதுக்கான இடமாக இருந்திருக்கு. அரண்மனைக்கு கிழக்குப்பக்கத்தில் கிட்டங்கிகளும் இன்னபிற சின்னச்சின்ன கட்டடங்களும் இருந்திருக்கு. கோட்டையின் நடுவில் பிள்ளையார் கோயில். சித்தி புத்தியோட, வலதுபக்கம் அப்பாவும், இடதுபக்கம் மாமனும், மாமாவோட பின்னால மஹிஷாசுர மர்த்தினியும், அமர்ந்த நிலையில் பிரம்மாவும் காட்சியளிக்கிறார். இந்த கோயிலுக்கு வலதுபுறம் சிவனும் , இடதுபுறம் வாலில் மணிகட்டிய ஆஞ்சனேயரும் தனிக்கோயில்களில் இருக்காங்க. மேற்குப்பக்கத்துல ரெண்டு இடங்களில் அரைவட்ட வடிவமா பதுங்கு குழிகள் இருக்கிறது. கோட்டையின் வடக்குப்பக்கத்தில் கடலைப்பார்த்தமாதிரி ரெண்டு பீரங்கிகள் இருக்கு. இது எதிரிகளை தாக்குறதுக்கு மட்டுமல்ல, மழை மற்றும் புயல் காலங்களில் ஏதாவது கப்பல் தெரியாத்தனமா கோட்டைக்கு பக்கத்துல வந்துட்டா வெடி மூலம் எச்சரிக்கை செய்வாங்களாம். தேசியக்கொடியேத்த கொடிமரம் ஒண்ணு இருக்குது. இந்த கோட்டைக்குள் செல்ல இந்திய தொல்பொருள் துறை நுழைவுக் கட்டணம் வசூலிக்கின்றது. * பாக்ஸ் செய்தி *ஒரு காலத்தில் இந்த கொலாபா கோட்டையில் ஒரு இனிப்பு நீர் கிணறு இருந்துள்ளது *சிவாஜி மஹராஜாவின் இஷ்ட தெய்வமான பவானிக்கு , இங்கே ஒரு கோயில் இருக்கு. எந்த போருக்கு புறப்பட்டாலும் பவானியின் காலடியில் தன்னோட வாளை வெச்சு ஆசிர்வாதம் வாங்கிட்டுத்தான் புறப்படுவாராம். *வடக்குப்பார்த்த பிரதான நுழைவாயில் இரண்டு ஆர்ச்சுகளால் ஆனது. இதை மஹா தர்வாஜான்னு சொல்றாங்க. தர்வாஜான்னா வாசல், கதவு என்று பொருள். கோட்டையின் தெற்குக்கடைசியில் இருக்கும் யஷ்வந்த் அல்லது தர்யா தர்வாஜான்னு சொல்லப்படுற நுழைவாயில், கடலைப்பார்த்தவாறு அமைஞ்சிருக்கு. இது படைவீரர்கள் தற்காலிக ஓய்வுக்கான இடம். *************

ஞாயிறு, 1 ஜூன், 2014

விமானம் எம்எச் 370 மர்மங்கள்! - தேவராஜன்.


விமானம் எம்எச் 370 மர்மங்கள்! - தேவராஜன். மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம் எம் எச் 370 கடந்த மார்ச் 8ம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. சீனக்கடலுக்கு மேலே 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் 25-க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டன. களத்தில் உள்ளன. விமானத்தை தேடுவதற்காக 40க்கும் அதிகமான கப்பல்கள், 30க்கும் அதிகமான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டும் கூட ஒரு சிறிய தடயத்தையும் கண்டறிய முடியவில்லை. எந்த முன்னேற்றமும் இல்லை. விமானம் மாயமாய் மறைந்த மர்மங்கள் குறித்து பல கோணங்களில் பல தகவல்கள் சொல்லப்பட்டு வருகின்றன. விமானம் மர்மம் குறித்த புத்தகம்: விமானம் எம் எச் 370 மர்மம்(ஊடூடிஞ்டt Mஏ370 கூடஞு Mதூண்tஞுணூதூ) பிளைட் எம்எச் 370 தி மைஸ்ட்ரி என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. லன்டனை சேர்ந்த எழுத்தாளர் நைஜல் கோவ்தோன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில், மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று கிட்டத்தட்ட நிச்சயமாக எதுவும் தெரிந்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாயமான மலேசிய விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததை அடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மாயமானபோது தெற்கு சீன கடலில் தாய்லாந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் மற்ற பணியாளர்கள் இணைந்து போர் பயற்சி நடத்தினர்.பயிற்சியின் துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான பறந்து சென்ற பாதை: மாயமான விமானத்தின் பாதையை கண்டுபிடிக்க உதவிய இங்கிலாந்தின் இன்மார்சாட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு வெளியிட்டது. 47 பக்கங்கள் கொண்ட அந்த தகவலில் விமானம் சென்ற பாதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மலேசிய பிரதமரின் கருத்து: விமானம் மாயமானது குறித்து மலேசிய பிரதமர், “வேண்டுமென்றே யாரோ ஒருவராலோ, சிலராலோ விமானம் திசைதிருப்பி கொண்டு செல்லப்பட்டது என்று புலனாய்வில் இருந்து தெரியவருகிறது. விமானத்தை அதன் வழக்கமான பாதையில் இருந்து திருப்பி, மேற்கு நோக்கி கொண்டு சென்றவர்கள், அதன் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர்” என்று கூறினார். விமானிகள் மீது சந்தேகம்: ஒரு வேலை விமானிகளே விமானத்தை கடத்தி இருப்பார்களோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்தது. விமானியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். விமானி, கேப்டன் ஜகாரி அஹ்மத் ஷா, மலேசியாவின் எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிமின் தீவிர ஆதரவாளர் என தெரிந்தது.அன்வர் இப்ராஹிமுக்கு மலேசிய நீதிமன்றம், 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இப்ராஹிமுக்கு தண்டனை வழங்கப்பட்ட தினம், மாயமாக மறைந்த மலேசியன் ஏர்லைன்ஸ் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற தினமும் ஒன்று என்பதால் இந்த கோணத்திலும் சந்தேகம் வலுபெற்றது. மங்கோலியாவில் தரை இறங்கியதா? விமானம் மங்கோலியாவில் அல்லது சோமாலியாவில் தரை இறங்கியிருக்கலாம் என்பது இன்னொரு பக்க சந்தேகம். அந்த நாடுகளில் ஒரு விமானத்தை தரையிறக்க முன் அனுமதி பெறத் தேவையில்லாயாம். கார் பார்க்கிங் செய்வது போல் செய்து விட்டு போகலாமாம். மலேசியாவில் இருந்து ஏழு மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது மங்கோலியா. சோமாலியாவில் முறையான அரசும் இல்லை. அங்குள்ள போராளிகளுக்கும், கொள்ளையர்களுக்கும் பணம் கொடுத்தால் போதும். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இந்த வகையிலும் சந்தேகம் ஏற்பட்டது. மாயமான விமானம் குறித்து ஒரு திரைப்படம்: எம் எச் 370 விமானம் மாயமானது தொடர்பாக தி வானிசிங் ஆக்ட்: தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் த மிஸ்சிங் மலேசியன் பிளேன் “கூடஞு ஙச்ணடிண்டடிணஞ் அஞிt: கூடஞு க்ணtணிடூஞீ குtணிணூதூ ணிஞூ tடஞு Mடிண்ண்டிணஞ் Mச்டூச்தூண்டிச்ண கடூச்ணஞு” என்ற பெயரில் திரைபடமாகிறது. கோலாலம்பூரில் இருந்து பீய்ஜிங் செல்லவேண்டிய மலேசிய விமானம் எம் எச் 370, வானில் மாயமானது. அந்த மர்மம் தொடர்பாக பலவித தியரிகள் உள்ளன. மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக, செய்தியாளர் ஒருவர் தயாரித்த புலனாய்வு ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து, இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு: இன்னொரு புறம் அமெரிக்க அரசு அதிகாரிகளோ, அந்த விமானம் காணாமல் போனதில் கொள்ளையர்கள் கைவரிசை இருக்குமோ என்றும் விவாதித்து வருகிறார்கள். ஒரு பயணியில் அதிர்ச்சி எஸ்எம்எஸ்: இந்த விமான மர்மத்தின் உச்ச கட்ட ஆச்சரியமாக ஒரு தகவல் வெளியானதாக சொல்லப்படுகிறது. அந்த மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி, தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து, தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளாராம். மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, டைஙகா கார்சியா என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக அந்தச் செய்தி பரவியது. இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவில் அமெரிக்க போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தீவில்தான் மலேசிய விமானம் இருப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி பிலிப்வுட் என்பவர் தனது நண்பரும் பத்திரிகையாளருமான ஜிம் ஸ்டோன் என்பவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளதாம். பழங்குடியினரின் சாட்சியங்கள்: மலேசிய நாட்டில் உள்ள கிராமவாசிகளில் சிலர் நாட்டின் வட கிழக்கு பகுதியை நோக்கி மாயமான மலேசிய விமானம் பறந்து சென்றதை தாங்கள் பார்த்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். மலேசியாவின் கெலாண்டன் பகுதியை சேர்ந்த டுனா மீனவர்கள், விவசாயிகள் மற்றும் கிராமத்தினர் என 9 பேர் போலீசாரிடம் கூறுகையில், வானில் வெளிச்சம் தெரிந்ததை நாங்கள் பார்த்தோம் என தெரிவித்துள்ளனர். மேலும், மார்ச் 8ம்தேதி மலேசிய ஏர்லைன்ஸ் அடையாளங்களுடன் கூடிய ஒரு விமானத்தை தாங்கள் பார்த்ததாக மாலத்தீவின் தாலு அடால் பகுதியிலுள்ள சிறிய தீவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை விமானம் பற்றி முழுமையான ஆதாரங்களுடன் எதுவுமே கண்டுபிடிக்க வில்லை என்பது தான் விஞ்ஞான உலகத்துக்கு ஏற்பட்ட மாபெரிய தலைக்குனிவு! * பாக்ஸ் செய்தி: இதுவரை மாயமான விமானங்கள் * 1937ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பெண் பைலட் அமெலியா இயர்ஹார்ட், துணை பைலட் நூன்னுடன் விமானத்தில் சென்றார். அட்லான்டிக் கடல் பகுதியில் ஹாவ்லாந்து தீவு பகுதியில் பறந்த விமானம் மாயமானது. * 1945ம் ஆண்டு 14 வீரர்களுடன் சென்ற 5 போர் விமானங்கள் பெர்முடா முக்கோண பகுதிக்கு மேலே பறந்த போது மாயமானது. * 1947ம் ஆண்டு இங்கிலாந்தின் ஸ்டார் டஸ்ட் ரக விமானம் 11 பேரோடு ஆண்டிஸ் மலை பகுதியில் பனிப்புயலில் சிக்கி மாயமானது. * 1962ம் ஆண்டு 107 அமெரிக்க வீரர்களுடன் வியட்நாம் சென்ற விமானத்தின் கதியும் அதே கதிதான். * கடந்த 2009ம் ஆண்டு 228 பேருடன் அட்லான்டிக் கடல் பகுதியில் பறந்த ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானம் மாயமானது. சுமார் 2 ஆண்டுகள் கழித்து அதன் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அது விபத்தில் வெடித்து சிதறியது உறுதியானது.

செவ்வாய், 27 மே, 2014

ஆயிரமாயிரம் குகைகள் மர்மங்கள்... - தேவராஜன்.


**************************************************************** 27. ஆயிரமாயிரம் குகைகள் மர்மங்கள்... - தேவராஜன். ************************************************************* மத்திய நேபாளத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் முஷ்டங் மலைபாங்கான பகுதி. இது பல ஆச்சர்யங்களும் மர்மங்களும் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இப்பகுதியில் மனிதர்களால் கட்டப்பட்ட வித்தியாசமான குகைகள் நிறைய உள்ளன. இங்கு இருக்கும் ஆயிரமாயிரம் குகைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னதாக முஷ்டங் பற்றி தெரிந்து கொள்வோம்! 700 ஆண்டுகளுக்கு முன்பு வரை முஷ்டாங் பல அரசர்கள் ஆண்ட பகுதி. முஸ்டாங் மாகாணம் பண்டைய திபெத்திய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. புத்த மத வழிபாட்டிற்கும், கலைக்கும் பெயர் பெற்ற இடமாக இருந்தது. இங்கிருந்து அண்டை நாடுகளுக்கு உப்பு வணிகம் நடைபெற்றது. 17 ம் நூற்றாண்டிற்கு பிறகு, இப்பகுதி பொருளாதாரத்தில் பின் தங்கியது. ஒரு கட்டத்தில் எவ்வித தொடர்பும் அற்றுப்போன பகுதியாகிப் போனது. சில குடும்பங்கள் இன்னும் இந்த குகைகளில் வசிக்கிறார்கள். குளிர் காலங்களில் வெதுவெதுப்பாக இருப்பதாகவும் ; குடி நீர் கிடைப்பது இப்பகுதியில் கடினமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த முஷ்டாங் பகுதியில் இருக்கும் ஆயிரக்கணக்கான குகைகளுக்கு உள்ளே செல்வதற்கு பாதைகள் கிடையாது. தரைப்பகுதியில் இருந்து சுமார் 155 அடி உயரத்தில் இந்த குகைகள் தென்படுகின்றன. பெரும்பான்மையானவை 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. அகழ்வாராய்சியாளர் ஏறக்குறைய ஒரு லட்சம் குகைகள் இருப்பதாக மதிப்பிடுகிறார். இவற்றில் பெரும்பான்மையானவை ஆராய்சிக்கு உட்படுத்தப் பாடாதவை மட்டுமல்ல; இன்னும் பல குகை இருக்குமிடமே கண்டறியப்படாமல் இருக்கிறது. இவ்வளவு உயரத்தில் இந்த குகைகளை எப்படி உருவாக்கினார்கள் ? எதற்காக, யார் இதை உருவாக்கியது ? இப்படி பல கேள்விகள் முதலில் இந்த ஆய்வு மேற்கொண்ட குழுவிற்கு ஏற்பட்டது. இந்தக் குகைகளை தொல்பொருள் ஆய்வாளர் பீட் எதென்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்தது. இவர் முதலில் 1981 ல் இப்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொண்டார். 2011ம் ஆண்டு எட்டாவது முறையாக இப்பகுதியை மார்க் அலெண்டெர்பெர் (கலிபோர்னிய பல்கலைக்கழகம்) மற்றும் ஜாக்குலின் இங் என்ற பெண் ஆராய்சியாளரும் (வெஸ்டர்ன் மெக்சிகன் யுனிவர்சிட்டி), மோகன் சிங் லாமா என்ற நோபாளிய தொல்பொருள் ஆய்வாளரும் ஆய்வு செய்தனர். மர்ம நிகழ்வுகள் : ஆய்வுக் குழுவினரில் இருவருக்கு குகைகளில் அடுத்தடுத்த ஆய்வின் போது , அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது. ஆய்வு தடை பட்டது. லிங்கன் எல்ஸ் என்ற விடியோ கிராஃபர் ஹெல்மெட் எடுத்த சமயத்தில், கற்கள் சரிந்து தலையில் விழுந்து மண்டை எழும்பு உடைந்து. ஆபத்தான கட்டத்தில் காத்மாண்டுவில் சிகிச்சை பெற்று பின் நலமடைந்தார். இன்னொருவர் ரிச்சர்ட் (மலை ஏறி மற்றும் போட்டோகிராபர்) விழுந்து அடிபட்டதில் முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டு ஹெலிஹாப்டரில் மீட்கப்பட்டார். இந்த மோசமான நிகழ்வுகள் அந்த குகைகளை பாதுகாக்கும் ஸ்ப்ரிட்டுகளினால் ஏற்பட்டது என்பது அந்த பகுதியில் வசித்த ஒரு லாமாவின் கணிப்பு. இந்தக்குகைகள் மர்மங்கள் பற்றி விவரிக்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் பீட் எதென்ஸ்: ‘இமய மலையின் பெரும்பகுதி ஒரு காலத்தில் கடலில் மூழ்கிய நிலையில் இருந்த நிலப்பரப்பு என்கிறார்கள். இமய மலையின் 5ஆயிரம்-6 ஆயிரம் அடி உயரத்தில் கடல் அலையின் அரிப்பின் சுவடுகள், கடல் உயிரினம் படிமம் ஆனவை எல்லாம் கிடைத்துள்ளன. அக்காலத்தில் பெரு வெள்ளம், அல்லது கடல் நீர் அங்கு புகுந்து இருக்கலாம், அதன் விளைவாக உயரமான இடத்தில் குகை அமைத்து தங்கி இருப்பார்கள். இப்படி கடல் நீர் மட்டம் உயர்ந்ததை அப்போது பல வரலாற்று,புராண நூல்களிலும் குறிப்பிட்டு இருக்கிறார்கள், இதனை‘ பெரு வெள்ளக்காலம்’ என்கிறார்கள். வெள்ளத்திற்கு பயந்தே மக்கள் உயரமான இடத்திற்கு குடிப்பெயர்ந்திருக்க வேண்டும்’ என்கிறார் அவர். பாக்ஸ் செய்தி * சாம்ட்ஜோங் குகையில், ஓர் இறந்த உடல் ஒரு சவப் பெட்டியில் இருந்தது. இறந்த உடல் வெறும் எலும்புக்கூடாக இருந்தது. பெட்டி மூடியின் மேல் ஒரு குதிரையின் மீது வீரன் ஒருவன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு நிழல் சித்திரம் இளஞ்சிகப்பு மையால் வரையப்பட்டிருந்தது. இடதுபுறம் செழிப்பன ஒரு மரம் அதன் வலதுபுறம் காய்ந்து போன மரம். இந்த குகை ஒரு வசதியானவர்களுக்கான மயான குகையாக இருந்திருக்க வேண்டும். மேலே சொன்ன மம்மிகளுடன் 30 சிதைந்த மம்மிகள் கிடைத்தன. மம்மிகள் மரத்தாலான சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தன. 2 ஆயிரம் வருடங்கள் பழமையானவை. இவற்றின் உடலில் பட்டையான துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. தாமிர கை வளையல்கள், கண்ணாடியாலான நீள் பாசிவடிவ மணி மாலைகள்,சங்கு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. ***********

சனி, 17 மே, 2014

குழந்தைகளின் சொர்க்கம்! - தேவராஜன்


குழந்தைகளின் சொர்க்கம்! - தேவராஜன் ---------............................................................ 26 .................................................................... ‘ஜாக்ஸன் 5’ இசைக் குழுவில் சுண்டிவிட்ட நாணயம் போல சுழன்று சுழன்று அவன் ஆடிப் பாடியபோது ‘என்ன ஓர்அழகான, திறமை மிக்கச் சிறுவன்!’ என்று அமெரிக்காவே வியந்தது! அவன் ஒன்பது வயதிலேயே நட்சத்திர அந்தஸ்தை பெற்றான். பின்னாளில் உலகமே பாப் இசை மன்னன் என்று அவனைக்கொண்டாடியது. அந்தச் சிறுவன் தான் மைக்கேல் ஜாக்சன்! மைக்கேல் ஜாக்சன் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாக பிறந்தார். மைக்கேல் ஜாக்சனின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர். இவர் தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் ஆபரேட்டர். ஜோசப் ஒரு இசைக் கலைஞன். ஜோசப் தன் சகோதரர்களுடன் பாண்டு வாத்திய குழுவில் இருந்தார். ஆனால் அவரால் சாதிக்க முடியவில்லை. அதனால் தன் மகன்களுக்கு கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். ஆறு வயதில் ஆரம்பப் பாடசாலையின் பாடல் போட்டியில் மைக்கேல் ஜாக்சன் முதல் பரிசு வாங்கினார் . பின் இசையில் நாட்டம் அதிகமாக மைக்கல் ஜாக்சன் தன் சகோதரர்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற குழுவில் இணைந்தார். ‘ஜாக்ஸன் 5’ இசைக் குழுவின் மூலம் அந்தச் சின்ன வயதிலேயே இசை நிகழ்ச்சிகளை அமெரிக்கா முழுக்க நடத்தி நிறைய பணம் சம்பாதித்தான் மைக்கேல் ஜாக்சன்! அதே சமயம் அந்தச் சிறுவன் ஒரு சராசரி குழந்தைக்கான விளையாட்டு, பொழுது போக்குகள், கதை கேட்டல், அன்புச் சீராட்டல்கள், பெற்றோரின் கதகதப்பில் தூங்குதல், பொம்மைகளோடு விளையாடுதல் போன்ற இன்பங்கள் அவனுக்கு கிடைக்கவேயில்லை. அதுமட்டுமல்ல; வீட்டில் அப்பா, “ஏய் குரூபியே...” என்றுதான் அவனை அழைத்தார். சகோதரர்கள், “நீள மூக்குக்காரா...” என்று சொல்லி கேலி செய்தார்கள். ‘அழகில்லாதவன்’ என்று கேலி செய்யப்பட்டதாலும், தந்தையின் குரூரமான தண்டனைகளாலும் மன ரீதியான அழுத்தத்தில் இருந்த அந்த இளைஞன், தன் பால்ய கால ஏக்கங்களை நிறைவேற்ற நேவர்லேன்ட் என்கிற பண்ணை வீடு ஒன்றை வாங்கினார். லாஸ் ஏன்ஜலஸ்-லிருந்து 50 மைல் தொலைவில் உள்ளது சாண்டா பார்பரா. இயற்கை எழில் மிக்க ரம்மியமான சோலைகள் மற்றும் பசிபிக் கடலின் அலைகளாலும் சூழப்பட்ட அழகு பகுதி அது. உலகப்புகழ்ப்பெற்ற பணக்காரர்களின் ஓய்விடமாகவும் இவ்வூர் திகழ்கிறது. சாண்டா பார்பராவின் 50 மைல் வடமேற்கில் உள்ளது லாஸ் ஆலிவ்ஸ். இங்குதான் சுமார் 2600 ஏக்கர் பரப்பளவில் நெவர்லேண்ட் ரான்ச் ஹோம் எனப்படும் அழகிய பண்ணைவீட்டை முன்னாள் பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் தனது ஓய்விடமாக வைத்திருந்தார். நெவர்லேண்ட் ஒரு பிரம்மாண்டமான வீடு. மாயாஜாலக் கதைகளில் வருவது போன்ற அமைப்புடையது. இதை தன்னுடைய 33ம் வயதில், மிகப் பெரும் கற்பனா சக்தியில் மைக்கல் ஜாக்சன் அதை வடிவமைத்திருந்தார். அதை உலகின் மிகப் பெரிய சிறுவர் பூங்கா என்றே சொல்லலாம். இந்த மாளிகையில் ஏழு பாடும் குள்ளர்கள், சிம்பன்ஸி, மலைப்பாம்பு, மூன்று ஒட்டக சிவிங்கிகள், மான்கள், வாத்துக்கள், வரிக் குதிரைகள், நெருப்புக் கோழிகைளைக் கொண்ட ‘மினி ஜூ’ இருந்தது. சில்வர் ஓக் மரக்காடுகளில் பறவைகள் பாடின. காமிக்ஸ் பாத்திரங்களின் சிலைகள் நிறுவப்பட்டிருந்தன. வீட்டின் வாசலில் இருந்து அந்த மாளிகை சுற்றி ஒரு சிக்கு புக்கு ரயில் புகை விட்டுக்கொண்டு ஓடியது. நடு நடுவே குட்டி ஸ்டேஷன்கள். அதில் சாக்லேட் மற்றும் ஐஸ்கீரிம் விற்கும் கடைகள். குழந்தைகளுக்கான சினிமா தியேட்டர். அங்கேயிருந்த ஏரியில் பொம்மை வடிவிலான படகுகள். குழந்தைகளுக்குப் புரியும் வகையிலான படங்கள் கொண்ட புத்தகங்கள் நிரம்பிய லைப்ரரி இருந்தது. ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஸ்பெஷல் படுக்கை வசதிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உண்டு. முழுக்க முழுக்க பொம்மைகளால் நிரப்பப்பட்ட பெரிய ஹால் என்று குழந்தைகளின் சொர்க்கமாகவே இருந்தது அந்த மாளிகை. இந்தப் பிரம்மாண்டமான மாளிகையில் நிறைய குழந்தைகளை கூட்டி வந்தார். அவர்களுடன் ரயிலில் அந்த மாளிகையைச் சுற்றிச் சுற்றி வந்தார். தியேட்டரில் அவர்களுடன் அமர்ந்து பல காமிக்ஸ் படங்களைக் கண்டு களித்தார். ரோஸ்வுட் பியானோவில் இசை கற்றுக் கொடுத்தார். தான் மிகவும் ஆசைப்பட்டு கட்டிய ‘நெவர்லேண்ட்’ மாளிகையில் மொத்தம் நான்கு ஆண்டுகளே வாழ்ந்தார் ஜாக்ஸன். கட்டற்ற செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அந்தக் கனவு மாளிகை மூடப்பட்டது. மிகப் பெரிய கனவு மாளிகை கட்டி, அதில் தானும் ஒரு சிறுவனைப் போல் வாழ நினைத்த அந்த இசை அரசனின் கனவு பாதியிலேயே கலைந்து போனது. ==================================*****************************

வெள்ளி, 2 மே, 2014

மரண பள்ளத்தாக்கில் நடக்கும் கற்கள்! - தேவராஜன்


மரண பள்ளத்தாக்கில் நடக்கும் கற்கள்! - தேவராஜன் அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு தேசிய பூங்காவின் பெயர் டெத் வேலி நேஷனல் பார்க். இந்த தேசிய பூங்கா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட ‘டிம்பிஸா’ எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும். டிம்பிஸா பழங்குடியினரால் இப்பள்ளத்தாக்கிற்கு டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்தது. 1849ம் ஆண்டில் தான் ‘கலிபோர்னியா தங்க நெருக்கடி’ காலப்பகுதியில் இதற்கு டெத் வேலி எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கலிபோனியா தங்க நெருக்கடி காலத்தின் போது இந்த பள்ளத்தாக்கு வழியாக அமெரிக்கர்கள் அல்லாத குழுவொன்று கடந்து சென்றிருக்கிறது. அக்குழுவில் பயணித்தவர்களில் ஒருவர் இப்பகுதியில் உயிரிழந்து விட்டார். அதனால், கனிம வள ஆய்வாளர்களால் இது டெத் வேலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. 1850ம் ஆண்டு காலப்பகுதிகளில் மரணப் பள்ளத்தாக்கில் ஆய்வுகள் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்கள் பல சுரங்க ஆராய்ச்சிகள் மூலமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1933 ம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ஹுவரினால் 2 மில்லியன் ஏக்கர் பிரதேசமும் தேசிய ஞாபக சின்னமாக மாற்றப்பட்டது. 1994ம் ஆண்டில் 1.3 மில்லியன் ஏக்கர் பிரதேசம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதுவே அமெரிக்காவின் 4ஆவது பெரிய தேசிய பூங்காவாகும். இப்போது போது இப்பிரதேசத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி டிம்பிஸா பழங்குடியினர் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 1940ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட வாழ்விடங்களில் தண்ணீர் மற்றும் தொலைபேசி வசதிகளுடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவே இப்பிரதேசத்தின் மிகச் சுருக்கமான வரலாறு. இந்த மர்ம பிரதேசத்தில் தான் விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளருக்கும் இதுவரை பிடிக்கொடுக்காத புதிர்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த டெத் வேலி என்கிற மரண பள்ளத்தாக்கில் மணல் பரப்பில், ஆயிரக்கணக்கான கற்கள் தானாக இடம்பெயர்ந்து செல்கின்றன. இந்த அதிர்ச்சி தகவல் 1948ல் வெளியாகியது. சாதாரணமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆள் நடமாட்டமோ பூச்சி புழுவோ தென்பட வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு பாலைவானம் போன்று காட்சி தருகின்றது. ஆனாலும் இந்தப் பகுதியில் ஆங்காங்கே மணல் பரப்பில் ஆயிரக்கணக்கான கற்களின் நடமாட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை என்கின்றனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள். மணல் பரப்பில் இந்த கற்கள் ஏன் நகருகின்றன? எதற்காக நகருகின்றன? எப்படி நகருகின்றன என்ற ஆயிரம் ஆயிரம் கேள்விகளுடன் ஆராய்ச்சியாளர்கள் இங்கு படையெடுக்க ஆரம்பித்தனர். 1972 ம் ஆண்டிலிருந்து 1980ம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு ஆராய்ச்சிகள் தீவிரம் அடைந்தது. இருப்பினும் இங்கே கல் தனது நகர்வைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர ஆராய்ச்சிகளுக்கான விடைகள் மட்டும் நகர்ந்தபாடில்லையாம்! இங்குள்ள கற்கள் மூன்று ஆண்டுகளில் முழுப் பிரதேசத்தையும் சுற்றி வருகிறதாம்! இதனை அந்தக் கற்கள் பணிக்கும் பாதை சுவடே அடையாளம் காட்டுகிறது. இங்கே கற்களின் பயணம் சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணிக்க ஆரம்பித்து, சமமாக அப்பிரதேசத்தை சுற்றி வருகிறது. இதேபோல சில சமயங்களில் தனியாக ஒவ்வொரு திசையிலும் பயணிக்கும். இதன்போது பின்னோக்கிய நகர்வினையும் சில சந்தர்ப்பங்களில் காணலாம். ஆனால் அதற்கான காரணத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை! ஆனால் அவை நகர்ந்துள்ள விதம், பயணித்த பாதை மட்டும் தெளிவாக இருக்கிறது இந்த பள்ளத்தாக்கிற்கு அருகில் ஒரு மலை இருக்கிறது. அந்தமலையில் இருந்து விழும் கற்களே இந்த மணல் பரப்பில் நடக்கிறது. மலையில் இருந்து விழும் சில கற்கள் 10 ஆயிரம் அடி வரை நகர்கின்றது. சில கற்கள் சில சமயம் ஒரிரு அடிகள் வரை மட்டுமே நகர்கின்றது. கல்லின் நிறைக்கும் அவை நகர்வதற்கும் தொடர்புகள் இல்லை. இங்கு மணல் பரப்பில் கற்கள் மர்மமாக நகர்வதற்கு காரணம் இந்த பாலைவனத்தின் அமைப்பா? அங்குள்ள களி மண் காரணமா? காற்றின் வேகத்தினால் தள்ளப்படுகிறதா? மேலே சொன்ன எந்தக் காரணமும் அதற்கு சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆக இந்த மர்மத்திற்கான விடை ஒரே குழப்பம்தான்! அது இன்னும் தீரவில்லை! நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியினாலேயே கற்கள் இவ்வாறு நகர்கிறது என மெஸசெட்ஸ் பகுதி ஹெம்ஷயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் சொன்ன விடையிலும் உறுதியில்லை. இந்த மரணப் பள்ளத்தாக்கிலுள்ள மர்மம் என்ன? என்ற கேள்வியுடன் ஆராய்ச்சிகள் நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆராய்சிகளை விட இங்கு கற்கள் அதிவேகத்தில் நகர்கின்றன என்பது ஒரு பெரிய ஆச்சரியம்! *****************