சனி, 20 ஏப்ரல், 2013


20.4.2013 தினமலர் பெண்கள் மலரில் இடம் பெற்ற எனது இல்லத்தரசியின் கடிதம் இது. அன்பு தோழிகள் அனைவரும் நலமா? இன்னும் சில தினங்களில் அக்னி நட்சத்திரம் வர இருக்கிறது. வெயில் பற்றி நினைத்தாலே, வியர்க்கிறது நமக்கு. ஆனால், இந்த வெயிலை ரசித்து,பாராட்டி ஒரு அங்கம்பாக்கம் சந்திராமணி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். படிக்கவே சுவாரஸ்யமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. தோழிகளும் படிக்கட்டுமே என்று கடிதத்தின் சுருக்கத்தை இங்கு எழுதுகிறேன். படித்துவிட்டு, வெயில் பற்றி வித்தியாசமான உங்கள் அனுபவத்தையும் எழுதி அனுப்புங்கள்! ‘மழையைப் போன்று வெயில் கொண்டாடப்படுவதில்லை. வெயில் அடிக்க வேண்டும் என்று யாரும் யாகம் வளர்ப்பதில்லை. எந்த ராகமும் வெயிலை வரவழைப்பதில்லை. மலை முகட்டில் இருந்து பொழியும் அருவியை ரசிப்பவர்கள். சூரியனிடமிருந்து பொழியும் வெயிலை யாரும் ரசிப்பதேயில்லை. மழை மகிழ்ச்சியோடு தொடர்பு படுத்தபடுகிறது. வெயிலுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. கவிஞர்கள் கூட வெயில் பற்றி அதிகம் கவிதை எழுதுவதில்லை. எப்போதாவது அடை மழை கொட்டித் தீர்த்தால், அதன் பிறகே வெயில் வரவேற்கப்படுகிறது. மரங்கள் வெயிலின் சூட்டை பருகிவிட்டு, சக்கையாய் வெளிச்சத்தை துப்பும் வெளிச்சத்தை மட்டும் நாம் ரசிக்கிறோம். வெயில் என்றதுமே பழயை நினைவுகள் அலையடிக்கின்றன மனதில். வீட்டின் ஓடுகளுக்கிடையே கம்பி கம்பியாய் விழும் வெயில், முகம் பார்க்கும் கண்ணாடியில் வெயிலை வாங்கி, சுவற்றில் அதை நடனமாட வைத்து மகிழ்ந்தது, வெயில் தகிக்கும் மணலில் ஈச்சம் பழம் பழுக்க வைத்த ருசித்தது, நுங்கு தேடி அலைந்தது, உச்சி வெயிலில் கோயில் திருக்குளத்தில் தவளைப்போல கிடந்த, மாலையில் கரையேறுவது, பூதக்கண்ணாடி வழியே வெயிலை மொத்தமாக வாங்கி, அதை காகிதத்தின் ஒரு பகுதியில் குவித்து,நெருப்பு இல்லாமல் காகிதத்தை எரிய வைத்து மேஜிக் காட்டியது எல்லாம் நினைவுக்கு வருகிறது. கோடை காலம் வெயிலின் திருவிழா. ஊர் என்னும் கோப்பையில், சூரியன் வெயிலை நிரப்பிக் கொண்டிருக்கிறான். வெயில் நிரம்பிய கோப்பையில் பகல் என்ற அழகை யார் ரசிக்கிறார்கள்? வெயில் என்ற டைட்டில் வைக்கப்பட்டதற்காகவே, வெயில் திரைப்படத்தை பத்துமுறைக்கு மேல் பார்த்தவள் நான்.’ இப்படி வெயிலின் அருமை பெருமைகளை நிறைய எழுதியிருக்கிறார். கடிதம் படித்ததும் வெயில் பற்றிய வெறுப்பு கொஞ்சம் எனக்கு குறைந்ததுதான் போனது. உங்களுக்கும் அப்படிதானே? அன்புடன், ஸ்ரீ

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

வேகாத பச்சை மண்சட்டி/81/


வேகாத பச்சை மண்சட்டி/81/ 24.3.2013/ வருத்தத்தோடு இருந்த நாம தேவரிடம், “ஏன் வருந்துகின்றாய்? என்ன நடந்தது?” என்றார் விட்டல். “ஒரு பானை செய்பவன் சட்டி தட்டுங்கட்டையால் என் தலை மேல் தட்ட வந்தான்! நான் தடுத்தேன். அவன் என்னை, ‘இது வேகாத பச்சை மண்சட்டி!’ என்று இழித்துரைத்தான்” என்றார். “மற்றவர்கள் தலையிலும் தட்டினாரா?” என்றார் விட்டல். “ஆமாம். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. நான் உமது பக்தன். என் தலையில் எப்படி அவன் தட்டலாம்? ” என்றார் நாமதேவர். “நான் கடவுளின் பக்தன்; எனக்குப் பக்தி அதிகம்; இறைவன் என் பிரியன்’ என்ற அகங்காரம் உன்னிடம் உள்ளது. இந்த அகங்காரத்தை நீ விட்டொழிக்கணும். அதற்காக, பெற்றோர் தம் பிள்ளைகளை மற்றோர் ஆசிரியரிடம் அனுப்பி அறிவு புகட்ட வேண்டியிருப்பது போல, நானும் உன்னை ஒரு குருவிடம் அனுப்புகிறேன். நீ அறிவையும் பணிவையுங் கற்றுக் கொள். அது வரையிலும் நீ வேகாத பச்சை மண்சட்டியே தான்!” என்றார் பண்டரீபுரவிட்டல்! “இறைவா, தங்களைவிட மேலானவரா குரு?” “ஆம். உன் குரு அருகிலுள்ள காட்டில் ஒரு மண்டபத்தில் படுத்திருக்கின்றார். அவரிடம் போ” என்றார். அவர் சொற்படியே காட்டிற் புகுந்தார். மண்டபத்தில் படுத்திருக்கும் வயோதிகர் ஒருவரை கண்டார். அக்கிழவர் அங்கிருந்த ஒரு சிவலிங்கத்தின் மேல் தன் கால்களைப் போட்டு கொண்டுபடுத்திருந்தார்! சிவலிங்கத்தின் மேல் கால் படக்கூடாது என்ற சாதாரண உண்மை கூட இவருக்குத் தெரியவில்லையே” என்று கருதி அருகில் சென்றார். “வா, விட்டல் அனுப்பினாரா?” என்றார் கிழவர்! “குருவே, விட்டல் என்னை அனுப்பிய விஷயம் கூட அறியும் நீங்கள் இப்படிச் சிவலிங்கத்தின் மேல் காலை போட்டுக் கொண்டிருக்கக் கூடாதென்பதை அறியாதது ஏன்?” என்று கேட்டார்! “ அப்படியா? சிவலிங்கத்தின் மேலேயா என் கால் கிடக்கின்றது? எனக்கு வயோதிகத்தால் கால்கள் உணர்வற்றுப் போனதால் அவை எங்கு கிடக்கின்றன என்பதை ஸ்பரிசத்தால் அறிய முடியவில்லை; பார்வை மங்கி விட்டதால் கண்ணால் பார்த்தறியவுங்கூட இயலவில்லை. கால்களை நகர்த்தவும் சக்தியில்லை. நீ தயவு செய்து அக்கால்களைச் சிவலிங்கமில்லாத இடத்தில் எடுத்துப்போட்டு விடு” என்றார். உடனே அக்கிழவரின் இருகால்களையும் பிடித்துத் துõக்கி வேறோரிடத்தில் நகர்த்திப் போட்டார். என்ன ஆச்சரியம்! சிவலிங்கம் அக்கால்களின் அடியில் வந்து நின்றது! எத்தனை முறை எத்தனை வெவ்வேறிடங்களில் அவர் கால்களை மாற்றி மாற்றி இழுத்துப் போட்ட போதும், அத்தனை முறையும் அங்கங்கேயும் சிவலிங்கம் குருவின் காலடியில் வந்தே நின்றது! இப்போது நாமதேவரது உள்ளம் உண்மை விழிப்புற்றது! இறைவன் இல்லாத இடமே இல்லை. தன்னுள்ளும் இறைவன் இருக்கிறார் என்ற ஞானம் நாம தேவருக்குப் பிறந்தது. அவர்,வெந்த மண் சட்டியாகிவிட்டார்! - தேவராஜன்.

அன்பிலார் இறைவனை அறியார்/82/


அன்பிலார் இறைவனை அறியார்/82/31.3.2013/ இன்னும் ஒரு நிமிஷம் வாழணும்னு ஒவ்வொருத்தரும் ஆசைப்படுறதுக்கு எங்கிருந்தோ, யார்கிட்டேருந்தோ கிடைக்கிற அன்புதான் காரணம். ஒருவன் மீது இரக்கம், அன்பு செலுத்த இந்த உலகத்தில் ஒருத்தர் கூட இல்லை என்றால், யாரும் இங்கு வாழ ஆசைப்படமாட்டார்கள்! அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஓர் உணர்வும் அனுபவமும் ஆகும். அது வலிமையான பாசத்தையும் நெருக்கமான தொடர்பையும் காட்டுகின்ற ஓர் உணர்ச்சியை குறிக்கிறது. உலக மக்கள் அனைவரிடமும், எல்லா உயிரினங்களிடத்தும்கூட அன்பு செலுத்தவேண்டும் என்று தமிழ் நீதி நுõல்கள் கூறுவதிலிருந்து அன்பு என்பது தொடர்பு கொண்டவர்களிடத்து மட்டுமன்றி எவ்வுயிர்களிடத்தும் கொள்ளக்கூடிய பற்று என்றாகிறது. அன்பு என்ற உணர்வு மனிதர்களிடத்தில் மட்டுமல்ல; விலங்குகள், தாவரங்களுக்குக்கூட உண்டு. என்னதான் விலங்குகளிடம் அன்பு காணப்பட்டாலும் அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் இருக்கும். மனித அன்பு என்பது சுயநலமாக வெளிபடுகிறது. ஆளை பார்த்தல் ஒரு அன்பு. ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு, தனியாக இருக்கும் போது ஒரு அன்பு. கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒருஅன்பு பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு என்று இருக்கிறது. இவற்றை எல்லாம்விட மேலானா அன்பு ஒன்று உண்டு அது தான் தெய்வீக அன்பு. தெய்வீக அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, தன்னையே கொடுக்கக் கூட தயங்காது. இந்த அன்பு மனிதன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காது, தனக்கு ஏதாவது கைமாறு கிடைக்குமா என்று பார்க்காது, ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காது, யாரையும் மனம் நோக பேசாது, இருக்கும் சூழ்நிலையை பார்க்காது ஆனால் பிறருக்கு எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். இந்த அன்பை நாம் யோகிகளிடமும், ஞானிகளிடமும் பார்க்கலாம். வாடியப் பயிரை கொண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரிடம் வெளிப்பட்டது தெய்வீக அன்பு. எல்லாரும் இன்புற்றிருக்க அல்லால் வேறொன்று அறியேன் என்று தாயுமானவரிடம் வெளிபட்டது இந்த தெய்வீக அன்பு. ‘கருணையும் இரக்கமும் பொங்கும் உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்’ என்றார் கண்ணதாசன். கருணை, இரக்கம், அன்பு மறந்து வாழும் மக்கள் கடவுளை தேடி எங்கு அலைந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியாது. அன்பில்லாதவர் இறைவனை அறியார். ஏனென்றால், இறைவனே அன்பாகவே இருக்கிறார். - தேவராஜன்.

அன்பினால் ஒட்டிக்கொள்க!/83/


அன்பினால் ஒட்டிக்கொள்க!/83/7.4.2013/ நாம, வீட்டைப் பழுதுபார்த்து, வீட்டுக்கு பெயின்ட் அடிப்பது, வீடு ரொம்ப நாள் நிலைத்து இருக்கணும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்த வீட்டில் நாம ஆபத்து இல்லாம ஆரோக்கியமா, நிம்மதியா இருக்கணும் என்பதற்குத்தானே? நாம, நல்லவிதமா அந்த வீட்டில் வாழணும்னு ஆசைப்பட்டுதான் இதெல்லாம் செய்றோம். அது மாதிரிதான் வழிபாடும். நாம, இறைவனை வணங்குவதால் இறைவனுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான இறைவன், தம்மை வணங்குபவர்களுக்கு, தான் அனுபவிக்கும் அழிவில்லாத இன்பத்தை அடைய பக்தர்களுக்கு அருள் புரிகிறார். நாம் இந்த உடல் எடுத்ததின் பயன் இறை வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே என்ற வாழ்வியல் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நாம் வாழும் பிறவி இறைவன் நமக்குக் கொடுத்த கொடை. ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று அவ்வை சொன்னது போல,அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் இறைவனை வழிபடுவதற்கு பயன்படுத்தவேண்டும். எப்போதும் பேரின்ப மயமாக உள்ள இறைவன், இவை இல்லாமல் துன்புறும் உயிர்களுக்கு இரங்கி, பிறப்பெடுத்த உயிர்கள் எல்லாம் பொன், பொருள், பெண் என சிற்றின்ப பற்றை விட்டு, இன்பமயமான தன்னைப் பற்றுதல் பொருட்டு இந்த உடல், ஐம்பொறிகளைப் படைத்தார். இறைவன் எல்லா வல்லமையும் உடையவர் என்றாலும், அவரால் இன்பத்தை ஊட்ட முடியுமே அன்றி, இன்பத்தை நம்மை நுகர வைக்க முடியாது. அந்த இன்பத்தைப் பருகுதலுக்கு நாம் தான் இறைவனிடம் கை குவித்து யாசகம் கேட்க வேண்டும். இவை எல்லாம் ஒரே நாளில் எல்லாம் நடந்து விடாது. அலையும் மனமும், ஆசைபடும் எண்ணங்களும் உடனே நம்மை விட்டு ஓடிவிடாது. அதை நாம் விலக்கிக்கொள்வதும் சிரமம். நாம் சிறிது சிறிதாகப் பக்குவப்பட வேண்டும். தண்ணீரில் தத்தளிக்கும் எறும்புக்கு நீட்டிய குச்சி போல,இறைஇன்பத்தை பக்தி எனும் குச்சிகாட்டி ஏறிவா என தாயுள்ளத்தோடு இறைவன் அருள்கிறான். இறைவன் இத்தகைய கருணை செய்த போதும், நாம் அதன் பெருமை உணராது, குச்சியில் ஏறிய எறும்பு கரை சேரக் கருதாது ஆடி மீண்டும் நீரில் விழுவது போல், நாம் இறைவனைப் பற்றாமல், பக்தி செய்யாமல், சாதாரண பொன், பொருள், உலக ஆசையில் மயங்கிவிடுகிறோம். ஒரு தாய் தவறு செய்யும் குழந்தையைப் பழி வாங்கும் எண்ணமின்றித் திருத்தும் நோக்கத்தில் மட்டுமே கடிந்து கொள்கின்றாளோ அது போன்றே தாயினும் நல்ல இறைவன் நமக்கு அவ்வப்போது சில துன்பங்கள், கஷ்டங்கள், தடங்கல்கள் கொடுத்து திருத்த ஆசைப்படுகிறார். இந்த உண்மையை உணர்ந்து, சிற்றின்பத்தைக் குறைத்து, நம்மைப் படைத்த இறைவனை, நம் நன்மைக்காக நாளும் பொழுதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நினைந்து நினைந்து பெருகுகின்ற அன்பு என்னும் ஒட்டுப் பொருளினால் அவரைப் பற்றிக்கொண்டால் இன்பமே எந்நாளும்; துன்பமில்லை! - தேவராஜன்.

‘விஜய’ வருஷம் ‘ஜெயம்’ உண்டாகட்டும்!/ 84


‘விஜய’ வருஷம் ‘ஜெயம்’ உண்டாகட்டும்!/ 84/ 14.4.2013/ இன்று தமிழ்ப்புத்தாண்டு. இந்த விஜய வருடம் எல்லாருக்கும் விஜயத்தையே சேர்க்கட்டும். அதற்கு, நாம் வணங்கும் இறைவன் பூர்ணமாக அருள்புரியட்டும். இந்த இனிய புத்தாண்டின் தொடக்க நாளில், ஓர் அர்த்தமுள்ள ஆன்மிக சிந்தனையை மனதில் பதித்து, அதை பின்பற்றலாமா? கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பர். கோபுரதரிசனம் செய்ய மேல்நோக்கி தலையால் வணங்க வேண்டும். கோயிலில் உள் சென்ற உடன் முதலில் விநாயகருக்கு தோப்புக்கரணம் செய்யணும். கோயிலில் சிலர் பிரதட்ணம் பண்ணுவர். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்கின்றனர். அஷ்டாங்கம் என்பது தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், புஜங்களிரண்டு என்னும் எட்டவயங்களும் நிலத்தில் பொருந்தும் படி வலக்கையை முன்னால் நீட்டியும் இடது கையை பின்னும் நேரே நீட்டிய பின் அம்முறையே மடக்கி வலபுறமும் இடபுறமும் மண்னிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டிவலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்னிலே பொருந்தச் செய்வதாகும். பெண்கள் செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து அவயவங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம். இப்படி உடலுறுப்புகளை வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். திருப்பூந்துருத்தி தேவாரப் பாடலில் அப்பர் அடிகள் சாதாரிப்பண்ணில் அமைந்த திருவங்கமாலையில் உடலுறுப்புகளை விளித்து திருப்பூந்துருத்தித் திருக்கோயில் உறை புட்பவன நாதரைப் போற்றிப் பாடியுள்ளார். தலை, கண்கள், செவிகள், மூக்கு, வாய், கைகள், கால்கள் என விளித்து இறைவனை வழிபட தேவாரப் பண் இசைத்தார் அப்பர் அடிகள். சிவனின் திருவுருவம் கண்டு பரவசம் கொள்வதற்கே கண்கள். சிவன் திருநாமங்களை உளமார உச்சரிப்பதற்கே அதரம். சிவனின் பெருமைகளை கேட்டு இன்புறுவதற்கே செவிகள். இப்படி இந்த உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு உறுப்பும் இறைவனைப்போற்றுவதற்கு அமைந்தவை. ஆக்கை யாற் பயனென்- அரன் கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப் போற்றியென்னாதவிவ் ஆக்கை யாற்பயனென்? என்று ஆரம்பித்து, வழிபாட்டில் உடல் உறுப்புகளின் பங்கு என்ன என்பதை பாடுகிறார் அப்பர். தலையே நீ வணங்காய்- தலை மாலை தலைக்கணிந்து தலையாலேபலி தேடுந் தலைவனைத் தலையே நீ வணங்காய். கண்காள் காண்மின்களோ – கடல் நஞ்சுண்ட கண்டன் றன்னை எண்டோள் வீசிநின்றாடும்பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ. செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள எரிபோன் மேனிப்பிரான்நிறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ. வாயே வாழ்த்து கண்டாய் - மத யானை யுரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை வாயே வாழ்த்துக் கண்டாய். கைகாள் கூப்பித் தொழீர் – - கடி மாமலர் தூவி நின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர் என்றோ ஒரு நாள் மண்ணுக்கோ தீக்கோ இரையாகும் இந்த உடலை, இறைவனை வழிபட பயன்படுத்திக்கொண்டால், இந்த வருஷம் மட்டுமல்ல; எந்த வருஷமும் நமக்கு ஜெயமே தரும்! - தேவராஜன்.

எட்டில் இரண்டு/85/


எட்டில் இரண்டு/85/ 21.4.2013/ அஷ்டாங்க யோகங்கள் என்பது எட்டுவகை யோகங்கள். அவை இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம். சமாதி. இந்த யோகங்கள் எல்லாம் காடுகளில் மலைகளில் குகைளில் இருக்கும் சித்தர்களும் யோகிகளும் செய்ய வேண்டியவை; அவை தவம் செய்வோர்மட்டும் கடைபிடிக்க வேண்டியவை என்று நாம் நினைத்து விடுகிறோம். இந்த யோக நெறிகள் சாமனியர்களுக்கும் இல்லறத்தாருக்கும் மிகவும் பயன்படுபவை. பலன் தரக்கூடியவைதான். ஒருவர் வாழும் வாழ்க்கையில் இந்த யோகங்கள் எல்லாவற்றையும் கடைபிடிக்க இயலாவிட்டாலும் கூட, எல்லாரும் இயமம், நியமம் இரண்டையும் கடைபிடிக்க முடியும். கடைபிடிக்க வேண்டும். இயமம் என்ற யோக நெறி வாழ்க்கையின் அடிப்படைத் தகுதியை சோதனை செய்துகொள்ளவும், சுத்தகரித்துக் கொள்ளவும் போதிக்கிறது. இயமம் என்பது வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கத்தைக் குறிக்கும். அதாவது நாள்தோறும் இறைவனை வணங்குதல், உயிர்களிடத்தில்அன்பு, உண்மையைக் கடைபிடித்தல், கொல்லாமை, புலன் அடக்கம், ஆசை இல்லாமை ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்தலே இயமம் எனும் முதல்படிநிலையாகும். இந்த யோக நெறியை கடைபிடிப்பதின் வழியாக நாம் இறைவனை உணர எடுத்து வைக்க முதல் படியாக அமையும். அடுத்த யோக நெறி நியமம் . இது ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தத்தை அடைய மேற்கொள்ளும் செயல் வடிவங்களைக் குறிக்கும். அதாவது துõய்மை, நிறைவு, நோன்பு, கல்வி,அபயம் அடைதல் ஆகியனவை. இந்த இரு யோக நெறிகளை நாம் கடைபிடிப்பதன் மூலம் நமக்குள் ஒரு கட்டுப்பாடு ஏற்படும். தன்னைக் கட்டுப்படுத்தி ஆளும் ஆற்றளுடையவனால்தான் மற்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும். இந்த பண்புகள் மூலம் உள்ளத்திற்குத் தீயன செய்கின்ற செயல்களை விலக்குகின்றபோது அகத்துõய்மையைப் பெற முடிகின்றது. அகத்துõய்மை பெற்றவர்களால்தான் புறத்துõய்மையை எளிதில் பெற இயலும். இயமம், நியமம் தரும் அனுபவமாக வருவது அடக்கம். அடக்கம் அனைத்து உயர்வுகளையும் நல்கும் தன்மையுடையது. அதனால் அவ்வடக்கத்தைப் பொருளாகக் கருதிக் காத்தல் வேண்டும். உயிருக்கு அடக்கத்தைப் போன்ற செல்வம் வேறு எதுவும் கிடையாது. ஆமைபோன்று ஐம்பொறிகளையும் அடக்கி வாழ வேண்டும் அது மிகப்பெரிய ஆற்றலாக வெளிப்படும் என வள்ளுவர் எடுத்துரைக்கின்றார். பதஞ்சலி முனிவர் அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், ஆசை இன்மை ஆகிய ஐந்து கட்டுப்பாடுகளை இயம நெறியில் பின்பற்றக்கூடியவை என்கிறார். இதனையே வள்ளுவரும் இன்னாசெய்யாமை, வாய்மை, கள்ளாமை, துறவு, அவா அறுத்தல் என்று திருக்குறளில் எடுத்துரைக்கின்றார். எட்டு யோகங்களில் முதல் இரு யோகங்களை பின்பற்றினாலேயே வாழ்க்கை லட்டுப்போல தித்திக்கும். இறையருளும் சித்திக்கும்! -தேவராஜன். ****************************************

இறைவன் மீது ஆசைபடலாமா?


இறைவன் மீது ஆசைபடலாமா?/86/ 28.4.2013/ இந்த வாழ்கை நாம் மகிழ்ச்சியாக வாழத்தான். பிறக்கும் எவ்வுயிரும் கஷ்டப்படுவதற்காகப் பிறப்பதில்லை. இது இயற்கை. இந்த இயற்கையை நாம் புரிந்து கொண்டு வாழ்ந்தால் நல்லது. புரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தால், அதை சரி செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஒரு உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்கிறோம். நிகழ்ச்சி தடபுடலாக நடக்கிறது. அறுசுவை விருந்து. அறுசுவை உணவை கண்டவுடன் அளவுக்கு மீறி சாப்பிட்டு விடுகிறோம். அதிகம் சாப்பிட்டதால், செரிமாணம் ஆகவில்லை. அதனால் வயிறுவலி. அதையடுத்து, வயிற்றுப் போக்கு. அடுத்தடுத்து சோர்வு என சில துன்பங்களை அனுபவிக்கிறோம். இந்தத் துன்பத்திற்கு காரணம் உணவோ, அந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியோ காரணம் ஆகாது. நாம் செய்த தவறு அதிகமாக சாப்பிட்டது. இதுபோல், நாம் ஏதாவது தவறு செய்தால் தண்டனையை அனுபவிக்கிறோம். அதிகமாக சாப்பிடும்போது இறைவா உனக்கு நன்றி என்கிறோம். வயிற்று வலி வந்ததும் ஆண்டவா, ஏன் இப்படி என்னை சோதிக்கிறாய்? என்று கூச்சலிடுகிறோம். இதில் எங்கிருந்து இறைவனின் செயல்பாடுகள் வருகிறது. உணவை படைத்தது இறைவனாக இருக்கலாம். அதை அளவுக்கு மீறி சாப்பிட்டது நம் தவறுதானே? ஒருவனுக்கு பெயர், பணம், புகழ் போன்றவை கிடைத்து, அதனைக் கொண்டாட சுற்றமும், நட்பும் அமைந்து விட்டால் அதுவே பெரிய சந்தோஷம். இந்த சந்தோஷத்திற்காகவே, நமது வாழ்க்கை பயணம் அமைகிறது. சிலருக்கு இத்தகைய சந்தோஷம் கிடைக்கிறது, பலருக்கு அது கிடைக்காமல் போய் விடுகிறது. இப்படி பட்ட சந்தோஷங்கள்தான் வாழ்க்கை முழுவதும் சந்தோஷத்தைத் தருமா? அப்படியே தந்தாலும், அது இவ்வுலக வாழ்க்கையோடு முடிந்துவிடும். ஆனால், இவ்வுலகத்திற்கும், அவ்வுலகத்திற்கும் நிரந்தரமாக சந்தோஷத்தைக்கொடுப்பது இறைவனை நினைப்பதும், வணங்குவதும், இறைவனை உணருவதுமேயாகும். நமக்கு ஆசைகள் ஆயிரம் இருக்கின்றன. ஆனாலும், என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும் பொருட்கள் நம்மை விட்டுப் பிரிவதும், நாம் அவற்றைவிட்டுப் பிரிவதும் நிச்சயம். இப்பிரிவு நம் இறப்பின் மூலம் ஏற்படுவதற்கு முன்பாக, நாமாக ஆசைகளை படிப்படியாக விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை ஆசைகளுக்குரிய துன்பமும் உண்டு. ஆசைகளை குறைக்கக் குறைக்க துன்பமும் குறையும். ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.’என்கிறார் வள்ளுவர். எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான் என்பது குறளின் பொருள். இப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டு, இறைவன் மீது ஆசைப்பட பழகிவிட்டால் அவஸ்தைப்படவே வேண்டாம். அப்படியே இறைவனோடு கரைந்து ஆனந்தமாகி விடலாம். - தேவராஜன். ********************************************