





பழங்கால சிறந்த நகரங்களுள் ஒன்று பாபிலோன். இதுபுகழ்பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. பாபிலோனை ஹமுராபி என்பவர் சிறப்பாக ஆட்சி செய்தார்.
ஹமுராபி ஆட்சிக்குப் பிறகு இவரது தளபதி நெபோபலாசர் என்பவர் மன்னரானார்.
அதன் பிறகு, நெபோபலாசரின் மகன் நெபுகட்நேசர் மன்னரானார்.
இவர் ஆட்சி காலத்தில் தான் பாபிலோனில் தொங்கும் தோட்டம் அமைக்கப்பட்டது.
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தொங்கு தோட்டத்தை அமைத்த பெருமைக்குரியவர் நெபுகட்நேசர்.
இத்தோட்டத்தினை அமைத்ததற்குக் காரணமான ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.
மீட்ஸ் அரசர் சையாக்சரசின் மகள் அமிடிசை. அழகு ராணி. இவளை நெபுகட் நேசர் திருமணம் செய்தார்.
திருமணத்திற்குப் பிறகு பாபிலோனில் வசிக்கும் போது, அந்த நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை. எனவே, எப்போதும் வருத்தமாகவே இருந்தார். இதனைக் கவனித்த மன்னன் , ராணியிடம் காரணம் கேட்டார்.
அதற்கு, ராணி அமிடிஸ், “என் அன்புக்குரிய மன்னா! என் மனதில் இருப்பதைச் சொல்கிறேன். நான் மலைநாட்டு இளவரசி. என் நாட்டில் உயர்ந்த குன்றுகளும், மலைகளும், காடுகளும், நறுமண மலர்களும், கொடிகளும் அழகழகாய், வண்ண வண்ணமாய் கண்ணையும் மனதையும் நிறைத்துக் கொண்டிருக்கும். அப்படி ஒரு சூழ்நிலையில், இடத்தில் நான் வளர்ந்ததால் என் மனம் இயற்கையையே நாடுகிறது. இங்குள்ள பரந்த வயல்வெளிகள், வெற்றிடங்களைப் பார்த்துப் பார்த்து என் மனம் சோர்வடைகிறது” என்றார் சோகமாக.
இதனைக் கேட்ட மன்னன், “ அவ்வளவு தானே! இனி கவலை வேண்டாம். உன் ஆசைப்படியே நீ இருக்கும் இடம் அமையும்” என்றார்.
அரசவையினைக் கூட்டினார். பாபிலோனில் மலைக் குன்றுகளை உண்டாக்க முடியுமா என விவாதித்தார். பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர்.
எல்லாருடைய ஆலோசனைகளைக் கேட்ட மன்னர், செயலில் ஈடுபட்டார்.
அரண்மனையின் ஒவ்வொரு அடுக்கின் மேலும் சற்று உட்புறமாக பல மாடிகளைக் கொண்ட சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டது. 56 மைல்
நீளத்தில், 80- அடி அகலத்தில், 320 அடி உயரத்தில் அமைத்து, இரு சுவர்களுக்குமிடையில் ஏராளமான மண் கொட்டப்பட்டது. சுவரின் உள், வெளிப்புறத்தில் மிக மெல்லிய ஓட்டைகளுடன் கூடிய அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்டன. இத்தகடு, உட்புற மண் சரிந்து விழுந்துவிடாதபடி மிக கவனமாகப் பலப்படுத்தப்பட்டது.
அதற்குமேல் சற்று உட்புறம் தள்ளி இரண்டாவது மாடச்சுவர் கட்டப்பட்டது. இடைப்பகுதியில் மண்போட்டு நிரப்பி அலுமினியத் தகடுகள் பதிக்கப்பட்டன. இப்படியே 8 மாடங்கள் ஒன்றன்மீது ஒன்றாகக் கட்டப்பட்டன.
இந்தக் கட்டடச் சுவர்களின் இடையில், பழம் தரும் மரங்கள், செடார், பைன், பர்ச், புரூஸ் போன்ற மரங்களும், பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்ச் செடிகளும், கொடிகளும் அமைக்கப்பட்டன.
படர்ந்த கொடிகள் மேல் மாடத்திலிருந்து கீழ் மாடத்திற்குப் படர்ந்து ஒரு தொங்கும் தோட்டம்போல் காட்சியளித்தது. பூத்துக் குலுங்கிய வண்ண மலர்கள் பார்ப்பவர்களின் கண்ணிற்கும் மனதிற்கும் விருந்தளித்து நின்றன. திராட்சைக் கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டு, பழங்கள் பழுத்துத் தொங்கின.
உச்சி மாடத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாடத்திற்கும் செல்ல, உட்புறமும் வெளிப்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அலுமினியத் தகடுகளிலிருந்து உட்புறத்திற்குத் தண்ணீர் கசிந்துவிடாதபடி கவனமாக வெளியேற்றப்பட்டது. ஒவ்வொரு மாடத்திலும் 4 வாயில்கள் இருந்தன. எட்டாவது திறந்த மாடத்திலும் மாடவெளியிலும் நந்தவனம் அமைக்கப்பட்டிருந்தது. மலர்ச் செடிகளிலும் பழ மரங்களிலும் பலவிதமான பறவைகள் சிறகடித்துப் பறந்தன; வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டன. பறவைகளின் இனிய ஓசை மனதிற்கு இதமளித்தது. செயற்கையான முறையில் ஓர் இயற்கைக் காட்சி அழகாக உருவாக்கப்பட்டது.
யூப்ரடீஸ் நதியிலிருந்து நீரை மேலே ஏற்றி, தொங்கு தோட்டத்திற்கு நீர் பாய்ச்சினர். இவ்வளவு பெரிய அளவிற்கு மண்ணை ஏற்றினாலும், ஒவ்வொரு மாடமும் சரியாமல் திட்டமிட்டுக் கட்டிய பணி, அக்கால அறிஞர்களின், பொறியியல் வல்லுநர்களின் திறமையை நினைத்துப் பிரமிக்க வைத்துள்ளது. வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் ஹெரடோட்டஸ் எழுதிய தொங்கு தோட்டத்தின் வருணனை மிகவும் புகழ் பெற்றதாகும்.
கி.மு. 400 ல் பெரோசஸ் என்பவர்தான் முதன் முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம்பற்றி எழுதியதாக கூறப்படுகிறது. இது கி.மு. 600 ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து.
இப்போது இருக்கும் ஈராக்கின் பாக்தாத் நகருக்குத் தெற்கே முப்பது மைல்கள் துõரத்தில் யூப்ரட்டீஸ் நதிக்கரையோரத்தில் அமைக்கப்பட்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர்
ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தால் இந்தப் பாபிலோனின் தொங்கும் தோட்டம்
அழிக்கப்பட்டுவிட்டது.