சனி, 15 ஜூன், 2013
உணவு போதனை!/
*******************
உணவு போதனை!/94/ 23.6.13/
உணவு என்பது உடலை மட்டுமல்ல; மனிதனின் புத்தியையும் உணர்வையும் சுபாவத்தையும் வளர்க்கிறது.
பகவத்கீதையில் கிருஷ்ணன், காரசாரமான உணவுகள் மனிதனுக்கு கோபதாபங்களை கொடுப்பதாகவும், அழுகிய கெட்டுப்போன உணவுகள் சோம்பேறித்தனத்தையும், மனச்சோர்வையும் தருவதாகவும் உடனடியாக செரிக்க கூடிய காரம், புளி, உப்பு சுவைகள் கட்டுப்பட்டு இருக்க கூடிய புதிய உணவுகளே மனிதனுக்கு நல்ல எண்ணங்களையும் நல்ல ஆரோக்கியத்தையும் தருவதாக சொல்கிறார்.
உணவு சமைக்கும் போது அந்த உணவு பதார்த்தங்களை கையாளுகின்ற மனிதர்களின் உணர்வுகளும், அந்த உணவுக்குச் சொந்தக்காரனின் உணர்வுகளும் ஊடுருவி செல்லும்.
நல்லவர்கள் தரும் உணவும், நல்ல எண்ணங்களால் சமைக்கப்பட்ட உணவும் நல்ல பலனைத் தரும். கெட்ட எண்ணங்களால் உருவாக்கப்பட்ட உணவு செரிமானம் ஆகாமல் இடைஞ்சலை தான் தரும்.
நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று நம் அம்மாவும், அப்பாவும், மனைவியும், பிள்ளைளும் ஏன் நண்பர்களும் கூட நினைப்பார்கள். அவர்கள் கையால் உணவருந்துவது என்பது வேறு; மற்றவர்கள் கையால் உணவருந்துவது வேறு.
உணவு பற்றி ஒரு கதை:
குருசேஷத்திரப் போர்.
பீஷ்மர், அர்ஜூனனின் அம்புகளால் துளைக்கப்பட்டு, அம்புப்படுக்கையில் விழுந்தார்.
யுத்தம் முடிவுக்கு வந்தது. பாண்டவர்கள் வெற்றியடைந்தார்கள்.
தர்மருக்கும் கண்ணனுக்கும், பீஷ்மரின் உலக ஞானம்பற்றி நன்குத் தெரியும். தர்மன் தன் சகோதரர்களுடன் பீஷ்மர் முன் நின்றான்.
தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை எல்லாம் கேட்டனர்.
பீஷ்மரும்,ஓர் அரசன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி, பல விஷயங்களை முப்பது நாட்களுக்கு உபதேசித்தார்.
கடைசியாக சகாதேவன் ஒரு நக்கலான கேள்வியை எழுப்பினான்.
“ பீஷ்மரே, இப்போ நீங்க நல்லா வக்கணையா நியாயம், தர்மம் பேசறீங்க. ஆனால், இவ்வளவு நாளா ஒரு அயோக்கியனான துரியோதனனோடு சேர்ந்துதானே போர் செய்தீங்க. அப்போ எங்கே போச்சு, இப்ப நீங்க எங்களுக்கு சொல்ற நியாயம், நீதி ,நேர்மை எல்லாம்? நீங்க நியாயத்துக்கு எதிரா போர் செஞ்சதா அர்த்தமாகாதா?”
“ உண்மைதான் சகாதேவா. அதற்கு காரணம் நான் சாப்பிட்ட உணவுதான் காரணம்” என்றார் பீஷ்மர்.
“ என்ன உணவா?”
“ஆமாம். உணவு உணர்வைக் கெடுக்கும். நான் பல ஆண்டுகளாக துரியோதனனின் உணவை உண்டேன். அது என்னை நியாயம் மறக்கச் செய்து விட்டது. தர்மத்துக்கு எதிராகப் போரிடச் செய்து விட்டது. ஆனால், இப்போது, அர்ஜூனனின் அம்புகள் அந்தக் கெட்ட ரத்தத்தை நீக்கி விட்டது. நான் மீண்டும் தர்மத்தின் பக்கம் திரும்பி விட்டேன்” என்றார் பீஷ்மர்.
ஆளாளப்பட்ட பீஷ்மருக்கே இந்த கதி என்றால், நாம் எம்மாத்திரம்?
ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்வதற்கு முன், இன்றைக்கு நாம் உண்ட உணவு, நியாயமான வழியில் சம்பாதித்ததுதானா? என்று சிந்தனை செய்யுங்கள்!
- தேவராஜன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக