புதன், 30 அக்டோபர், 2013

பிறவிக் கடன்! -தேவராஜன்


பிறவிக் கடன்! -தேவராஜன் அதிகாலை நான்கு மணியில் இருந்து தன்னந்தனியாக கிச்சனுக்கும் ஹாலுக்கும் நடையாய் நடந்து கொண்டிருந்த சந்திராவுக்கு தூக்க கலக்கம், கண் எரிச்சல், கோபம் எல்லாம் ஒன்றாய் கொழுந்து விட்டு எரிந்த கொண்டிருந்தது. காரணம் இரவு தூங்கவே இல்லை . குழந்தை சீனு உறங்க 2 மணி ஆகிவிட்டது. ‘ஒரு நாளா, இரண்டு நாளா... எட்டுமாசமா இதே கதைதான்! நிம்மதியா ஒரு நாள் தூங்க முடியுதா... என்ன வரம் வாங்கி வந்திருக்கேனோ! என்ன செய்வது என் தலையெழுத்து... கஷ்டம் எப்ப இது தீருமோ?’ முணுமுணுத்துக்கொண்டிருந்தாள் சந்திரா. ‘இதற்குதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?’ என்பது போல நாளும் பொழுதும் இப்படிதான் சந்திராவுக்கு நகர்கின்றன. ‘எனக்கு இந்தக் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன். கேட்டார்களா? இல்லையே! ஆம்பளை தனியா காலம் தள்ளிடலாம். பொம்பளை நீ என்ன செய்வ? உனக்குன்னு ஒரு துணை வேணாமா! உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும்னு சொல்லி சொல்லியே... கல்யாணத்தைப் பண்ணி வச்சாங்க. கல்யாணமும் ஆச்சு. அப்பவும் விட்டாங்களா... மூணு மாசம் போனதுமே ‘என்ன சந்திரா, வயதுல புழு பூச்சி வைக்கலையா? இன்னுமா நீ குளிக்கிற? அடுத்த முறை பார்க்கும் போது நான் முழுகாம இருக்கேன்னு இனிப்பான செய்தியா சொல்லுனும்...’ போவோர் வருவோர் எல்லாம் படுத்தினாங்க. இப்ப குழந்தையும் கையுமா இருக்கேன். பார்க்க நாதியில்லை. அப்பவே அம்மா போய் சேர்ந்திட்டாள்! புருஷன் வீட்டில் அணுசரனை இல்லை. இப்ப நான் படுற பாடு எனக்குத்தானே தெரியும்.’ தன் சோகங்களை தனியாகவே புலம்பிக்கொண்டு கிச்சனில் இருந்தவள், சீனுவின் அழுகையை கேட்டதும் கோபம் மூக்கில் நுழைந்து கண்ணில் எரிமலையாய் வெடித்தது. அப்போது தான் புரண்டு படுத்த ராஜா, “ சந்திரா, இங்க கொஞ்சம் வந்து பாரு... சீனு உச்சா போயிட்டு அழுவுறான்” என்று கண்களைக் கூட திறக்காமல் சொன்னான் ராஜா. “எல்லாத்துக்கும் நானே வரணும். ஷெல்பில் தான் ஹக்கீஸ் இருக்குல. அதை எல்லாம் எடுத்து மாத்துங்கோ” என்றவள் இண்டக்ஷன் ஸ்டவ்வில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள் சந்திரா. “ம்ஹூம் என்னால முடியாது” என்ற படி மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டான் ராஜா. ராஜாவின் பொறுப்பற்ற செயலும், கொஞ்சம்கூட இரக்கமற்ற பதில் சந்திரா மனதில் முள்ளாய் குத்தியது. அப்படியே சுவரில் மோதிக்கொண்டு அழுதாள் சந்திரா. சீனுவின் அழுகை நின்றபாடில்லை. போட்டி போட்டுக் கொண்டு குழந்தை அழுதுகொண்டிருப்பதை வேடிக்கையா பார்க்க முடியும்? ஓடி வந்து, “ என்னப்பா... என் செல்லம்... பவுனு... ஏன்டா அழுவுற? அம்மாவை ஏன் இப்படி படுத்துற... பசிக்குதா?” என்று கொஞ்சியவள், புட்டியில் இருந்த பாலை கொடுத்தாள். பால் உள்ளே போனதும் அழுகை நின்றது குழந்தைக்கு. ராஜாவை பார்க்கையில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இருந்தாலும், அவனும் ராத்திரி 11 மணி, 12 மணி வரைக்கு முழிச்சுக்கிட்டுதானே இருக்கான். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு தினமும் வேலைக்கு போயிட்டு வர்றவனுக்கு உடம்பு அசதியாகத்தான் இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் ஒத்தாசை பண்ணலாம்ல... ‘நான் என்ன எந்திரமா? நான் அடிமை வேலைக்காரியா?’ தனக்குள் கேள்வியை கேட்டுக்கொண்டு மறுபடியும் புலம்பலை ஆரம்பித்தாள். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழும்பி, குழந்தைக்கு பால் கலந்து கொடுத்துவிட்டு, ஏழு மணிக்கே வீட்டை விட்டு ஆபிஸ் கிளம்பிவிடும் புருஷனுக்கு டிபன், லஞ்ச் ரெடி பண்ணி அவரை அனுப்பி விட்டு, அப்பறம் வீடு பெருக்கி, கடை கண்ணிக்கு போய்வந்து, இந்தக் குழந்தை வைச்சிக்கிட்டு, பிறகு குளிச்சி இப்படி ஒவ்வொரு வேலை செய்து முடிக்கவே தினமும் இரவு 10-11 ஆகிவிடும். அப்புறம் மறுபடியும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கணும். கணவனிடம் இருந்து எந்த உதவியும் ஆதரவும் இன்றி தன்னந்தனியாக சுழலும் அவளது மன உளைச்சலையும், சுமையையும் பங்கிட அவன் தயாராக இல்லை. “நான் புருஷன் அப்படித்தான். எனக்கு வெளியில் ஆயிரம் வேலை. சம்பாதிக்கிறது மட்டும்தான் புருஷ லட்சணம். அதுல குறைவைச்சா கேளு. மற்றபடி அதை செய்; இதை செய் என்று நீ ஒண்ணும் அதிகாரம் செய்ய வேண்டாம்” என்பான் ராஜா. இதையும் மீறி ஏதாவது உதவிக்கேட்டால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும். “ என்ன ரொம்பதான் பிலிம் காட்டற? ஊருல உலகத்துல யாரும் புள்ள பெத்துக்கலையா... வளர்க்கலையா... என்னமோ நீ தான் உலகத்துலயே முதல்முதலா புள்ளை பெத்துக்கிட்டவ மாதிரி நடந்துகிற... பேசுற... பிள்ளைகளை கவனிச்சுக்கொண்டு மத்தவங்க எல்லாம் வீட்டு வேலை செய்யலையா? பார்க்கலையா... ரொம்பதான் ஆடற... பாரு, இப்படியே நீ இருக்கிறது உனக்கு நல்லது இல்லே. வாய்க்கு வாய் பேசறதுக்கு ஒரு நாள்... உன் வாயாலேயே உன் வாழ்க்கையை கெடுத்துக்கப்போற பாரு...” என்று ஏகத்துக்கு ராஜாவும் பேசுவான். சுகங்களை பகிரும் கணவன் சுமைகளையும் பகிரும் போது தானே மனைவிக்கு மகிழ்ச்சி. இது புரியாமல் இருக்கிறானே ராஜா! இதை யாரிடம் சொல்வது? சந்திராவின் மனக்குமறல்களைக் கொட்டித் தீர்க்க வசதியாக வந்து சேர்ந்தார் தூரத்து சொந்தமான செவ்வாபேட்டை ஆயா. தன் அந்திம காலத்தில் பேத்தியோடும். பேத்திக்கு பிறந்த எள்ளு பேரனை கொஞ்சவும் நேரம் போனது ஆயாவுக்கு. தன்னால் முடிந்த சின்னசின்ன வேலைகளை செய்து கொடுத்தார் ஆயா. சந்திராவுக்கு கொஞ்சம் விடுதலை. மன இறுக்கம் குறைந்தது. ஒரு நாள் மாடியில் பேரனோடு விளையாடிக்கொண்டிருந்த ஆயாவிடம், “ ஏன் ஆயா, நீ எல்லாம் எப்படி பத்து பிள்ளைகளைப் பெத்து ஆளாக்கின. எனக்கு ஒண்ணுக்கே விழிபிதுங்குதே” என்று கேட்டாள் சந்திரா. “ ராஜகுமாரி கண்ணு...( சந்திராவை இப்படித்தான் ஆயா அழைப்பது வழக்கம்) வாழ்க்கைக் கணக்கு இன்னும் உனக்குப்புரியல... இந்த உலகத்துல மனுஷ ஜென்மம் எடுத்தா, அவரவர் கடனை அவங்கவங்கத்தான் தீர்க்கணும். இப்போ, கைக்குழந்தை வைச்சுக்கிட்டு கஷ்டப்படுறேன்னு புலம்பறயே நீ... நீ குழந்தையாக இருந்தப்ப என்னாபாடு படுத்தினேன்னு தெரியுமா? உங்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாள் தெரியுமா? எனக்கும் தெரியும்! இப்ப நிறைய வசதிகள் வந்திட்டு. கை தட்டினா ஆட்டோ வருது. தெருவுக்கு ஒரு டாக்டர் இருக்காங்க. முப்பது வருஷத்துக்கு முன்னாடி எவ்வளவு சிரமம் தெரியுமா? நீ பிறந்து ஆறுமாசம் வரைக்கும் ஏதாவது உடம்புக்கு வந்துகிட்டு இருக்கும். பாவம் அம்மா தவிப்பாள். தலைநிக்காத உன்னை பக்குவமா தூக்கி கிட்டு பத்து மைல் நடந்தே ஓடுவாள். டாக்டரை பார்த்துட்டு வீடு திரும்ப மணி பத்தாயிடும் தெரியுமா? இப்ப இருக்கிற பஸ் வசதி எல்லாம் எங்கே அப்ப இருந்தது. ராத்திர பூராவும் பனை விசிறியால உனக்கு வீசிறிக்கிட்டு எத்தனை ராத்திரி கண்விழிச்சிருப்பா... அப்பப்பா... அதெல்லாம் முழுசா சொன்னா இப்ப படுற கஷ்டம் எல்லாம் தூசு... இதை ஏன் உனக்குச் சொல்றேன்னா... உங்க அம்மா உனக்குப் பட்ட கஷ்டத்தை, கடனை நீ திருப்பியா செய்துட்டே! ஒரு அம்மா பட்ட கடனை எந்தப் பிள்ளைகளாலும் ஒரு ஜென்மத்துல முழுசா அடைக்க முடியாது. இது தான் உண்மை.இப்ப, உங்கம்மா உனக்குப் பட்ட கடனை, உன் மகனுக்கு நீ செய்யற. அவ்வுளவுதான். நீ இப்ப படற கஷ்டத்தை உன் மகன் உனக்குத் திருப்பி அடைக்கணும்னு அவசியமில்ல. ஆனால், அவன், அவனுக்குப் பிறக்கிற பிள்ளைக்கு வட்டியும் முதலுமாக அடைச்சிதான் ஆகணும். இந்த உலகத்துல இந்தக் கணக்கு இப்படித்தான் காலம்காலமாக நடந்துகிட்டு இருக்கு. நீ படிச்சவதானே இந்த ஆயா சொல்றதை கொஞ்சம் சிந்திச்சு பாரு உண்மை உனக்கே புரியும். இதுல எதுக்கு உன்புருஷனையும் பிள்ளையையும் நொந்துக்கற?” என்று தீர்க்கமாக சொன்னார் ஆயா. “ ஆயா, நீ சொல்ற தத்துவம் எல்லாம் சரிதான். அது பிள்ளை பெத்த அம்மாவுக்கு மட்டும்தானா, அப்பாவுக்கு எல்லாம் கிடையாதா, அது என்ன ஆண்களுக்கு மட்டும் விதிவிலக்கு?” என்று சொல்லிய சந்திராவின் பார்வையில் ஏளனம் கொப்பளித்ததை ஆயா பார்க்கத்தவறவில்லை. “ குடும்பம்னு வந்தா, ஆணுக்கு ஒரு கடமை இருக்கு. பெண்ணுக்கு ஒரு கடமை இருக்கு. இரண்டும் வேறு வேறு. ஆண் செய்யற கடமையை என்னால செய்ய முடியாதான்னு விதாண்டாவாதம் பண்றது சரியாக இருக்காது. ஒரு ஆணுக்குரிய கடமை பெத்தவங்கள உயிரோடு இருக்கும்போதும் அரவணைக்கணும். அவங்க இறந்தப்பிறகும் அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்கு. சிராத்தம், தர்ப்பணம்னு பல பிறவிக்கடன்கள் இருக்கு. அதை செய்துதான் ஆகணும். அது செய்தாதான் அந்த ஆத்மா திருப்தி அடையும். உன் புருஷன் அவனுக்கு உரிய பிறவிக்கடனை செய்துகிட்டுதான் இருக்கான். இனியும் செய்வான். அவன்கூட எல்லாத்துக்கும் போட்டி போடாத. வாழ்க்கையில் இப்படி நெளிவு சுளிவுகள் இருக்கும். அதை எல்லாம் உணர்ந்து, பொறுத்து, அனுசரித்துதான் போகணும். இதுக்குப் பேர் அடிமைத்தனம் இல்ல. நீ அடிமைத்தனம்னு இதை நெனைச்சா உன்னால் இந்தக் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியாக கரை சேர முடியாது.” என்றார் செவ்வாய் பேட்டை ஆயா. சந்திராமணிக்கு தெளிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் ஆயா, மாடியில் இருந்து இறங்கி வந்தார். அதே படிகளில்தான் சந்திராவும் இறங்கி வருவதை உறுதிபடுத்திக்கொண்ட ஆயா, பேரனைப்பார்த்து அர்த்தமுடன் புன்முறுவல் செய்தார். ****

பெயரில்லாதவன்! --தேவராஜன்


பெயரில்லாதவன்! --தேவராஜன் சுட்டெரிக்கும் வெயிலுக்குக் கடற்கரைக்காற்று இதமாக, சுகமாகத்தான் இருந்தது. சூரியன் வேறு மேற்கு பக்கம் நகர்ந்து விட்டான். இப்போது காற்று இன்னும் ஜோராக ஜில்லென்று வீசியது. கடற்கரை மணலில் நடந்து கொண்டிருந்தேன். “ஐஸ்... ஐஸ்... ஐஸ்...” ஒரு முப்பது ஐந்து வயதொத்த இளைஞன் தள்ளுவண்டியை மணலில் சிரமப்பட்டு தள்ளிக்கொண்டே கூவி சென்று கொண்டிருந்தான். ‘இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி...’ மனசுக்குள் அந்த ஐஸ் வார்த்தை நங்கூரம்போட்டு, பானையில் இருக்கும் மோரை மத்து கடைவதுபோல் கடைந்து கொண்டிருந்தது. அந்தக்குரலுக்கு உரியவனை பின்பக்கம் பார்த்ததால் சட்டென்று அந்த உருவம் கண்ணில் வழுக்கி வழுக்கிப் போனது. கொஞ்சம் நடையை துரிதப்படுத்தி, அந்த ஐஸ்காரனை நெருங்கி விட்டேன். புடைத்த நெற்றியும், பிதுங்கிய உதடும், மரக்கா மண்டையும் யாரையோ நினைவுப்படுத்தியது. “ யப்பா, கொஞ்சம் நில்லேன். ஒரு ஐஸ் கொடுப்பா” என்ற சொல்லி, அவனை பாதம் முதல் தலைவரை ஸ்கேன் செய்து ஆராய்ச்சி செய்தேன். “ சார், என்ன ஐஸ் வேணும்? பால் ஐஸ், சேமியா ஐஸ் எது வேணும்?” என்று கேட்டான். “ஒரு பால் ஐஸ் கொடுப்பா...” “ அஞ்சு ரூபா” ஐஸ் வாங்கிக் கொண்டு, ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு, அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது- அவன் என்னை மேலும் கீழும் பார்க்க ஆரம்பித்துவிட்டான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. என்னைப் பார்த்து கொஞ்சமாய் சிரித்துவிட்டு நகர்ந்தான். இருபது அடி துõரம் சென்றிருப்பான் அவன். சட்டென்று உச்சி மண்டையில் யாரோ என்னை ஓங்கி குட்டுவது போல் இருந்தது. என்னை அறியாமலேயே “ ஏஏஏ... அய்யா பொங்க!” என்று கத்தி கூப்பிட்டேன். அவன் சற்று நின்று, நிதானித்து என்னைத் திரும்பி பார்த்தான். நான் அவனை நோக்கி விருவிருன்று நடந்தேன். அவன்- வண்டியை தள்ளிக்கொண்டே ‘ஐஸ்... ஐஸ்...’ என்று கூவியப்படி சென்றான். “ஏஏஏ அய்யா பொங்க!” “........” “ஏ அய்யா பொங்க!” “........” “அய்யா பொங்க” “.....” ‘அவனா இவன்? அவன்தானா? அவன், இவன் இல்லையா...’ எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என் எதிரே அவன் துõரமாய் வண்டியைத் தள்ளியப்படி சென்று கொண்டிருந்தான். நின்ற இடத்திலேயே அப்படியே அமர்ந்து விட்டேன். அப்படியே அய்யா பொங்கவும் என் மனதில் அமர்ந்துவிட்டான். ** நதிமூலம் ரிஷிமூலம் தெரியாது என்பார்களே! அதுபோலத்தான் அய்யா பொங்கவுக்கும் மூலம் தெரியாது. யார் அவன்? அவர் பெயர் என்ன? ஊர் எது? சொந்தம் பந்தம், சாதி சனம் எதுவும் அவனுக்குத் தெரியாது. அதனால் நமக்கும் அவனைப்பற்றி எதுவும் தெரியாது. கூடையை கவிழ்த்து வைத்ததுபோல தலையில் பிசுபிசுப்பான செம்பட்டை தலைமுடி. கண்ணில் பீழை ஒழுகும். பிதுங்கிய உதடு. கோரைப்பல். திட்டு திட்டாய் அழுக்குத் தேமல். சூம்பிப்போன கை, கால்கள். அண்டிதள்ளிய பானை வயிறு. அழுக்கேறி ஒரு காக்கி டவுசர் போட்டிருப்பான். வயசு எட்டோ ஒன்பதோ இருக்கலாம். ஒரு மாசிமாதத்து தெப்போற்சவத்துக்கு எங்கிருந்தோ கூட்டத்தோடு கூட்டமாய் வந்தான். தெப்பம் பார்க்க வந்த பக்தர்களுக்கு மூன்று மடங்களில் இலவச அன்னதானம் போட்டதால், இவனுக்கும் தினமும் மூன்று வேளை சாப்பாடு கிடைத்தது. காலையில் பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு, மீண்டும் கோயில் வரும் வரை பல்லக்கை தொடர்ந்து வருவது பட்டாச்சாரியாரும் இவனும் தான். இரவு அப்படித்தான் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் உலாவரும்போது இவனும் பெருமாளுக்கு அடிபொடிபோல வருவான். இப்படியே நாட்கள் ஓடியது. பதினைந்தாம் நாள் தெப்பம் உற்சவம் சிறப்பாக முடிந்தது. மறுநாள் கொஞ்ச கொஞ்சமாக வந்த பக்த ஜனங்கள் எல்லாம் ஊர் திரும்பினர். அடுத்தடுத்த நாளில் இலவச உணவுபோடுவதும் நிறுத்தப்பட்டது. மடங்கள் மூடப்பட்டது. பாவம் அவனுக்குப்பசி! யார் சாப்பாடு போடுவார்கள்? உச்சி வெயில் மாங்குட்டையில் அவன் தண்ணீரில் மூழ்கி, மூழ்கி எழுந்து கொண்டிருந்தான். கையில் என்னவோ கறுப்பாக இருந்தது. அதை பல்லால் கடித்து தின்று கொண்டிருந்தான். அப்போது நான் குளக்கரையில் நின்று கொண்டிருந்தேன். “ ம்ம்வா...” என்று என்னைக்கூப்பிட்டான். “எனக்கு நீச்சல் தெரியாது. வரலே... போ... நீ என்ன திங்கற?” தண்ணீரில் இருந்து வெளியே வந்தான். அம்மணமாய் இருந்தான். கையில் இருந்ததைக் கொடுத்து, “இந்தா தின்னு... இது அல்லிக்கிழங்கு. நல்லாருக்கும்.” என்று என் கையில் திணித்தான். கொஞ்சம் கடித்துப் பார்த்தேன். சப்பென்று இருந்தது. மீண்டும் குளத்தில் அவன் இறங்கிவிட்டான். நான் வீடு திரும்பினேன். இதுவரைக்கும் அவனைக் கூப்பிட பெயரில்லை. அவனுக்குப் பெயரே இல்லை. இவனை எப்படி கூப்பிடுவது என்று தீவிர யோசித்தேன். அவனுக்குப் பெயர் வைக்க அந்த சந்தர்ப்பம் வந்தது. அன்னைக்கு சனிக்கிழமை. இரவு ஏழு மணி இருக்கும். பெருமாள் சந்நிதியில் நான் மாமாவோடு நின்று கொண்டிருந்தேன். சாயரட்சை பூஜை நடந்து கொண்டிருந்தது. கருட சேவை வாகனத்தின் பின் அவன் நின்று கொண்டிருந்தான். அரை மணி நேரத்தில் பூஜை முடிந்தது. பிரசாதம் கொடுக்க ஆரம்பித்தார்கள். முதல் சுற்று சுண்டல். இரண்டாம் சுற்று பஞ்சாமிர்தம். மூணாம் சுற்றில் பொங்கல். அவன் பிரசாதம் கொடுப்பவரின் பின்னாலேயே சென்று “ அய்யா பொங்க... அய்யா பொங்க... அய்யா பொங்க” என்று கையேந்தியபடி கெஞ்சி கொண்டிருந்தான். ‘ ஏ... தள்ளிப்போ... எத்தனை முறைதான் கேட்ப... எப்ப பாரு அய்யா பொங்க... அய்யா பொங்கன்னுகிட்டு’ பிரசாதம் கொடுத்தவர் அவனை அடிக்காத குறையாக விரட்டினார். பெருமாள் சந்நிதியில் அவனுக்கு அய்யா பொங்கன்னு அவனுக்குப் பெயர் வைத்தேன். அப்போதே ‘ஏ அய்யா பொங்க’ என்றேன். அவன் திரும்பிப் பார்த்தான். “இந்தா, வாங்கிக்கோ’ என்று என் கை நிறைய வைச்சிருந்த பொங்கலைக் கொடுத்தேன். அவன் வாங்கிக்கொண்டு வாய்நிறை துணித்து சாப்பிட்டான். நான் கூப்பிட்ட அய்யா பொங்க பெயரை, பிறகு எல்லாரும் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அவனை அய்யா பொங்கன்னு யார் கூப்பிட்டாலும் திரும்பி பார்ப்பான். நாளாக நாளாக அதுவே அவனுக்குப் பெயராகிவிட்டது. கீழத் தெரு ருக்குமணி பாட்டி வீட்டு திண்ணையில் படுத்திருப்பான். பாட்டிக்கு உதவியாக வேலைகள் செய்வான். ருக்குமணி பாட்டி மூணு வேளை சோறு போடும். யார் சொன்னாலும் வேலை செய்வான். எட்டணா கொடுத்தா போதும். அவன் இந்த ஊருக்கு வந்து நாலு வருஷத்துக்கு மேல ஓடிவிட்டது. அவனுக்கு அரும்பு மீசை முளைக்க ஆரம்பித்து விட்டது. அன்னைக்கு பிரதோஷம். சிவன் கோயில் அய்யா பொங்கவுடன் சேர்ந்து விளையாடி விட்டு வீடு திரும்பும்போது மணி எட்டு. கீழத் தெருவில் ஒரே சத்தம். மாட்டு வண்டி ருக்குமணி வீட்டு முன்பாக நின்றுகொண்டிருந்தது. ருக்குமணி பாட்டியை பாம்பு கடிச்சுட்டதாம். கோட்டூர் நாட்டு வைத்தியரிடம் ருக்குமணியை கூட்டிச் சென்றார்கள். வண்டி பின்னாலேயே ‘பாட்டி... பாட்டி... பாட்டி...’ என்று ஓலமிட்டு அய்யா பொங்க ஓட்டமும் நடையுமாய் சென்றான். பொழுது விடிந்தது. ருக்குமணி பாட்டி சடலமாகத்தான் வீடு திரும்பியது. ருக்குமணி பாட்டிக்கு சொந்தம் பந்தம் எல்லாம் அதிகம் கிடையாது. அன்னைக்கு சாயந்தரமே பாட்டியை தகனம் செய்தார்கள். மயானக் கரையில் அழுதுகொண்டே இருந்தான் அய்யா பொங்க. ராத்திரி பூரா அங்கேயே அழுதுகிட்டு இருந்தான். பொழுது விடிந்தபோது அய்யா பொங்க ஊருக்குள் வரவேயில்லை. ஒரு நாளாச்சு... ஒரு வாரமாச்சு... ஒரு மாதமாச்சு... ஒரு வருஷமாச்சு... அய்யா பொங்க வரவேயில்லை. எங்கே போனான்... ஏன் போனான்.. இன்னை வரைக்கும் யாருக்கும் தெரியாது. அது ஆச்சு இருபது வருஷம். இருள் படர்ந்தது. கடற்கரைக்கு ஜனங்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். பிளாஸ் பேக்கில் என் நினைப்பு இருந்ததில்... நிஜ நிகழ்வுகளில் என் மனம் ஒட்டாமல் இருந்துவிட்டது. எப்படியும் இந்தக் கடற்கரையில்தான் இருப்பான் அய்யா பொங்க. அவனைத் தேடினால் கிடைக்காமலா போய்விடுவான். நாலா பக்கமும் தேடினேன். அவன் என் கண்களுக்குத் தென்படவேயில்லை. வீடு திரும்பினேன். இரவு துõக்கத்தில் அய்யா பொங்கதான் வந்தான். அவனுக்குப் பேர் வைத்த என்னையா அடையாளம் தெரியவில்லை? என்னிடம் பேச அவன் ஏன் விரும்பவில்லை? என்னைப் பார்த்து லேசாக சிரித்தானே? எங்கிருந்தோ வந்தான். எங்கேயோ ஓடிப்போனான். இப்போ இருபது வருஷம் கழித்து கண்டுகொண்டேன். நாளைக்கு அவனை நிச்சயம் கடற்கரையில் கண்டுபிடித்து விட வேண்டும். இப்பவும் அவன் பெயர் அய்யா பொங்கதானா? இல்லேன்னா இப்போது அவனுக்கு வேறு பெயரா? அந்தப் பெயர் யார் வைத்தார்கள் என்று கேட்க வேண்டும். ********************

நெல்லு விளைஞ்ச மண்ணு... -தேவராஜன்


நெல்லு விளைஞ்ச மண்ணு... -தேவராஜன் “என்னை தூக்குல தொங்க விடாம விடமாட்டீங்க போல. ஊருல கவுரவமாக வாழவிடமாட்டீங்க! பெத்த பிள்ளைங்கல ஊர்ல நாலு பேரு காரீ துப்பினாத்தான்... இதை எல்லாம் பார்த்துட்டுத்தான் நீங்க ஓய்வீங்கல...” தையப்பாவின் ஒப்பாரி புலம்பல் வீட்டின் கூடத்தில் இருந்து ஒலித்தது. முற்றத்தில் உட்கார்ந்த சண்முகம் அதைக்கேட்டு, துண்டை உதறிவிட்டு எழுந்து தாழ்வாரத்தில் நின்று தையப்பாவை முறைத்தார். “ஏம்மா... சாப்பிடற நேரத்துல... பசியோடு சிவனேன்னு இருக்கிற அப்பாவை பேசி கொட்டித்தீக்கற” கமலா கேட்டாள். “ உன் அப்பாவுக்கு சொரணை வேண்டாம். அதான் புள்ளைங்க மாசா மாசம் வீட்டுச் செலவுக்கு பணம் டாண் டாண் அனுப்புறாங்கல. அப்புறம் என்ன? வயசான காலத்துல விவசாயம் பார்த்து பொழைக்கணும்னு யாரு அழுதா?” நிலா வெளிச்சம். கொசுவும் கடித்ததும். காலையில் நடந்த இந்த சம்பாஷணையும் கடித்தது. சண்முகம் தூக்கம் வராமல் புரண்டு படுத்தார். சேர்த்த பணம், பிள்ளைகள் அனுப்பிய பணம், நகை நட்டு எல்லாம் அடமானம் வைத்து விவசாயத்தில் விதையா விதைச்சாச்சு. காவிரி தண்ணீர் வராமல் ஏமாற்றி விட்டது. மானங்கெட்ட மானம் ஒண்ணு பெஞ்சு கெடுக்கும். இல்லேன்னா இப்படி பெய்யாம கெடுக்கும். காவிரி தண்ணீரை நம்பி விவசாயம் பண்றதுகூட இப்ப சூதாட்டம் போல ஆயிடுச்சு.... இருந்தாலும் இந்த மண்ணுதானே நம்ம உசுரு. வாழ்க்கை. பொழப்பு. இதைவிட்டு வேற என்ன பண்றது? பிரதமரு ஈஸியா சொல்லிட்டாரு விவசாயிகள் எல்லாம் மாற்று தொழிலுக்கு மாறணனும்னு. அவரு ஒரு விவசாயியா இருந்தா இப்படி சொல்ல மனசு வந்திருக்குமா? என்ன கவருமண்டு? என்ன ஆட்சி? ச்சே... இந்தியாவின் முதுகெலும்பு தொழில் விவசாயம்னு ஒரு காலத்துல பெருமை பேசினோமே! இப்ப... விவசாயம் வேணாமாம்.... கலி இப்பவே முத்திடிச்சா.... என் உசிரு கடைசி மூச்சு இருக்கும் வரை நிலத்தை தரிசா போட மாட்டேன். அந்த மண்ணு தாயி இப்ப ஏமாத்தலாம்... ஆனா எப்போதுமே ஏமாத்தமாட்டாள். நம்பிக்கை இருக்கு. இந்த விவசாயம் எத்தனை நாள் எங்களுக்கு வயித்திற்கு அரை வயிற்குச்சாப்பாடு போட்டது. கால்வயிறு கஞ்சி குடிச்சாலும் குனிஞ்சு நிமிந்து உழைச்சுக்குடிக்கிறது போல வருமா... புள்ளைங்க அனுப்புற காசுல சாப்பிட கூசாதா? பின்ன, அவனவன் உழைச்சுத்தர பணம் காசுல கடைசி காலத்தை ஓட்டணுமாம்... நான் ஒரு விவசாயி. என் நிலத்தில் ஏர் எடுத்து, மாடு பூட்டி, உழுது தான் இந்த குடும்பம் வாழ்ந்தது. அது தான் என்னுடைய முக்கிய தொழில். எனக்கு ஐந்து பிள்ளைகள் மூணு பொண்ணுங்க. எனது உழைப்பு, விளைச்சல் எல்லாம் குடும்பச்செலவிற்கே சென்று விடுகிறது. கஷ்டம்தான். வறுமை தான். இது யாருக்குத்தான் இல்லை ? கஷ்டப்பட்டு வளர்த்து பிள்ளைகளை ஆளாக்கலையா? அப்ப எல்லாம் தாழ்வாய்ப்படாத விவசாயம், இன்று என் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் மதிப்பற்ற ஒன்றாகிவிட்டது. இவை எல்லாம் ஒரு நேரம். இப்ப என்னோட கூட ஏர் புடைச்சவங்க எல்லாம் இப்ப சேறு காணாதனைப் போல எப்படி நடந்து கொள்கிறார்கள்? எனக்கோ வயிறு பத்தியெரியுது. இந்த நிலத்தையும் விவசாயத்தையும் கட்டிக்கிட்டு விடாம அழுதுகிட்டு இருக்கும் நான் பிழைக்கத்தெரியாதவனா? நிலத்தை எல்லாம் கூறுபோட்டு மனை வித்த அவுங்க எல்லாம் புத்திசாலிகளா? கடவுளே புரியலையே! சென்னையில் பிள்ளைகள் எல்லாரும் வீடு வாசல் தொழில் என்று செட்டில் ஆகிவிட்டார்கள். அவர்கள் முன்னேற்றம் கண்டு நானும் தான் மகிழ்ந்தேன். இப்ப இருக்கிற வீடு எப்படி மாறிவிட்டது. சாதாரன மண் சுவர் வீடு இப்ப நல்லா சிமெண்ட் போட்டு... டிவி, பிரிஜ்சுன்னு என்னன்னவோ வந்துட்டு. ஆனால் நாலு காசு பணம் வந்தவுடனேயே விவசாயம் எதற்கு? இனி அதை விட்டு விடச்சொல்லி என் பிள்ளைகள் சொன்ன போது நான் ஆடிப்போய்விட்டேன். அவர்களது அறியாமையை தீர்த்து வைக்க என்னால் முடியவில்லை. விவசாயம் செய்து சாப்பிடிற அளவில அவங்கயில்லையாம். பணம் காசு வந்த உடன் விவசாயம் அவர்களுக்கு கசந்தது எப்படி?விவசாயி என்பவன் தாழ்வானவனா.? என்னைப்போல் விவசாயிகள் சேற்றில் இறங்கி ஏர் பிடிக்காவிட்டால் எந்த செல்வந்தனும் சோற்றில் கை வைக்க முடியுமா? உயிர் வாழமுடியுமா? அதை நினைச்சு பாக்கிற அளவில் பிள்ளைகள் இல்லை. விவசாயம் தவிர, வேறு எந்த தொழில் செய்தாலும் அது கவுரவம். இப்ப எங்கள் ஊரில் இது தற்பொழுது நாகரிகமாகிவிட்டது. என் இளைய மகனிற்குக்கூட நான் விவசாயம் செய்வது கவுரவக்குறைவாய் போய்விட்டது. இதை எடுத்துச்சொல்ல வேண்டிய என் மனைவியோ.. “ நீங்கள் உழைச்சு சாப்பிடிற நிலையில யாரும் இல்லை. வயசு போன நேரத்தில ஏன் கஷ்டப்படுறீங்க.பேசாமல் சாப்பிட்டோமா இருந்தோமான்னு இல்லாம...” இப்ப தரிசாகிப்போனது என் நிலம் மட்டும் அல்ல என் மனசும் தான். அறியாமையில் மூழ்கியிருப்பது எழுதப் படிக்கத்தெரியாதா நானா? இல்லை நாலெழுத்துப்படித்து இன்று நல்ல நிலையில் இருக்கும் என் பிள்ளைச் செல்வங்களா எனக்கு புரியவில்லை. விவசாயம் பற்றி நான் பேச்சு எடுத்தாலே என் நிலை இது தான்! நாலு பேருக்கு சாப்பாடு போடும் ஒரு விவசாயின் வீட்டில் இருந்து அரிசிவாங்க கடையேறும் மனைவியும் பிள்ளைகளையும் பார்க்கும் போது எப்படி ஒரு விவசாயின் மனதில் மகிழ்ச்சி வரும்? தனக்குத்தானே புலம்பி பேசி கொண்டே ஏதோ ஒரு நேரத்தில் தூங்கிபோனார். எதிர்வீட்டு கோழி கூண்டில் இருந்து சேவல் கூவியது. “ என்னப்பா இப்படி பண்ணிட்டான்... மனுஷனை ஜான் வயிறு எப்படி எல்லாம் படுத்துது பார்த்தீயா? பாவம் மாரியப்பன் ரோசக்காரன். ராத்திரி நாண்டுகிட்டு தூக்குப் போட்டுகிட்டு போய் சேர்ந்துட்டான்யா... இன்னும் எத்தனைப்பேரு இந்த ஊர்ல தூக்குப்போட்டு சாவப்போறானுங்களோ... அந்த ஈசனுக்கும் சவுரிராஜப்பெருமாளுக்குத்தான் தெரியும்...” ரோட்டில் சென்றவர்களின் உரையாடல் சண்முகத்தின் தூக்கத்தை கலைத்தது, வாரிசுருட்டி எழ வைத்தது. ராமனாங்குளக்கரையில் ஊர் கூடியது. மாரியப்பன் வீட்டில் ஒப்பாரி ஊருக்கே தண்டோரா போட்டது போல ஒலித்தது. “பாவி... விவசாயம் விவசாயம்னே அதைக்கட்டி அழுதுகிட்டு, சூதாடி போல எல்லாத்தையும் இழந்துபுட்டான்யா... வருஷா வருஷம் விளைச்சல் இல்லாம நஷ்டத்துக்கு மேல நஷ்டம். ஊரை சுத்தி கடன். ஆடு, மாடு, கோழின்னு எல்லாம் வித்துதான் விடாமத்தான் விவசாயம் பண்ணான். கடைசியா இருந்த வீட்டையும் அடமானம் வைச்சு இந்த வருஷம் விதை விதைச்சான். நல்லா விளைஞ்சா... நிலமை சரியாகிடும் கண்ணுல கனவு வைச்சிகிட்டு திரிஞ்சான். இந்த வருஷமும் காவிரி தண்ணீர் இல்லாம... விதைச்சது எல்லாம் போச்சு! இப்ப இருந்த வீடும் போச்சு! ஊரை சுற்றி கடனுக்கு வட்டியும் முதலுமா இருக்கிற நிலத்தையும் புடுங்கிட்டு மாரியப்பனை நடுத்தெருவுல உட்டுறவங்க. இதெல்லாம் தெரிஞ்சுதான்... இனிமே மானத்தோடு வாழ முடியாதுன்னு... நாலுமுழ கயிற்றில் தொங்கிட்டான்!” ஊர் பேசியது. சண்முகத்தின் செவிட்டில் ஓங்கி அறைந்ததுபோல இருந்தது ஊர் பேச்சு. “இன்னைக்கு மாரியப்பன்... நாளைக்கு காளியப்பன்... அப்புறம் நீ, நான்... இப்படி ஒவ்வொருத்தரா நாண்டுகிட்டு சாவணும்னு விதி வந்து விவசாயம் என்கிற பேரில் நம்ம வாழ்க்கையில விளையாடுது போல.... மானத்தோடு, கடன் இல்லாம வாழணும்னா இந்த விவசாயத்தை விட்டுட்டு... ஏதோ தெரிஞ்ச வேலைக்குப் போறதுதான் நல்லது. ஒரு காலத்துல விவசாயம் எல்லாரையும் வாழவச்சது. நம்ம ஜில்லாவ நெல்களஞ்சியம்னு பேச வைச்சது... இப்ப அப்படியா? ஒவ்வொருத்தனும் விதைச்சுட்டு, வானத்தையும், முடிகொண்டான் ஆத்தையும் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு. ஒவ்வொரு வருஷமும் அரசாங்க விவசாய கடனை ரத்து பண்ணாதா, பஞ்ச நிவாரணம் தராதான்னு கையேந்தி பிச்சை வாங்கிற மாதிரி ஏங்க வேண்டியிருக்கு... இந்த அரசாங்கம் மக்களை ஏமாத்தும் விவசாய தொழிலை... குடி கெடுக்கும் தொழில்... போட்ட முதலை இழக்கும் சூதாட்ட தொழில்னு சொல்லி தடை விதைச்சாதான் என்ன?” ஆதங்கம் பொங்க பேசி தீர்த்தான் மாரியப்பனின் பால்யகால நண்பன் பொன்னுசாமி. நேரம் கரைந்தது. மாரியப்பனின் இறுதி சடங்குகள் நடந்தது. சண்முகம் பேய் அறைந்தவர் போல மூலை மேட்டில் குந்தி இருந்தார். மாரியப்பனுக்கு கடன் கொடுத்தவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். ஊர் நாட்டாமை எல்லாரையும் பார்த்தார். இடுப்பில் கட்டியிருந்த பட்டை பச்சை பெல்டில் இருந்து கடா மார்க் சுருட்டை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்தார். புண் பட்ட மனதை புகைப்போட்டு ஆற்றுவது போல இருந்தது அவரின் செயல். நாட்டாமை நடேசன் பேசினார். “ தோ, பாருப்பா... இனிமே இந்த ஊர்ல யாருக்கும் விவசாய கடனாக ஒத்த பைசாக்கூட யாரும் யாருக்கும் வட்டிக்கு கொடுக்கக்கூடாது. விவசாயத்திற்கு கடன் வாங்கி, அதை கட்ட முடியாம... மானம் காக்க சாவுற கடைசி மனுஷனாக இந்த மாரியப்பனோட இருக்கட்டும். இந்த ஊர்ல தற்கொலை பண்ணிகிட்ட கடைசி விவசாயி இந்த மாரியப்பனோட முடியட்டும். இனிமே, யாரும் விவசாயம் பண்ண வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். நாலா பக்கம் எந்த ஊருக்காவது போய் கூலி வேலை செய்து பொழைப்பு நடத்தலாம்... மாரியப்பன் காரியம் பத்தாம் நாள் முடிஞ்சதும் அவன் கடன் வாங்கி தொகையை பத்தி ஊர்கூடி பேசி தீர்த்துக்கலாம்” என்றார். சண்முகத்துக்கு மாரியப்பனின் மரணம்தான் போதி மரமானது. கட்டிய மனைவி சொல்லியும் பெற்ற பிள்ளைகள் சொல்லியும் விடாபிடியாக விவசாயம் செய்தே தீருவேன்னு அடம்பிடித்தவர்... இப்போது ஞானம் பிறந்தவராக இருந்தார். அதை அவரின் தெளிந்த முகம் காட்டியது. ------------- ********************

யம தர்மரின் ராஜினாமா கடிதம் --தேவராஜன்


யம தர்மரின் ராஜினாமா கடிதம் --தேவராஜன் “ நாராயணா... நாராயணா... நாராயணா...” என்று ஹரி நாமம் சொல்லியபடி மூன்றுலகம் சஞ்சரிக்கும் நாரதர் யமலோகத்திற்குள் நுழைந்தார். யமலோகம் எங்கும் அமைதியாக இருந்தது. இதைப் பார்த்த நாரதருக்கு ‘ஆஹா! ஏதோ இங்கே விபரீதம் நடந்திருக்கிறது’ என்று ஊகித்தார். அதை என்ன என்று தெரிந்துகொள்ளவிடில் நாரதருக்கு தலைவெடித்துவிடுமே! அதற்காக நேராக யமதர்மரின் தர்பாருக்குள் நுழைந்தார். “நாராயணா... நாராயணா... நாராயணா...” என்று கூறியபடி சபைக்குள் நுழைந்தார். சிம்மாசனத்தில் அமர்ந்திருக்காமல் ஆங்கோர் மூலையில் தலையில் கை வைத்தபடி, கதாயுதத்தை நெஞ்சில் வைத்து ஏதோ தீவிர யோசனையில் தன்னை மறந்து இருந்தார் யமதர்மராஜா. “என்ன யம ராஜப்பிரபு மூடு அவுட்டில் இருக்கிறார்! இவர் இப்படி இருந்தால் யார் இவரது பணியைப் பார்ப்பது?” என்று எண்ணியபடி யமதர்ம ராஜனிடம் சென்றார் நாரதர். “ நாராயணா... நாராயணா... நாராயணா... வணக்கம் யமதர்ம பிரபு!” என்று ஓங்கி குரல் கொடுத்தார். நாதரின் குரல் கேட்டு, தன்னிலைக்கு வந்தார் யம தர்மர். “பிரபு, உங்களுக்கு மூட்அவுட்டா! இது அடுக்குமா?” என்றார் நக்கலாய் நாரதர். “ இப்போது நான் குழப்பத்தில் இருக்கேன். ஒரு மாபெரும் பிரச்னை. நீர் தான் என் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல வேண்டும்” என்று வேண்டினார் யம தர்மர். “ நாராயணா... நாராயணா... நாராயணா... சொல்லுங்கள் பிரபு, என்னால் ஆனதை செய்கிறேன்” என்றார் ஆறுதலாக நாரதர். “ எனக்கு பூலோகத்தில் இருந்து ஒரு பிரச்சினை...” “ என்னது பூலோகத்தில் உங்களுக்குப் பிரச்சனையா? எப்போதும் உம்மால்தானே பூலோகத்தில் எல்லோருக்கும் பிரச்சனை வரும்... பிரபு, நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே!” என்றார் நாரதர். “ பூலோகத்தில் இருக்கும் மானிடர்கள் எல்லாம் அவரவர்களுக்கு இஷ்டப்பட்ட ஹரி, கிருஷ்ணர், ஈசன், விநாயகர், முருகன், ஐயப்பன். அம்மன்கள் இப்படி பல தெய்வங்களை வணங்கி வழிபடுவது தானே பழக்கம்” என்றார் யமதர்மர். “ ஆமாம்! இதில் என்ன குழப்பம் உங்களுக்கு... இது எல்லாருக்கும் தெரிந்ததுதானே... இதிலா உங்களுக்குப் பிரச்சினை வந்தது?” என்றார் சிரித்தபடி நாரதர். “ உம் குசும்பு உன்னை விட்டு போகாதோ? இதுவா என்னை நக்கலடிக்கும் தருணம்?” கோபப்பட்டார் யமதர்மர். “ குசும்பு, நக்கல், நையாண்டி, கலகம் எல்லாம் என் கூடவே பிறந்த குணங்கள். அவை எல்லாம் எந்த ஜென்மத்திலும் என்னை விட்டு போகாது. சரி, உங்களுக்கு பூலோகத்தில் இருந்து என்ன பிரச்சினை வந்தது?” என்றார் நாதர். “பூலோகத்தில் உன்னைவிட ஒரு மாபெரும் குசும்பன், சரியான கலகக்காரன் ஒருத்தன் வசிக்கிறான். அவனால்தான் இப்போ பிரச்சினையே!” என்றார் யமதர்மர். ‘ஆஹா... ஒரு பூலோக வாசியால் யம தர்மபிரபுவுக்கே பிரச்சனையா? அடடா... கேக்கவே சுவாரஸ்யமாக இருக்கும் போல இருக்கே... சரி... சரி... இன்னைக்கு யமலோகத்தில் நமக்கு நன்றாக பொழுதுபோகும் போலிருக்கே!’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார் நாரதர். “ பிரபு, யார் அந்த மானிடன்? பூலோகத்தில் எங்கே இருக்கிறான்? அவனால் உமக்கு என்னப் பிரச்சினை சொல்லும்... யம தர்மருக்கு ஒரு பிரச்சனை என்றால் அது எனக்கும் வந்த ஒரு பிரச்சினை மாதிரிதான்” என்று தைரியம் சொன்னார் நாரதர். லேப் டாப்பில் திருட்டு விசிடி டாட் காமில் சித்திர குப்தர் விஸ்வரூபம் படம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரை கவனித்த நாரதர், “சித்திரகுப்தா, பூலோகத்தில் ஒரு மானிடனால் பிரச்சினை வந்திருக்கிறதாமே, யார் அந்த மானிடன்? எங்கே இருக்கிறான் என்பதை கூகுள் மேப்பில் சர்ச் பண்ணி சொல்லும்” என்றார் நாரதர். சித்திரகுப்தர் கூகுளில் தேடினார்... தேடினார்... தேடினார். “ பிரபு, கண்டுபிடித்துவிட்டேன்! அது உலகத்தில் இந்தியாவில், தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்கண்ணபுரம் என்ற கிராமத்தில் வசிக்கிறான் அந்த மானிடன்” என்றார் சித்திரகுப்தர். “ உங்களுக்குப் பிரச்சினை தந்துகொண்டிருக்கும் மானிடனை கண்டுபிடித்தாகி விட்டது. இப்போது சொல்லும் அவனால் உமக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டார் நாரதர். “ பூலோகத்தில் இருக்கும் மானிடர் எல்லாம் பூலோகத்தில் இருக்கும் கோயில்களில் உள்ள தெய்வங்களை வழிபடுகிறார்கள். இவனோ அந்த தெய்வங்களை எல்லாம் விட்டுவிட்டு போயும் போயும் என்னை தினம் தினம் வழிபடுகிறான். என்னை நினைத்து எப்போதுமே தியானம், தபஸ் செய்கிறான். அவன் என் மேல் வைத்திருக்கும் பக்தியைக் கண்டு நானே ஆச்சரியப்படுகிறேன். என்னை நம்பி, என்னை நினைத்து, என்மேல் அன்பு கொண்டு நாளும் வழிபடும் அவனுக்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு ஒன்றுமே புரியமாட்டேங்கிறதே” என்று தலையில் அடித்துக்கொண்டார் யம தர்மர். இதைக்கேட்டு திடுக்கிட்டார் நாரதர்.‘ஆஹா! இது பெரிய வில்லங்கம் மாதிரி தெரியுதே! அந்த மானிடன் நம்மைவிட பெரிய கலகக்காரனாக இருப்பான் போலிருக்கே! சபாஷ்!’ என்று மனதில் நினைத்தார் நாதர். “ என்ன நாரதரே மவுனமாக இருக்கிறீர்கள்? மானிடர்கள் எல்லாம் என்னை நினைத்தாலே போதும் மரணத்திற்கு அஞ்சி அஞ்சி அழுவார்கள். என்னை பார்க்கவே யாரும் விரும்பமாட்டார்கள். என் வரவையும் யாரும் எதிர்நோக்க மாட்டார்கள். ஆனால், இந்த மானிடன் மட்டும் என்னைப் பார்க்க வேண்டும். நேரில் தரிசிக்க வேண்டும் . வரங்கள் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேனே... நான் இப்போ என்ன பண்றது?” என்றார் யமதர்மர். “ சரி, அவனுக்கு தரிசனம் கொடுத்துவிட வேண்டியதுதானே! பிரச்சினை தீர்ந்துவிடுமே!” என்றார் நாரதர். “ அது எப்படி முடியும்? நான் யாரைப் பார்த்தாலும் அவர்களுக்கு மரணம் வந்துவிடுமே. ஒருவன் இறக்கும் நேரம் வந்தால் தானே நான் அவனை சந்திக்க முடியும். யம தர்ம விதிப்படி அவன் உயிரோடு இருக்கும் போது, நான் அவனை சந்திக்க இயலாதே!” என்றார் யமதர்மர். “ உங்கள் சட்டங்கள் எல்லாம் ரொம்ப பழசு... சட்டத்தை திருத்துங்கள் பிரபு. நரலோகம் என்பது செவ்வாய்க்கிரகம் என்பதெல்லாம் இப்போது மனிதர்களிடம் செல்லுபடியாகாது. இப்போ, உங்க சட்டப்படி நரகலோகத்தில் மானிடர்கள் கிரியோசிட்டி விண்கலத்தை ஆய்வுக்கு அனுப்பி, செவ்வாயில் தண்ணீர் இருக்கிறது... பெரிய வறண்ட ஆறு இருக்கிறதை எல்லாம் கண்டுபிடிச்சிட்டாங்க. நரகத்தில் கொதிக்கும் எண்ணை கொப்பரையில் மனிதர்களை வறுப்பதெல்லாம் இல்லை. அதெல்லாம் டூபாகூர் என்ற விஷயம் கூட மனிதர்களுக்குத் தெரிந்து விட்டது. இப்பவும் நீங்க, அதே பழைய சட்டத்தை வைச்சிக்கிட்டு என்ன செய்யமுடியும்? சட்டத்தைத் திருத்தினால் நீங்கள் பூலோகம் சென்று, அந்த மானிடனை சந்தித்து அவனுக்கு ஆசிவழங்கலாம்” என்று யோசனை சொன்னார் நாதர். யமலோக சட்ட திட்டங்கள் அதிரடியாக திருத்தப்பட்டது. திருத்திய புது சட்டப்படி யம தர்மர் பூலோகம் புறப்பட்டார். கூடவே நாரதரும் வந்தார். காற்றில் ஜெட்டாக பறந்தார் யமதர்மம். இந்தியா- தமிழ்நாடு- நாகப்படினம்- திருக்கண்ணபுரம். சரியாக இடம் கண்டுபிடித்து, பூலோகத்தில் இறங்கினார்கள் யம தர்மரும் நாரதரும். அங்கே, ஒரு ஓலைக்குடிசையில் பெரிய எருமை அதில் யமதர்மம் அமர்ந்திருப்பதுபோல் ஒரு படம் இருந்தது. அதற்கு விதவிதமான மலர் மாலை சூட்டி, விதவிதமான பலகாரங்கள் வைத்து, தீபாராதனை செய்து கொண்டிருந்தான் அந்த மானிடன். இதைப்பார்த்ததும் யமதர்மம் உச்சிக்குளிர்ந்து போனார். “அடாடடா... என்ன என் மீது பக்தி, அன்பு...” மெய்சிலிர்க்கிறதே என்றார் யமதர்மம். “பிரபு, உங்கள் உருவம் மானிடனுக்குத் தெரியும்படி கிருபை செய்யுங்கள். ஆசி வழங்குங்கள். ஆனால், வரம் எதுவும் கொடுத்துவிடாதீர்கள். வரம் கொடுத்தால் உங்களுக்கு நீங்களே சொந்த செலவில் சூன்யம் வைத்ததுபோலாகிவிடும்.” என்றார் நாரதர். “பக்தா! நான் யமதர்மன் வந்திருக்கேன்!” “ என்ன, நான் வணங்கும் யமதர்மனா... நம்பமுடியவில்லையே!” என்று தொபுக்கடீர்ன்னு யமதர்மர் காலில் விழுந்தான் மானிடன். “ பக்தா, உன் பக்தியை மெச்சுகிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள்! பணமா, பொன்னா, பொருளா, நீண்ட ஆயுளா என்ன வேண்டும் கேள் தருகிறேன்” என்றார் யம தர்மர். “ அதெல்லாம் வேண்டாம். எனக்கு மூன்று வரங்கள் தான் வேணும்” என்றான் மானிடன். “ வரம் எதற்கு? வேறு ஏதாவது கேளேன்” என்றார். “வரம் கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள். இல்லை என்றால் எதுவும் வேணாம். எப்போதும் போல உங்களை வழிபட்டுகொண்டிருக்கிறேன்” “சரி... சரி... என்ன வரம் வேண்டும் கேள்” “ முதல் வரம் நான் கேட்கும் வரத்தை கொடுப்பேன் என்று உறுதியளிக்க வேண்டும்.” “சரி” “இரண்டாவது வரம். மற்ற தெய்வங்களுக்கு கோயில் இருப்பது போல உனக்கும் ஊரெங்கும் கோயில் இருக்க வேண்டும். அதில் நீ அருள்பாளிக்க வேண்டும்” “சரி” “மூன்றாவது வரம் கேட்கிறேன். உன்னை யாரெல்லாம் வழிபடுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மரணமே வரக்கூடாது.” இப்படி மானிடன் கேட்பான் என்று யமன் எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்ட யமன் வேறு வழியில்லாமல் மூன்று வரங்களையும் கொடுத்தார். மானிடனை ஆசீர்வதித்துவிட்டு புறப்பட்டார். “பிரபு, மானிடன் கேட்ட வரங்களைக் கொடுத்து விட்டீர்கள்! நல்லது. இனிமேல் உங்களுக்குப் பிரச்சினை இல்லை. உங்களுக்கு வேலையும் இல்லை. நீங்கள் உங்கள் வேலையை ராஜினாமா செய்துவிடலாம்” “நாரதரே,என்ன சொல்கிறீர்கள்? புரியும்படி சொல்” “ இனி, பூலோகத்தில் தெரு வெல்லாம் உனக்கு கோயில் கட்டப்படும். யார் தான் சாவதற்கு விரும்புவார்கள்? உன்னை எல்லாரும் வழிபடுவார்கள். நீங்கள் யார் உயிரையும் பறிக்க முடியாது. பிறகென்ன... உமக்கு ஏது வேலை?” “ இப்போது இது வேறு பிரச்சினையா? நான் என்ன செய்யணும் நாரதரே?” “ உமது பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள்” என்றார் நாரதர். நாரதர் இப்படி சொன்னதும் யம தர்மர் அதிர்ந்தார். ***

ஒரு வீடு இறந்துக்கொண்டிருக்கிறது... -தேவராஜன்


ஒரு வீடு இறந்துக்கொண்டிருக்கிறது... -தேவராஜன் அந்த வீடு ஆனந்தம் விளையாடும் வீடு. அது சந்தோஷங்களால் ஆனது. அன்பினால் அமைத்த வாசல். பாசத்தினால் வேய்ந்த ஓடுகளை உடையது. நேசக்காற்று வரும் ஜன்னல்கள். நட்பும் சுற்றமும் மகிழ்ந்து சிரித்த சிரிப்புகள் நிரம்பி கிடக்கும் முற்றம். மிக்க பல தலைமுறை கண்டது. வெங்கடாஜல முதலியார், ராமசாமி முதலியார், சண்முக முதலியார் என மூன்று தலைமுறை கடந்து, இப்போது ஐந்தாவது தலைமுறையில் இருக்கும் வீடு. இது பார்க்காத சுபகாரியங்களும் இல்லை; துக்க காரியங்களுமில்லை. அந்த தெருவில் அதுதான் பெரிய ஓட்டு வீடு. நாற்சார் வீடு என்பார்கள். நடுவில் கூரையிடப்படாத முற்றம், அதைச் சுற்றி தாழ்வாரம், கூடம், அறைகளும், அமைத்துக் கட்டப்பட்டது. வாசற்படிக்கு முன்பே ஒரு பெரிய தாவாரமும் அதன் ஓரத்தில் ஒரு திண்ணையும் இருக்கும். இரவில், அப்பா அந்த திண்ணையில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டிருப்பார். நாங்கள் தெரு தாவாரத்தில் விளையாடுவோம். வெளியில் இருக்கும் நல்ல வேம்பு மரம் தலை அசைத்தாடும் அழகும், அதன் ஊடே கசியும் நிலவொளியும் பார்க்கப் பார்க்க அழகுபெறும். நான் நல்ல ஓவியன் என்றால், அதை இப்போது தத்ரூபமாக வரைந்து காட்டிவிடுவேன். இரண்டு தாவாரங்களைத் தாண்டி சென்றால், பெரிய திறந்த வாசல். அதன் இடது புறம் கொல்லைப்புறம் செல்லும் நடை பாதை. திறந்த வாசலுக்கு முன்பு ஒரு நடை பாதை இருக்கும். திறந்த வாசலுக்கு வலப்புறம் பெரிய கூடம். சுண்ணாம்பு கல் பதித்த தரை. கூடத்தைத் தாண்டி நடை பாதை வழியே சென்றால் சமையலறை வரும். இவ்வளவு பெரிய வீட்டை பராமரிப்பது என்பது லேசுபட்ட காரியமா என்ன? தாத்தாவோடு தாத்தாவுக்கு இரண்டு பிள்ளைகள், தாத்தாவுக்கு ஐந்து பிள்ளைகள். அப்பாவுக்கு ஐந்து பிள்ளைகள் நான்கு பெண்கள். சுபகாரியங்கள் வந்தால் வீடே திருவிழாகொண்ட கோயில் போல இருக்கும். தொடர்ந்து சில ஆண்டுகள் விவசாயத்தில் நஷ்டம். அப்பா ரொம்பவும் அல்லல்பட்டார். கஷ்டம் வீட்டைச்சுற்றி தலைவிரித்தாடியது. திருநள்ளாற்றில் இருந்து வந்த ஒரு ஜோசியர், ‘இந்த வீடு 100 ஆண்டுகடந்து விட்டது. இதோட ஆயுசு முடிஞ்சிட்டது. அதான் இப்படியொரு கஷ்டம்.’ என்றார். அம்மா பரிகாரம் கேட்டாங்க. ‘இந்த வீட்டின் தலைவாசல் நிலையை எடுத்து, வேறு இடத்தில் வைத்து , கணபதி ஹோமம் செய்தால் வீட்டின் ஆயுள் கொஞ்சம் கூடும். உங்கள் கஷ்டங்கள் படிப்படியாக குறையும்’ என்று வாங்கிய பணத்துக்கு வஞ்சம் இல்லாமல் ஆறுதல் சொன்னார். ஊர் கொத்தனார் வந்தார். நிலையை எடுத்தால் பக்க சுவர்கள் சேதமாகும். செலவு கூடும் என்றார். இதற்கிடையில் முத்தப்பா பெரியப்பா, ‘ குடும்பம் இருக்கிற வீட்டில் தலைவாசல் நிலையை எடுத்தால், வீட்டில் எழவு விழும்’ என்று அவர்மாட்டுக்கு ஒரு குண்டு போட்டு, நிலை எடுக்கும் நினைப்புக்கு அப்போதே முற்றுபுள்ளி வைத்தார். நாங்கள் படித்து, வேலை தேடி திரிந்தோம். சென்னையிலும் பெங்களூரிலும் அவரவர் தகுதிக்கு வேலைக்கிடைத்தது. ஆண்டுகள் சில கடந்தது. குடும்ப கஷ்டம் ஓரளவுக்குக் குறைந்தது. சேமிப்பு பணம் லட்ச ரூபாய் இருந்தது. பழுதுபட்ட வீட்டை பராமரிக்க திட்டமிட்டோம். வீட்டுக்குள் குளியல் அறை, டாய்லெட் கட்ட நினைத்தோம். அப்பா ஒன்றும் சொல்ல வில்லை. ஆனால், வீட்டு திண்ணையை எடுத்து போர்ட்டிகோ வைக்கத்தான் மறுத்துவிட்டார். பிடிவாதம் பிடித்தார். “இந்த திண்ணை எவ்வளவு இடத்தை அடைக்குது. திண்ணையை எடுத்தா இங்க இடம் விசாலமாக இருக்கும்ல?” என்றான் அண்ணன் கண்ணன். திண்ணை ஆங்கொன்றும் இங்கொன்றுமாக சிதலமடைந்துதான் இருந்தது. அப்பா திண்ணையைப் பற்றி அன்று பாடமே எடுத்து விட்டார். “ அமர்வதுக்கும் இளைப்பாறுவதற்கும்தான் திண்ணைன்னு நினைக்கிறீங்க போல. வெளியிலிருந்து நடந்து வருபவர்களின் கால்களோடு ஒட்டிக்கொண்டு வரக்கூடிய அழுக்குகள் திண்ணைகளில் சேராது. திண்ணை எப்போதுமே சுத்தமாக இருக்கும். திண்ணையில் குடும்பத்துடன் அதிகம் நெருக்கமில்லாத வெளியாரை உபசரித்தல், தொழில் ரீதியான வெளியார் தொடர்புகள் போன்றவற்றுக்கு இந்த திண்ணை உதவும்பா. ஒரு காலத்தில் சிறுவர்களுக்குக் கல்வி புகட்டும் இடமாகவும் இவை இருந்ததுண்டு.” என்று திண்ணைப் புராணம் வாசித்தார். கடைசியில் திண்ணை இடிக்கப்பட்டு, நாங்கள் திட்டமிட்டபடி போர்டிகோ அமைத்துவிட்டோம். ஏதோ செய்யட்டும் பசங்க என்று அப்பா ஒதுங்கிவிட்டார். அதுக்கு அப்பறம் அந்த வீட்டில் தான் அப்பாவுக்கு சஷ்டியப்த்த பூர்த்தி, தங்கச்சிக்கு கல்யாணம், மூன்று அண்ணன்களுக்கு கல்யாணம் எல்லாம் நடந்தது. காலம் சரசரவென ஓடிவிட்டது. அப்பா ஒருநாள் பக்கவாதம் வந்துபடுத்துவிட்டார். ஆறுமாதம் அவஸ்தைப்பட்டு ஒரு நாள் காலையில் அவர் உயிர் பிரிந்துவிட்டது. அதுக்கப்பறம் வீடு வெறிச்சோடியோய்விட்டது. அப்பாவும் அம்மாவும் மட்டுமே வசித்த வீடு, அப்பாவுக்குப்பிறகு அம்மா சென்னை வந்து விட்டார்கள். பெரியக்காவும் தங்கச்சியும் திருவாரூரிலும் சின்னக்கா திருவையாற்றிலும் வசிக்கிறாங்க. அண்ணன்கள் மூன்று பேரும் தம்பியும் சென்னையில் வசிக்கிறாங்க. நான் காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன். அவரவர்கள் அங்கங்கே செட்டிலாகிவிட்டோம். ஆதலால் நல்லது கெட்டதுக்கு மட்டுமே திருக்கண்ணபுரம் வந்து செல்கிறோம். ஏதோ கொஞ்ச நேரம் சொந்த வீட்டில் இளைப்பாறிவிட்டு கிளம்பிவிடுவது பழக்கமாகிவிட்டது. ‘வீடு என்பது வெறும் கட்டிடங்கள் மட்டும் இல்லை. அதற்கும் உயிர் உண்டு. நாம் எத்தனை வருடங்கள் அதில் வாழ்கிறோமோ, அத்தனை வருடங்களும் அந்த வீடும் உயிர்ப்புடன் இருக்கும்... வீட்டை விட்டு விலகி செல்ல செல்ல அந்த வீடு இறக்க தொடங்குகிறது...’ என்றோ அப்பா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. வேலை நிமித்தமாக சென்னையிலிருந்து திருவாரூர் வந்த எனக்கு, ஊருக்குப் போகவேண்டும் போல இருந்தது. மாலையே வீட்டுக்கு வந்துவிட்டேன். வீடு அலங்கோலமாக கிடந்தது. குப்பை கூளமாக ஒட்டடை சூழ்ந்து கிடந்தது. வவ்வால்கள் குடும்பம் குடும்பமாக வசிக்கிறது போல. நாற்றம் தாங்கமுடியவில்லை. எலிகள் தொல்லை தாங்க முடியவில்லை. உத்திரத்தில் பாம்பு தோல் உரித்துபோட்டிருந்தது. கொல்லைக்கு வந்து கிணற்றில் நீர் இறைத்து குளித்து விட்டு, பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்குப் போய் வந்தேன். அப்படியே பெருமாள் கோவிலுக்கும் போய்வந்தேன். அங்கேயே இரவு முனியோதரன் பொங்கல் வாங்கி சாப்பிட்டுமுடித்து வீடு திரும்பினேன். கரென்ட் இல்லை. புழுக்கமாக இருந்தது. அவ்வப்போது முற்றத்தில் இருந்து காற்று வந்து ஆசுவாசப்படுத்தியது. துõக்கம் வரவேயில்லை. கமலா அக்கா, சாமி பெரியப்பா, அப்பாவின் இறப்புகள் என் கண்ணில் வந்து நிழலாடியது. அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்கா, தங்கைகள் எல்லாம் இந்த கூடத்தில் ஒண்ணா உட்கார்ந்து சிரித்து, பேசி சாப்பிட்டது, நேசித்த ரகசிய சினேகிதிக்காக நான் ஏங்கி அழுத இரவுகள், என்னுடைய இருபத்தியொரு வயது வரையிலான அதிகபட்ச சந்தோசம், துக்கம், கனவு, பரபரப்பு என எல்லாவற்றையும் இந்த வீட்டின் ஒவ்வொரு சுவரும் நன்றாகவே அறியும்... அதையெல்லாம் எனக்கு இப்போது நினைவுகூர்ந்ததுபோல இருந்தது. எப்போதும் என் நண்பர்களிடத்து இந்த வீடு முக்கியத்துவம் பெற்றது. வவ்வாலடி வைரம் தியேட்டரிலோ, திருமருகல் பரணி தியேட்டரிலோ படம் பார்க்க செல்வதென்றாலும் சரி, படிப்பதென்றாலும் சரி, ஊருக்கு செல்வதென்றாலும் சரி எல்லாம் என் வீட்டின் கொல்லைப்புறத்து கிணற்றங்கரையில்தான் முடிவு எடுக்கப்படும். இப்போது அதை சீண்டுவார் யாரும் இல்லை... அப்பா இருந்தபோதாவது அப்பா, அம்மாவுடன் சில நாட்கள் இருந்து போகணும்னு உள்ளுக்கும் ஆசை இருக்கும். பேரப்பிள்ளைகளும் தாத்தா, பாட்டியைப் பார்க்கணும்... தாத்தா வீட்டுக்குப்போகணும்னு கோடை விடுமுறையில் அடம்பிடிப்பார்கள். அண்ணன், அக்காள், தம்பி , தங்கை எல்லாம் குடும்பத்தோடு வருஷத்து இரண்டு முறையாவது வந்து போவோம். இப்ப, நகர நாகரீகத்தில் ஊறிவிட்ட பிள்ளைகள் வீடியோ கேம், கிரிக்கெட் விளையாட்டு என்று இருக்கிறார்கள். தாத்தா வீட்டுக்குப் போகணும்னு அவங்களுக்கு தோணுவதில்லை. அப்பாவோடு இந்த வீட்டுக்கு இருந்த ஒரு பாச பிணைப்பு கொஞ்சம் கொஞ்சமா விலகிவிட்டது. இப்போ ரெண்டு மூணு வருஷமா யாரும் வீட்டுப்பக்கம் தலைக்காட்டறதே இல்லை. தலைமுறை இடைவெளியும், கால மாற்றமும் தன்னை தனிமைப்படுத்தி விட்டதை இந்த வீடு உணர்ந்துவிட்டதோ? இனிமேல் இந்த வீட்டை பராமரித்து அன்பு காட்ட யாரும் இல்லை என்று நினைத்ததோ என்னவோ இந்த வீடு தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு போய்விட்டதன் அடையாளமாக ஆங்காங்கே சுவர் வெடிப்புகளும், கூடத்து மரத்துõண்களில், உத்திரத்தில் மொய்த்திருக்கும் கரையான்களும் உணர்த்தின. எலிகளும் அணில்களும் ஓடி ஓடி ஓடுகள் உடைந்து ஆங்காங்கே ஓட்டை தெரிந்தது. மழை வந்தால் போச்சு வீடு குளமாகிவிடுவது நிச்சயம். யாரும் இங்கே வசிக்காததால் வீடு ஓர் அனாதையாகிவிட்டது போல, அது ரொம்பவும் துயரப்பட்டிருக்கிறது. தினமும் அது தன் உறவுகளை நினைத்து நினைத்து அழுதுகொண்டிருக்குமோ என்னவோ தெரியவில்லை. ஐந்து தலைமுறையாய் மனுஷர்களை சுமந்து, அவர்களோடு கலந்து இருந்து வீடு, இன்று யாரும் இல்லாமல், வௌக்கு ஏற்றக்கூட ஆள் அரவம் இல்லாமல் இருப்பது எவ்வளவு சோகமாக இருக்கும்? பாவம் இந்த இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளில் இந்த வீடு கொஞ்சம் கொஞ்சமாக இறக்க தொடங்கிவிடும். அதன் அடையாளமாக இப்போதே சிதிலமடையதொடங்கியிருக்கிறது. பொழுது விடிந்தது. சென்னைக்குப்புறப்பட்டேன். சொந்த வீட்டை யார் காப்பாற்றுவது? யார் அங்கே வசித்து? யார் பராமரித்து ,அதன் மீது அன்புகாட்டி இங்கேயே இருப்பது? வீட்டின் இறப்பைத் தடுக்க முடியுமா? என்னால் முடியாது? என்னைப்போலதான அண்ணன், அக்காக்களும் இருப்பார்கள்... அப்போ... இந்த வீடு இறங்கத் தொடங்கிவிட்டதை வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியுமா? *********************************

திருக்கோயில்களில் திருமுறைகள் பாடும் முதல் பெண் ஓதுவார்!


திருக்கோயில்களில் திருமுறைகள் பாடும் முதல் பெண் ஓதுவார்! (தினமலர்- பெண்கள் மலரில் வெளியான கட்டுரை) தமிழகத்தின் திருக்கோயில்களில் பன்னிரு திருமுறைகளைப் பாடுகிறவர்களை ‘ஓதுவார்’ என்பர். பன்னிருதிருமுறைகளைக் கோயில்களில் பெரும்பாலும் ஆண்களே பாடுவர். ஆச்சரியமாக! சென்னையில் செவ்வேள் கோட்டத்தில் தேவார- திருவாசகப்பாடல்கள் மிக இனிமையான பெண்குரலில் ஒலிக்கிறது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் எம். அருள்மொழி. இவர் , தொண்டு மனப்பான்மையோடு தொடர்ந்து பத்தாண்டுகளாக ஓதுவார் பணியை செய்துவருகிறார்! இவரைப்பற்றி... சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர். பார்த்தசாரதிப் பெருமாள் மீது நல்ல பக்திக் கொண்டு, சனிக்கிழமைதோறும் சுப்ரபாத சேவையும், மார்கழி மாதத்தில் திருப்பாவை சேவையும் செய்துவந்தவர். “ ஆண்கள் மட்டும் ஓதுவார் பணியில் ஈடுபடுவார்கள். நீங்கள் எப்படி?” என்று கேட்டதற்கு,“ அதற்கு காரணமாக இருந்தது திருவல்லிக்கேணியில் இருக்கும் இந்து உயர்நிலைப்பள்ளிதான்! அங்குதான் நான் படித்தேன். கோடை காலத்தில், பள்ளியில் பக்தி சொற்பொழிவுகள் நடக்கும். கிருபானந்தவாரியார், கீரன், நீடாமங்கலம் சாஸ்திரிகள், வேளுக்குடி கிருஷ்ணன், முக்கூர் நரசிம்ம சாஸ்திரிகள் போன்றோர் பள்ளிக்கு வந்து சொற்பொழிவு செய்வார்கள். அதை எல்லாம் நான் விரும்பி கேட்பேன். சிறுவயதிலேயே பெருமாள் மீது பக்தி கொண்டிருந்ததால், சுப்ரபாதம் வரிகளை கொஞ்சம் கொஞ்சமாக மனப்பாடம் செய்தேன். அதைப் பாடிவந்தேன். ஆண்டுகள் ஓடியது. திருமணம் ஆனது. புகுந்தவீடு சூளை. வீட்டுக்கு அருகில் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில். தினமும் காலையில் சுப்ரபாதம் சேவை செய்து வருகிறேன். இது பத்து ஆண்டுகளாக தொடர்கிறது” என்றார். “ சுப்ரபாதம் பாடி வந்த நீங்கள் எப்படி திருமுறைகள் பாடும் ஓதுவார் ஆனது எப்படி?” என்று கேட்டோம். கொஞ்சம் யோசித்தவர். “ அது தற்செயலாக நடந்த சம்பவம். ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் நான் சுப்ரபாதம் பாடியதைக் கேட்ட ஒரு பெரியவர். பக்கத்தில் இருக்கும் முருகன் கோயிலில் திருப்புகழ் பாடும்படி கேட்டார். எனக்கு வைணவமும் வைணவ கடவுள் பற்றித்தான் தெரியும். சைவம் பற்றி எதுவும் தெரியாது. இதை அவரிடம் விளக்கினேன். அவர் பிடிவாதமாக இருந்தார். பிறகு, முறைபடி பன்னிரு திருமுறைகள் படித்து பயிற்சி பெற்றேன். அதன் பிறகு சைவக்கோயில்களில் ஓதுவார் பணியை திறமையாக செய்து, பலர் பாராட்டுகளையும், பட்டங்களையும் பெற்றேன்!” என்றார். “கடவுள் மீது இவ்வளவு பக்தி கொண்டு, ஓதுவார் பணியும் செய்து வருகிறீர்கள். உங்களுக்கு ஏற்பட்டு தெய்வீக அனுபவம் ஏதாவது ஏற்பட்டது உண்டா” என்று ஆர்வமாய் கேட்டதற்கு. “ உண்டு. குறிப்பிட்டு சொல்ல இரண்டு சம்பவத்தைச் சொல்கிறேன். ‘ திருவாடுதுறை ஆதினம் நடத்திய சைவ சிந்தாந்தம் சமயப்பயிற்சி பெற்றபோது, ஒரு தேர்வில இறைத்தன்மையும் இறைஅனுபவமும்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன். அதை திருத்தி மதிப்பிட்ட, வைத்தியநாதன் ஆசிரியர் 99 அரை மார்க்க போட நினைத்தாராம். அப்போது, அவர் முதுகில் தட்டி, ‘வைத்தியநாதா நுõறு மார்க் போடு!’ என்று உத்தரவிட்டதாம் ஒரு குரல். திரும்பி பார்த்தால் யாருமில்லை. அவரும் நுõறுமார்க் போட்டார். அவர் முதுகை தட்டி சொன்னது முருகன் என்பது பிறகு புரிந்து கொண்டார். இது ஒரு அனுபவம். 2011ல் என் தலைமையில் கயிலைப் பயணம் புறப்பட்டோம். என் குழுவில் இருந்தவர்கள் எல்லாம் ஓதுவார் கூட செல்வதால் நிச்சயம் நமக்கு கயிலையில் இறைக்காட்சி கிடைக்கும் என்று என்னை முழுமையாக நம்பி வந்தனர். எனக்கு அச்சம் ஏற்பட்டது. ஓடிப்போய் முருகன் சந்நிதியில், ‘முருகா, இது என்ன சோதனை! கயிலையில் எனக்கு இறைக்காட்சி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், என்னுடன் வருபவர்களுக்கு ஏமாற்றாமல் இறைக்காட்சி கொடுத்து விடு!’ என்று அழுது, புலம்பி பிரார்த்தனை செய்தேன். கயிலை பயணத்தில் என்ன ஆச்சரியம்! எனக்கும் என் குழுவினருக்கும் மலையில் ஈசன் 18 விதமாக காட்சி கொடுத்தார்!” என்று சிலிர்த்துக்கொண்டார் அருள்மொழி. “வாசகர்களுக்கு வாழ்வில் அறிவுரை இருந்தால் சொல்லுங்கள்!” என்றதற்கு, “ தாராளமாய்” என்ற புன்னகைத்தவர். “ பெண்கள் பொறுமையாக இருக்கணும். தினமும் காலை மாலை நல்விளக்கேற்றணும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இறைவனை நினைக்கணும். நம் இந்திய கலாசாரத்தையும் பண்பாட்டையும் நிலைநிறுத்தணும். குடும்பத்தில் எப்போதும் இனிமையாக பேசணும். நம் செயல் எல்லாம் நம் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது தரக்கூடியதாக இருக்கணும்!” என்றார் முத்தாய்ப்பாய் அருள்மொழி. - தேவராஜன். படங்கள்: செல்வம்

தமிழர் தீபாவளி என்பது எது?


தமிழர் தீபாவளி என்பது எது? தீபாவளிப் பண்டிகை என்பது 300 ஆண்டுகளாக தமிழர்களிடையே மிக பிரபலம் அடைந்து வருகிறது. இது நரகாசுரனைக் கிருஷ்னண் கொன்ற நாள் என்றும் அதையே மக்களும் கொண்டாடுகின்றனர் என்றும் கூறுகிறார்கள். ஒருவர் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவது என்பது நாகரீகம் ஆகாது. எவர் ஒருவர் சாவிலும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவது அநாகரீகமான செயலே. ஒருவன் மரணத்தில் இனிப்பு உண்டு மகிழ்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. விஷ்ணு புராணத்திலும், தேவி பாகவதத்திலும் இந்தக் கதை கூறப்படுகிறது. அதிலும் கூட நரகாசுரனின் தாயாகிய பூமாதேவி அவனை மன்னித்தருள் என்றுதான் கேட்டதாகக் கூறப்படுகிறதே ஒழிய,அவன் இறந்ததை இந்த பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டதாக கூறப்படவில்லை. அதுதான் தீபாவளியாகக் கொண்டாடப் படுகிறது என்கிற குறிப்பும் இல்லை. பூமாதேவி திருமாலின் இன்னொரு மனைவி. வராக அவதாரத்தில் திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன் என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது. திருமாலோ தேவர்களில் ஒருவர். அவருக்கு பிறந்தவன் எப்படி அசுரனாவான்? நரகாசுரனை அவன் தந்தை நாராயணன் கொன்றதைக் கொண்டாடுவதே தீபாவளி என்பது விஷ்ணுபுராணத்திற்கும் அறிவிற்கும் உலகியலுக்கும் பொருந்தாதது. தீபாவளி என்ற சொல் வடசொல். ஆவளி என்றால் வரிசை. நாமாவளி என்பது நாமங்களின் வரிசை என்பது போல தீபாவளி என்றது தீபங்களின் வரிசையைக் குறிக்கும். இத் தீப வழிபாடு சிவ விரதங்கள் எட்டில் ஒன்று. இந்தப் பண்டிகையின் பொருள் குறித்த செய்தி சிவபுராணங்களில் இருக்கிறது. இது கௌரி நோன்போடு தொடர்புடையது. கௌரி நோன்பு நவராத்திரியோடு தொடர்புடையது. நவராத்திரி புரட்டாசி அமாவாசையிலிருந்து தொடங்கும். அன்றிலிருந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி கொலு கொண்டாடப்படும். அம்பிகையாகிய சிவசக்தி ,சிவப்பரம்பொருளிலிருந்து பிரிந்து வந்து இந்த உலகில் பல்வேறு வடிவங்களில் உயிரினங்களைப் படைப்பதைக் குறித்தது. அந்தப் படைப்பை ஒன்பது சக்திகளாக பிரித்து ஐம்பெரும்பூதங்களையும், சூரியனையும், சந்திரனையும், உயிர்களின் உடல்களையும் படைக்கிறாள், அதனால்தான் இதை ஒன்பது ராத்திரிகளில் வைத்துக் கொண்டாடினார்கள். இதன்பின் அம்பிகை சிவப்பரம்பொருளிடம் இருந்து பிரிந்த நிலை மாறி சிவப் பரம்பொருளிடம் சென்று சேருகிறாள். அதாவது மீண்டும் சிவபரம்பொருளை அடைய நவராத்திரி ஒன்பதாம் நாள் தொட்டு 21 நாட்கள் தவமிருந்து நோற்று மெல்ல மெல்ல சிவபரம்பொருளை அடைகிறாள். இதையே கேதார கௌரி விரதம் என்றார்கள். ஆகவேதான் வருடாவருடம் நவராத்திரியின் ஒன்பதாம் நாள் ஆகிய ஆயுத பூசை நாளிலிருந்து 21 ஆம் நாளில் கேதார கௌரி நோன்பும் அதையொட்டி தீபாவளியும் வரும். இறைவன் இந்த உலகை விரிக்க முதலில் சத்தியை தன்னிலிருந்து பிரித்து வெளியாக்குகின்றான். அந்த சத்தி ஒன்பது சத்தியாய் பிரிந்து இந்த உலகைப் படைக்கிறாள். படைப்பின் நோக்கம் முடிந்ததும் சத்தி மீண்டும் சிவத்தில் ஒடுங்கி விடுகிறாள். ஆகவே பிரளயத்தில் பல உயிர்கள் முத்தி அடைகின்றன. அதில் நமது முன்னோர்களில் சிலரும் அடங்கலாம் அல்லவா? அதற்கு வாய்ப்பு உண்டுதானே! எனவே அவர்கள் பெற்ற முத்தியொளிச் சேர்க்கையைக் குறித்தே பல அகல்களில் தீபம் ஏற்றி வரிசையாக வீட்டில் வைத்து அவற்றை வணங்குகின்றோம். அதுதான் தீபாவளி என்று ஆயிற்று. இறந்த முன்னோர்களில் பலர் இறை ஒளியில் கூடுவதைக் கொண்டாடுவது சிறப்புதானே! இதுதான் தீபாவளிக் கொண்டாட்டம் ஆயிற்று. பட்டாசு வெடிப்பதன் பொருள் உயிர்களை கடும் பற்றாகப்பற்றிய ஆணவம் சிதைந்து உயிர் முத்தியொளி பெற்றதைக் குறிக்கவே பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. புத்தாடை அணிவதன் பொருள் சத்தி இடப்பாகம் பெற்று சிவத்தில் ஒடுங்கியது சத்தியும் சிவமும் இரண்டறக் கலந்ததைக் குறிக்கும். இதை சிவ-சத்தி திருமணம் என்பர். திருமணம் என்றால் புத்தாடை புனைவது இயல்புதானே? கங்கா ஸ்நானம் பொருள் என்றைக்கோ இறந்த நம் முன்னோர்களுக்கு எல்லாம் கங்கையில் ஒரு சேர நீரொழுக்கி (தர்ப்பணம் செய்து) நீர்க்கடன் ஆற்றுவது இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். அது போல இந்த தீபாவளி நாள் நமது முன்னோர்கள் முத்தி பெற்ற நன்னாள் என்பதால் அன்றைய முழுக்கை அதை நினைவுபடுத்தி கங்கா ஸ்நானம் என்றார்கள். நம் முன்னோர்கள் முத்தி பெற்றார்கள் என்பதையே தீபாவளியில் இனிப்புகள் உண்டு கொண்டாடுகிறோம். தீபாவளிப் பண்டிகை தமிழர்களால் முதலில் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்பட்டது. அதுவே கார்த்திகை தீபம் என்று இன்றும் நின்று நிலவுகிறது. பின்னர் அது ஐப்பசி மாதத்திற்கு முன் தள்ளப்பட்டது. காரணம் முன்னொரு காலத்தில் தமிழ் வருடம் என்பது சித்திரையில் தொடங்காமல் ஆவணியில் தொடங்குவதாக வைத்துக் கொண்டிருந்தனர் தமிழர். அதாவது சூரியனின் ஆட்சி இடமான சிம்ம ராசியில் சூரியன் புகும் மாதமான ஆவணியிலிருந்து முன்பு வருடம் தொடங்குவதாக அமைத்துக் கொண்டனர் தமிழர். பின்னர் வானியல் அறிவு வளர வளர சூரியன் உச்சம் பெரும் மேச ராசியில் சூரியன் புகும் சித்திரை மாதத்திலிருந்து வருடம் தொடங்குவதாக மாற்றிக் கொண்டார்கள். முதலில் ஆவணியில் வருடம் தொடங்கிய போது அதற்கேற்ப தீபாவளியைக் கார்த்திகை மாதத்தில் அமைத்து கார்த்திகை தீபம் என்று கொண்டாடினர். ஆனால் ஆவணி மாதத்திலி ருந்து சித்திரை மாதத்திற்கு வருடத்தொடக்கம் முன் தள்ளப்பட்ட காரணத்தால் ஒரு மாதம் முன்னதாக தீபாவளியை ஐப்பசி மாதத்தில் வைத்தனர் தமிழர். ******