தமிழர் தீபாவளி என்பது எது?
தீபாவளிப் பண்டிகை என்பது 300 ஆண்டுகளாக தமிழர்களிடையே மிக பிரபலம் அடைந்து வருகிறது.
இது நரகாசுரனைக் கிருஷ்னண் கொன்ற நாள் என்றும் அதையே மக்களும் கொண்டாடுகின்றனர் என்றும் கூறுகிறார்கள்.
ஒருவர் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவது என்பது நாகரீகம் ஆகாது. எவர் ஒருவர் சாவிலும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவது அநாகரீகமான செயலே. ஒருவன் மரணத்தில் இனிப்பு உண்டு மகிழ்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.
விஷ்ணு புராணத்திலும், தேவி பாகவதத்திலும் இந்தக் கதை கூறப்படுகிறது. அதிலும் கூட நரகாசுரனின் தாயாகிய பூமாதேவி அவனை மன்னித்தருள் என்றுதான் கேட்டதாகக் கூறப்படுகிறதே ஒழிய,அவன் இறந்ததை இந்த பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டதாக கூறப்படவில்லை. அதுதான் தீபாவளியாகக் கொண்டாடப் படுகிறது என்கிற குறிப்பும் இல்லை.
பூமாதேவி திருமாலின் இன்னொரு மனைவி. வராக அவதாரத்தில் திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன் என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது. திருமாலோ தேவர்களில் ஒருவர். அவருக்கு பிறந்தவன் எப்படி அசுரனாவான்?
நரகாசுரனை அவன் தந்தை நாராயணன் கொன்றதைக் கொண்டாடுவதே தீபாவளி என்பது விஷ்ணுபுராணத்திற்கும் அறிவிற்கும் உலகியலுக்கும் பொருந்தாதது.
தீபாவளி என்ற சொல் வடசொல். ஆவளி என்றால் வரிசை. நாமாவளி என்பது நாமங்களின் வரிசை என்பது போல தீபாவளி என்றது தீபங்களின் வரிசையைக் குறிக்கும். இத் தீப வழிபாடு சிவ விரதங்கள் எட்டில் ஒன்று.
இந்தப் பண்டிகையின் பொருள் குறித்த செய்தி சிவபுராணங்களில் இருக்கிறது.
இது கௌரி நோன்போடு தொடர்புடையது. கௌரி நோன்பு நவராத்திரியோடு தொடர்புடையது. நவராத்திரி புரட்டாசி அமாவாசையிலிருந்து தொடங்கும். அன்றிலிருந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி கொலு கொண்டாடப்படும். அம்பிகையாகிய சிவசக்தி ,சிவப்பரம்பொருளிலிருந்து பிரிந்து வந்து இந்த உலகில் பல்வேறு வடிவங்களில் உயிரினங்களைப் படைப்பதைக் குறித்தது. அந்தப் படைப்பை ஒன்பது சக்திகளாக பிரித்து ஐம்பெரும்பூதங்களையும், சூரியனையும், சந்திரனையும், உயிர்களின் உடல்களையும் படைக்கிறாள், அதனால்தான் இதை ஒன்பது ராத்திரிகளில் வைத்துக் கொண்டாடினார்கள்.
இதன்பின் அம்பிகை சிவப்பரம்பொருளிடம் இருந்து பிரிந்த நிலை மாறி சிவப் பரம்பொருளிடம் சென்று சேருகிறாள். அதாவது மீண்டும் சிவபரம்பொருளை அடைய நவராத்திரி ஒன்பதாம் நாள் தொட்டு 21 நாட்கள் தவமிருந்து நோற்று மெல்ல மெல்ல சிவபரம்பொருளை அடைகிறாள். இதையே கேதார கௌரி விரதம் என்றார்கள். ஆகவேதான் வருடாவருடம் நவராத்திரியின் ஒன்பதாம் நாள் ஆகிய ஆயுத பூசை நாளிலிருந்து 21 ஆம் நாளில் கேதார கௌரி நோன்பும் அதையொட்டி தீபாவளியும் வரும்.
இறைவன் இந்த உலகை விரிக்க முதலில் சத்தியை தன்னிலிருந்து பிரித்து வெளியாக்குகின்றான். அந்த சத்தி ஒன்பது சத்தியாய் பிரிந்து இந்த உலகைப் படைக்கிறாள். படைப்பின் நோக்கம் முடிந்ததும் சத்தி மீண்டும் சிவத்தில் ஒடுங்கி விடுகிறாள்.
ஆகவே பிரளயத்தில் பல உயிர்கள் முத்தி அடைகின்றன. அதில் நமது முன்னோர்களில் சிலரும் அடங்கலாம் அல்லவா? அதற்கு வாய்ப்பு உண்டுதானே! எனவே அவர்கள் பெற்ற முத்தியொளிச் சேர்க்கையைக் குறித்தே பல அகல்களில் தீபம் ஏற்றி வரிசையாக வீட்டில் வைத்து அவற்றை வணங்குகின்றோம். அதுதான் தீபாவளி என்று ஆயிற்று.
இறந்த முன்னோர்களில் பலர் இறை ஒளியில் கூடுவதைக் கொண்டாடுவது சிறப்புதானே! இதுதான் தீபாவளிக் கொண்டாட்டம் ஆயிற்று.
பட்டாசு வெடிப்பதன் பொருள்
உயிர்களை கடும் பற்றாகப்பற்றிய ஆணவம் சிதைந்து உயிர் முத்தியொளி பெற்றதைக் குறிக்கவே பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.
புத்தாடை அணிவதன் பொருள்
சத்தி இடப்பாகம் பெற்று சிவத்தில் ஒடுங்கியது சத்தியும் சிவமும் இரண்டறக் கலந்ததைக் குறிக்கும். இதை சிவ-சத்தி திருமணம் என்பர். திருமணம் என்றால் புத்தாடை புனைவது இயல்புதானே?
கங்கா ஸ்நானம் பொருள்
என்றைக்கோ இறந்த நம் முன்னோர்களுக்கு எல்லாம் கங்கையில் ஒரு சேர நீரொழுக்கி (தர்ப்பணம் செய்து) நீர்க்கடன் ஆற்றுவது இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். அது போல இந்த தீபாவளி நாள் நமது முன்னோர்கள் முத்தி பெற்ற நன்னாள் என்பதால் அன்றைய முழுக்கை அதை நினைவுபடுத்தி கங்கா ஸ்நானம் என்றார்கள். நம் முன்னோர்கள் முத்தி பெற்றார்கள் என்பதையே தீபாவளியில் இனிப்புகள் உண்டு கொண்டாடுகிறோம்.
தீபாவளிப் பண்டிகை தமிழர்களால் முதலில் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்பட்டது. அதுவே கார்த்திகை தீபம் என்று இன்றும் நின்று நிலவுகிறது. பின்னர் அது ஐப்பசி மாதத்திற்கு முன் தள்ளப்பட்டது. காரணம் முன்னொரு காலத்தில் தமிழ் வருடம் என்பது சித்திரையில் தொடங்காமல் ஆவணியில் தொடங்குவதாக வைத்துக் கொண்டிருந்தனர் தமிழர். அதாவது சூரியனின் ஆட்சி இடமான சிம்ம ராசியில் சூரியன் புகும் மாதமான ஆவணியிலிருந்து முன்பு வருடம் தொடங்குவதாக அமைத்துக் கொண்டனர் தமிழர்.
பின்னர் வானியல் அறிவு வளர வளர சூரியன் உச்சம் பெரும் மேச ராசியில்
சூரியன் புகும் சித்திரை மாதத்திலிருந்து வருடம் தொடங்குவதாக மாற்றிக் கொண்டார்கள்.
முதலில் ஆவணியில் வருடம் தொடங்கிய போது அதற்கேற்ப தீபாவளியைக் கார்த்திகை
மாதத்தில் அமைத்து கார்த்திகை தீபம் என்று கொண்டாடினர். ஆனால் ஆவணி மாதத்திலி
ருந்து சித்திரை மாதத்திற்கு வருடத்தொடக்கம் முன் தள்ளப்பட்ட காரணத்தால் ஒரு மாதம்
முன்னதாக தீபாவளியை ஐப்பசி மாதத்தில் வைத்தனர் தமிழர்.
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக