வெள்ளி, 2 மே, 2014

பறக்கும் தட்டு மர்மங்கள்... - &&&தேவராஜன்.


பறக்கும் தட்டு மர்மங்கள்... - &&&தேவராஜன். வானத்தில் பறக்கும் தட்டுகள் அவ்வப்போது பறந்து வருகின்றன. அதில் வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்கின்றனர். வேற்றுகிரக வாசிகள் நம் பூமியை ஆய்வு செய்து வருகின்றனர். இப்படி எல்லாம் பல அதிர்ச்சி தகவல் உலகில் பல பகுதிகளில் இருந்தும் இன்றும் வந்துகொண்டே இருக்கின்றன. வானத்தில் பறப்பதாக சொல்லப்படும் எதுவென்று திட்டவட்டமாக குறிப்பிடமுடியாத இந்த பறக்கும் பொருட்களை ‘அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்’ (க்ணடிஞீஞுணtடிஞூடிஞுஞீ ஊடூதூடிணஞ் Oஞடீஞுஞிtண்) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகில் பறக்கும் தட்டுகள் பற்றிய சுவாரஸ்யமான சில சம்பவங்களைப் பார்க்கலாமா? 1960ம் ஆண்டில் அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பகுதியில், பறக்கும் தட்டு ஒன்று இறங்கியது அதை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பார்த்தனர். பால் ட்ரெண்ட் என்பவர் அதனை படமெடுத்தார். பத்திரிகைகளிலும் அது பற்றிய செய்திகள் வெளியானது. 1973ல் அமெரிக்காவின் நியூ ஆர்லின்ஸ் துறைமுகத்தின் பணிபுரியும் இருவர் பறக்கும் தட்டைக் கண்டனர். இரவு நேரத்தில் வேலை முடித்து அவர்கள் வீடு திரும்பும் போது பறக்கும் தட்டு அவர்கள் முன் தோன்றியது. அதிலிருந்து இறங்கிய சில உருவங்கள் அவர்கள் இருவரையும் பறக்கும் தட்டுக்குள் கொண்டு சென்று, சில ஆய்வுகளைச் செய்தன. அரைகுறை மயக்கத்தில் இருந்த இருவரும் தங்களுக்கு நடப்பனவற்றை உணர முடிந்தாலும் அவர்களால் அந்த பறக்கும் தட்டு மனிதர்களை எதிர்த்து எதுவும் செய்யாத நிலையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். 1088ம் ஆண்டின் இடைப்பட்டப் பகுதி. சீன பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷென் குயோ என்பவர் ட்ரீம் பூல் என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த கட்டுரை யில்,சீனாவில் ஒரு கிராமப் பகுதியான யாங்க்சௌ என்ற பகுதியைச் சேர்ந்த அன்ஹூய் மற்றும் ஜியாங்சு விவசாயிகள் தாங்கள் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்த போது, வானத்தில் இருந்து தட்டு போன்ற ஒரு பெரிய பொருள் பறந்து வந்தது. அந்தப் பொருளில் இருந்த கதவுகள் திறக்கப்பட்டு, உள்ளேயிருந்து கண்கூசத்தக்க ஒளி பாய்ந்து வருவதைக் கண்டதாகவும் அதன் நிழல், பத்து மைல் தூரம் வரை நீண்டு இருந்து இருந்ததாகவும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். 1878ம் ஆண்டு. வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டென்னிசன் என்ற தினசரிபத்திரிகை. ஏ ஸ்ட்ரேன்ஜ் பினோமினா (புதுமையான பெயர் தெரியாத உருவம்) என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டுருந்தது. அந்தச் செய்தியில், டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஜான் மார்ட்டின் என்பவர், தான் வயலில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய கரிய வட்ட வடிவ பறக்கும் பொருள் தான் கண்டதாகவும், அது பலூன் வடிவில் ஒத்திருந்ததாகவும் தன் ஆச்சர்யத்தை வெளியிட்டிருந்தார். 1904ம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து சரக்குக் கப்பல் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து 300 மைல்கள் மேற்கே பயணித்துக்கொண்டிருந்தபோது, மூன்று பிரகாசமான முட்டைவடிவ மற்றும் வட்ட வடிவ பொருள்கள் அணிவரிசையாக வேகமாக பறந்து சென்றதும், பின்னர் தன் போக்கை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார் அக்கப்பல் மாலுமி. இப்படி விதவிதமான பறக்கும் தட்டு சம்பவங்கள் பற்றி விஞ்ஞானிகளின் கருத்து எப்படி இருக்கிறது தெரியுமா? ‘பறக்கும் தட்டுக்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. அவ்வாறு ஒருவேளை இருந்தாலும், ரேடார் போன்ற கருவிகள் அவற்றைத் துல்லியமாகக் கண்டுபிடித்துக் கூறி விடும் என்றும் கூறுகின்றனர். ஒரு சில ஆய்வாளர்களோ பறக்கும் தட்டுக்கள் மிக வேகமாக ஒளியின் அளவிற்கு வேகமாகப்பறப்பவை என்றும் அதனால்தான் ரேடாரின் கண்களுக்குச் சிக்குவதில்லை என்றும் கூறுகின்றனர். பாக்ஸ் செய்தி: *பிரிட்டன் நாடு மட்டும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக தாம் சேகரித்து வைத்துள்ள இரகசிய அறிக்கைகளை வெளியிட்டது. 6ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 1994 – 2000 வரையான காலப் பகுதியில் பறக்கும் தட்டுக்கள் குறித்து திரட்டப்பட்ட தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. * அது முதலில் 240 கிமுவில் வானில் அதிசயதக்க ஒரு பொருள் பார்த்ததாகவும் அது ஹாலியின் வால்மீன் என்று சீன வான சாஸ்திர வல்லுநர்களால் பதிவு செய்யப் பட்டுள்ளது. * அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றி புலனாய்வுகளுக்கு உட் படுத்தப்பட்டு, பல ஆண்டுகள் நோக்கத்தில் பரவலாக ஆய்வுகள் நடத்தப்படு வருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, யு.கே, ஜப்பான், பெரு, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன், பிரேஸில், சிலி, உருகுவே, மெக்ஸிகோ, ஸ்பெயின், மற்றும் சோவியத் யூனியன் போன்ற நாடுகளில் அரசாங்கமோ அல்லது கல்வியியல் சுயேச்சை அமைப்புகளோ அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றிய அறிக்கைகள் பற்றி பல்வேறு கால கட்டங்களில் புலனாய்வுகள் செய்து கொண்டு வருகின்றன.

புதையுண்ட ரோஜா நகரம்! - ................................................... தேவராஜன்


புதையுண்ட ரோஜா நகரம்! - ................................................... தேவராஜன் .............................................................................................................. ஒரு நகரமே ரோஜா வண்ணத்தில் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்? அப்படி ஒரு நகரம் இருக்குமா? உண்மையில் அப்படி ஒரு நகரம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. மேற்கு ஆசியாவில் உள்ள ஜோர்டானில் இருந்திருக்கிறது. சவுதி அரேபியாவுக்கு அருகில் அமைந்துள்ள சிறிய நாடுதான் ஜோர்டான். இது சாக்கடலுக்கும், அகாபா வளைகுடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. 18ம் நூற்றாண்டு வரை இது புதையல் நகரம். இந்த ரோஜா நகரம் பற்றி உலகத்துக்கு தெரியாது. இந்த அழகான, அற்புதமான, கலைபொக்கிஷமான மலை நகரத்தை, 1812ம் ஆண்டு லுட்விக் பர்க்ஹார்ட் என்ற சுவிட்சர்லாந்து நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்து, தான் கண்டு பெற்ற இன்பத்தை உலகம் கண்டு இன்புற வெளி உலகுக்கு அடையாளம் காட்டினார். பின்னர் 1985ம் ஆண்டு இது யுனெஸ்கோ அமைப்பால் உலக கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ‘இறப்பதற்கு முன் உலகில் அவசியம் பார்க்க வேண்டிய 28 இடங்கள்’ என்கிற பட்டியலில் பிரதானமான இடத்தை பெட்ராவுக்கு அளித்துள்ளது ஸ்மித்சோனியன் என்கிற பத்திரிகை. கி.மு 3ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜோர்டான் பிரதேசத்தை ஆண்டுவந்த நெபாட்டியன்கள் காலத்தில் பெட்ரா நகரம் உருவாக்கப்பட்டது. பண்டைய காலத்தில் நெபாடியன்களின் தலைநகரமாக செல்வ வளம் கொழித்த நகரம் தான் பெட்ரா. பெட்ரா என்றால் கிரேக்க மொழியில் பாறை என்று அர்த்தம். நாலாபுறமும் மலைகள். நடுவில் பள்ளத்தாக்கு. இந்த நகரம் மிகவும் பாதுகாப்பாக அமைந்திருந்தது. பெட்ரா நகரத்தில் 20,000 நெபாடியன்கள் மட்டும் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்கள் தண்ணீர் சேமிப்பதில் வல்லர்கள். அந்த வறண்ட மலைப் பிரதேசத்தில் பெய்யும் மழை வீணாகி விடாத வகையில், நகருக்குள் நேர்த்தியான கால்வாய்கள், அணைகள் போன்றவற்றை அமைத்து தண்ணீரை பல இடங்களில் தேக்கியுள்ளனர். வானைத் தொடும் வகையில் உயர்ந்து நிற்கும் குகைக் கோவில்கள் தான் இந்த நகரின் சிறப்பம்சம். இவற்றில் பல காலவெள்ளத்தில் சிதைந்து விட்டாலும், இன்னும் சில பிரம்மாண்டங்கள் அங்கே நிலைத்து நிற்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, கருவூலம் என அழைக்கப்படும் அல்-கஸ்னே. இந்த கல் கட்டிடத்தின் சிற்ப வேலைப்பாடுகளையும், கைவினை நுணுக்கங்களையும் பார்க்கும் போது( நம் நாட்டு மகாபலிபுரத்தை மிஞ்சி விடும்) இது உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கும். பெட்ராவில் உள்ள ஒவ்வொரு கல் மாளிகையும் கட்டிடக் கலைக்கு பெருமை சேர்ப்பவை. பல கலாசாரங்களின் கலவையாக இந்த கல் மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. நகரின் மையத்தில் அமைந்துள்ள பெரிய கோவிலின் முகப்பு பகுதி நான்கு தூண்களுடன் பிரம்மாண்டமாக இருக்கிறது. பெட்ரா நகர் கலைப்பொக்கிஷங்களை பொதுவாக நான்கு வகைகளுக்குள் அடக்கிவிடலாம். கருவூலக் கட்டடம், வெளிப்புற கல்லறைகள், வாடி மூசா கல்லறைகள், கலைக்காட்சியகம் ஆகியன. இவ்வளவு சிறப்பு பெற்ற அழகு நகரம் யார் கண்பட்டதோ தெரியவில்லை! கி.மு. 312 ம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட பெட்ரா நகரம் கி.பி. 363 ல் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தின் காரணமாகவும், கி.பி. 700 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாகவும் மண்ணுக்குள் முழுமையாக புதைந்து போய்விட்டது. பாக்ஸ் செய்தி அல் கேசினே! * லுட்விக் ஒரு சுற்றுலாப் பிரியர். சரித்திரப் பெருமை வாய்ந்த டமாஸ்கஸ், லெபனான். எகிப்து மற்றும் அரேபியாவின் பல சிறிய தேசங்களைச் சுற்றி வந்தவர். உண்மையில் நைல் நதியின் மூலத்தை அடைந்து அதன் ஆற்றுப்படுகைகளில் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபடும் நோக்கில்தான் அவர் தனது புதிய பயணத்தைத் தொடங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக ஜோர்தானில் புதைந்து கிடந்த பிரம்மாண்டமான கருவூலமான அல் கேசினே-வை கண்டுபிடித்தார். நெபாடியர்களின் கடவுள்! *பெட்ராவில் வாழ்ந்த மக்கள் பல தெய்வங்களை வணங்கிவந்தனர். அவர்களது மதம் இன்னதென்று தனித்துக் குறிப்பிட்டு விட முடியாதபடி கலப்பு மதமாக இருந்து வந்திருக்கிறது. அவர்களது காலத்தில் கட்டப்பட்டிருந்த ஆலயங்களில் அவர்கள் வணங்கிவந்த அல்அஸி மற்றும் துஷாரா ஆகிய கடவுள்களை பிரதிபலிக்கும்விதமாக சிலைகள், தூண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. துஷாரா கடவுளை போற்றி வணங்கும் துஷாரி பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. அவர்களது ஆலயங்களுக்கு அல் டெயிர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பெட்ரா கண்காட்சியகம் *1994ல் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் பெட்ராவில் கண்டெடுக்கப்பட்ட சிறிய மண் சிற்பங்கள், பயன்படுத்திய பாத்திரங்கள், ஓவியங்கள், கலை வேலைப்படுகள் கொண்ட கைவினைப்பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கண்காட்சியாக வைத்திருந்தனர்.

சனி, 19 ஏப்ரல், 2014

பூமியை பயமுறுத்தும் விண்கற்கள்! - &தேவராஜன்.


பூமியை பயமுறுத்தும் விண்கற்கள்! - &தேவராஜன். *************************************************************************************************************************** இந்தப் பூமியை அவ்வப்போது வந்துஅச்சுறுத்தும் எதிரிகளில் ஒன்று விண்கற்கள். இந்த விண்கற்கள் சில, பூமியை பயமுறுத்திய சம்பவங்கள் சில உண்டு. அந்த சம்பவங்கள் இதோ! ரஷ்யாவில் யுரல் மலைப் பகுதியில் 2013 ம் ஆண்டு பிப்ரவரி 15 தேதி சக்தி வாய்ந்த விண்கல் ஒன்று விழுந்தது. சுமார் 55 அடி அகலமும் 10,000 டன் எடையும் கொண்டிருந்த இந்த விண்கல் மணிக்கு 44,000 மைல்கள் வேகத்தில் பூமியை நோக்கி வந்துள்ளது. பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த இந்த விண்கல் 32.5 மணித்துளிகளில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 15 மைல் தூரத்தில் வெடித்து சிதறியது. இந்த விண்கல் சிதறி தாக்கியதில் ரஷ்ய நாட்டில் உள்ள சிலியாபின்ஸ்க் நகரில் சுமார் 1200 பேர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இந்த விண்கல் 1945 ஆம் ஆண்டு ஜப்பான் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 30 மடங்குகள் அதிகமான சக்தி வாய்ந்தது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கலிபோர்னியா, நெவாடா மாகாணத்தில் 2012ம் ஆண்டு ஏப்ரல் 22 ம் தேதி காலை 8 மணி அளவில் வானில் அதிசய ஒளி தென்பட்டது. அந்த ஒளி தோன்றியதைத் தொடர்ந்து இடி முழக்கசத்தம் இரண்டு முறை கேட்டது. வீடுகள் அதிர்ந்தன. குழந்தைகள் பயத்தால் அலறின. வீடுகளில் இருந்தவர்கள் நிலை தடுமாறி சுவர் மீதும் ஜன்னல் மீதும் மோதினர். கலிபோர்னியா, நெவாடா மாகாணங்களில் 600 கி. மீட்டர் பிராந்தியத்தில் இக்காட்சி தென்பட்டுள்ளது. வாஷிங் மெஷின் அளவிலான விண்கல் காற்று மண்டலத்தில் நுழைந்து தீப்பிடித்து வெடித்த போது தான் இப்படியான அதிசய விளைவுகள் ஏற்பட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படி அபூர்வமாக வடிவில் பெரிய கல் வந்து விழுமானால் அது காற்று மண்டலம் வழியே இறங்கும் போது பயங்கர சத்தத்துடன் வெடிக்கும். இப்படி பூமியில் வந்து விழுந்த கற்களை மியூசியத்தில் காணலாம். இவற்றை விண்கல் என்று குறிப்பிடுகின்றனர். சில சமயம் பெரிய விண்கல அவ்வளவாகச் சேதமடையாமல் பூமியில் வந்து விழுவதுண்டு. ஆப்பிரிக்காவில் நமீபியா நாட்டில் வந்து விழுந்த விண்கல் இதற்கு உதாரணம். இதன் எடை 60 டன். இது சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அபூர்வமாக பெரிய பாறை பூமியில் வந்து விழுந்ததும் உண்டு. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பாரிங்கர் கிரேட்டர் என்னும் வட்ட வடிவப் பள்ளம் பெரிய பாறை வந்து விழுந்ததால் ஏற்பட்டதே. சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், 45 மீட்டர் அகலம் கொண்ட விண்கல் வந்து விழுந்ததால் இது தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 2012ம் ஆண்டு டிசம்பரில் இலங்கையில் பொலன்னறுவை நகருக்கு மேலே வானத்தில் ஒரு நெருப்பு பந்து பூமி நோக்கி விழுந்தது. கீழே வீழ்ந்த விண்கற்களின் பாகங்களைச் சேகரித்து இலங்கையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இதன் சில பாகங்களை மேல் ஆய்வுக்காக வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினர். அதை ஆராய்ந்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அவற்றில் பாசி போன்ற உயிர் சுவட்டினை அடையாளம் கண்டுள்ளனர். பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் வாழ்க்கை ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது இது போன்ற விண்கற்களின் வீழ்கையால் தான் என்ற கணித்திருக்கின்றனர். சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் விண்கல் வந்து பூமியில் மோதியதன் விளைவாகத்தான் டைனோசார் வகை விலங்குகள் அழிந்ததாகச் சொல்லப்படுகிறது. ***பாக்ஸ் செய்தி **** வருகிற 2032 ம் ஆண்டு பூமியை ராட்சச விண்கல் ஒன்று தாக்கும். இதனால் உலகம் அழிய கூடிய ஆபத்து இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். 2032ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ம் தேதி ஒரு ராட்சச விண்கல் பூமியை தாக்க கூடிய ஆபத்து இருப்பதாகவும், சுமார் 1345 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் பூமியில் மோதினால் உலகம் முற்றிலும் அழிய கூடிய ஆபத்து இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் பூமியின் மீது மோதினால் மிக மிக சக்தியை கொண்ட அணுகுண்டு வெடித்து சிதறினால் ஏற்படக்கூடிய பாதிப்பை காட்டிலும், இது சுமார் 50 மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. ‘2013 டி.வி 135 ’என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் பற்றிய தகவல்களை இங்கிலாந்து, இத்தாலி, ரஷ்யா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எனினும், பூமியை நோக்கி வேகமாக பயணித்து வரும் இந்த ராட்சச விண்கல் பூமியை தாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என நாசா தெரிவித்துள்ளதுதான் ஆறுதல் தரும் செய்தி! *****************

வியாழன், 17 ஏப்ரல், 2014

கடல் கொண்ட பழைய தமிழகம்! - தேவராஜன்.


கடல் கொண்ட பழைய தமிழகம்! - தேவராஜன். 2004 டிசம்பர் 26ம் நாள் நம்மில் சிலர் நேரடியாகவும் பலர் தொலைக்காட்சிகளிலும், செய்திதாள்களிலும் அறிந்து கொண்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையை பழந்தமிழகம் பலமுறை கண்டிருக்கிறது என்பது வியப்பு மட்டுமல்ல சோகமும்கூட. 1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் நாளன்று வீசிய கடும்புயலின்போது, ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர எல்லையான தனுஷ் கோடியை ஒரு பேரலை தாக்கியது. அதிகாலை 3 மணியளவில் 20 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத ஆழி பேரலையால் ராமேஸ் வரம் தீவின் கிழக்கு முனையில் இருந்த தனுஷ்கோடி என்ற 500 வீடுகளைக் கொண்ட அழகிய மீனவப் பகுதி முற்றிலுமாக அழிந்தது. ( இதே பகுதியில் இது பற்றி விரிவாக ‘ மனிதர்கள் வசிக்கு முடியாத நகரம்’ என்ற கட்டுரையில் முன்பு படித்திருப்பீர்கள்!) பழைய தமிழகத்தைத் தாக்கிய நான்காவது கடற்கோள்(ஆழிபேரலை), காவிரிப்பூம்பட்டினம் என்கிற பூம்புகாரை தன்னுள் சுருட்டிக்கொண்டது. ஏதென்ஸ், ரோமாபுரி போன்ற ஐரோப்பிய கண்டத்தின் பழம்பெருமைமிக்க நகரங்களுக்கு இணையாக கட்டமைப்பிலும் வணிகத்திலும் சிறந்து விளங்கிய துறைமுக நகரம் பூம்புகார்.( இதே பகுதியில் இது பற்றி விரிவாக ‘கடல் குடித்த நகரம் ’ என்ற கட்டுரையில் முன்பு படித்திருப்பீர்கள்) கடலால் விழுங்கப் பட்ட தமிழகத்தின் பூம்புகாரும், குஜராத்தின் காம்பேவும் ஹரப்பா- மொகஞ்ச தாரோ நாகரிகத்திற்கும் முற்பட்டவை. பழந்தமிழ் நிலப்பரப்பை நான்கு கடற்கோள்கள் தாக்கியிருக்கின்றன. முதல் கடற்கோள், முதல் தமிழ்ச் சங்கம் அமைத்த தென்மதுரையை இரையாக்கியது. இரண்டாவது கடற்கோள், நாகநன்னாட்டை காவு கொண்டது. மூன்றாவது கடற்கோள், இடைச்சங்கம் அமைத்த கபாடபுரத்தை விழுங்கியது. இப்படி மூன்று சங்கங்கள் கொண்ட நிலப்பரப்புகளை ஆழிப்பேரலை குடித்துவிட்டது என்று மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி ஓர் ஆழிப்பேரலையில்தான் குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியா கண்டம் கடலடி சேர்ந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் சீனிவாசய்யர், சேசைய்யர், ராமச்சந்திர தீட்சிதர், தேவநேயப்பாவாணர் உள்ளிட்டோரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த குமரி கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்குதான் நம் பண்பாடு, கலாசாரம், நாகரீகம் வளர்ந்து செழித்தது. இப்படிப்பட்ட பெருமைமிக நிலப்பரப்பு இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கிறது. இப்போது காணப்படும் தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சிறு, சிறு தீவுகள் இணைந்திருந்த ஒரு பெரிய நிலப்பரப்பு தான் அன்றைய குமரிக்கண்டம். இந்த நிலப்பரப்பில் ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழு முன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது! இந்த நிலப்பரப்பில் பறுளி, குமரி என்ற இரண்டு பெரிய ஆறுகள் ஓடியுள்ளது ! குமரிக்கொடு(மலை), மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது! தென்மதுரை, கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன! இலக்கிய ஆய்வாளர்களின் ஆய்வுகளும், உலக செம்மொழி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளிலும் கீழ்கண்ட நிகழ்வுகள் குமரி கண்டத்தில் நிகழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அவை: தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள ‘ தென் மதுரையில் கி.மு 4440ல் 4449 புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது . இதில் அனைத்துமே அழிந்து விட்டது. இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700 ல் 3700 புலவர்களுடன் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது . இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850 ல் 449 புலவர்களுடன் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. ஒவ்வொரு கடற்கோளும் நாடு நகரங்கள் மக்களோடு சேர்த்து, தமிழ் பண்பாட்டு,வரலாற்று அடையாளங்களையும் கடலுக்குள் கொண்டு புதைத்து வைத்திருக்கிறது. கடலுக்குள் புதையுண்ட நகரங்களை ஆய்வு செய்யும் பணியை தொடர்ந்து மேற்கொண்டால், நமக்கு முன் தோன்றிய மூத்தகுடியின் அடையாளங்களைக் கண்டுபிடிக்கலாம்! காப்பாற்றலாம்! அடுத்த தலைமுறைக்கும் நம் பெருமையை எடுத்துச் சொல்லி பெருமிதம் கொள்ளலாம்! **

சனி, 5 ஏப்ரல், 2014

புரியாத புதிர்களாக கல் வட்டங்கள் - தேவராஜன்


புரியாத புதிர்களாக கல் வட்டங்கள் - தேவராஜன் ************************************************************************************ இந்த உலகத்தில் புதைந்து கிடக்கும் பல புதிர்களுக்கு இன்று வரை பதில்களே எட்டப்படவில்லை! நாம் வாழும் பூமியில், நம் முன்னோர் ஆக்கிய ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்துக்காக உருவாக்கப்பட்டவை, இன்று நமக்கு எதற்காக அவை ஆக்கப்பட்டது என்ற குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. கால காலமாய் ஆராய்சி செய்தி ஆராய்சியாளர்கள் சிலவற்றிற்கு பதில் தேடி தந்திருக்கிறார்கள். அப்படி புரியாத புதிர்களில் ஒன்று கல் வட்டங்கள். சில ஊர்களில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் திட்டுகளில் வட்ட வட்டமாக கற்களைக் கொண்டு வட்டம் அமைத்திருக்கிறார்கள். இதற்கு கல் வட்டம் என்று பெயர். இது போன்ற கல் வட்டங்கள் உலகத்தில் பல இடங்களில் உள்ளன. இந்த கல்வட்டம் என்பது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னம் என்று ஆய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள். இறந்தவர்களின் உடல் பகுதிகளை வைத்து அல்லது அவர்களின் நினைவாக எடுக்கப்படும் ஈமச்சின்னங்களின் மேற்பரப்பில், கற்பாறைகளைக் கொண்டு ஒரு வட்டம் உருவாக்கப்படுகிறது. இது தரையின் மேற்பரப்பில் காணப்படும். இப்படி அமைக்கப்படும் கல்வட்டங்கள் ஈமச்சின்னங்களைப் பாதுகாக்கவும், அடையாளப்படுத்தும் அமைப்பாகவும் இது இருப்பதாக கருதப்படுகிறது. இத்தகைய கல்வட்டங்கள் அமைப்பதினால் பிற்காலத்தில் இறந்தவர்களைப் புதைப்பவர்கள், இதைத் தோண்டுவதில்லை என்று கருதப்படுகிறது. பெருங்கற்காலக் கல்வட்டங்களின் புதைந்த பகுதியில் தாழிகள், குழிகள், கற்பதுக்கைகள் போன்றவை காணப்படுகின்றன. இது போது கல் வட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில இடங்களிலும் மேலும், தமிழகத்தில், கற்கள் கிடைக்காத ஆற்றுப் படுகைகள் தவிர, பிற பகுதிகளில் ஆயிரக்கணக்காண எண்ணிக்கையில் இவை காணப்படுகின்றன. குறிப்பாக சானூர், சித்தன்னவாசல் கொடுமணல், குப்பால் நத்தம்,ஆனைக்கரை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இது போல கல்வட்டங்கள் உலக அளவில் மிக பிரமாண்டமான கல்வட்டங்களும் காணப்படுகின்றன. அவற்றில் சில சில்பரி மலை மற்றும்ஆவ்பரி கல் வட்டங்கள். சில்பரி மலை இங்கிலாந்தின் ‘சில்பரி’ என்னுமிடத்தில் ஒரு பிரமாண்டமான மலை இருக்கிறது. இதுவும் ஒரு கல்வட்டம் மாதிரிதான். அளவு தான் பிரமாண்டம்! சில்பரி மலை 40 மீட்டர் உயரமும், 167 மீட்டர் விட்டமும் கொண்டது. அதன் உச்சி தட்டையாக இருகிறது. அந்த தட்டையின்விட்டத்தின் பரப்பளவு 30 மீட்டர். இது 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த மலை இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் பலர் நினைத்தார்கள். ஆனால், இந்த சில்பரி மலையை தொடர்ந்து ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது. சுமார் 4750 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மலை கட்டப்பட்டிருக்கலாம். கி.மு. 2400 முதல் கி.மு. 2300 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மலை உருவாக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மலை ஏன்கட்டப்பட்டது? என்ன உபயோகத்திற்காக என்பதற்கான காரணம் மட்டும் தெரியவில்லை. முழுவதும் வெண்கட்டிக் கற்களால் கட்டப்பட்டது சில்பரி மலை. இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள இதைக் கட்டி முடிக்க 18 மில்லியன் மனித மணி நேரங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். தட்டையாக உள்ள அதன் மேல் பகுதி உருண்டை வடிவில் இருந்திருக்கலாம் என்றும் இடைப்பட்ட காலத்தில் அது ஏதேனும் கட்டடம் கட்டுவதற்காக தட்டையாக்கப் பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆவ்பரி கல் வட்டங்கள் சில்பரி மலைக்கு அருகில், வைல்ட்ஷையரில் இருக்கும் கிராமமான ஆவ்பரியில் 100 டன்களுக்கும் அதிக எடையுள்ள நூற்றுக்கணக்கான கற்களைக் கொண்டு வட்ட வடிவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வட்ட வடிவ அமைப்பில் 331 மீட்டர் விட்டமுள்ள மிகப் பெரிய வட்டத்தின் உள்ளே, இரண்டு சிறிய வட்டங்களாக அது அமைந்திருக்கிறது. வட்டத்தை சுற்றியுள்ள கால்வாய் 21 மீட்டர் அகலமும், 11 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளது. மொத்தம் 98 கற்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில 40 டன்னுக்கு மேல் எடையுடையதாக உள்ளன. வடக்கு பக்கமுள்ள உள் வட்டமானது 98 மீட்டர் விட்டம் உடையாதாக உள்ளது. இதில் உள்ள 4 கற்களில் 2 மட்டுமே நின்ற நிலையில் உள்ளது. தெற்கு பக்கமாக உள்ள வட்டமானது 108 மீட்டர் விட்டமுடையதாக உள்ளது. 5.5 மீட்டர் உயரமுள்ள ஒரு கல் நடுநாயகமாக நிறுவப்பட்டுள்ளது. இதுவும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த கல் வட்டமும் யார் அமைத்தார்கள்? ஏதற்காக அமைத்தார்கள் என்ற விவரங்கள் மட்டும் தெரியாத புதிராகவே இருக்கிறது. **

திங்கள், 24 மார்ச், 2014

உலகின் மகா வில்லாதி வில்லன்! - தேவராஜன்


உலகின் மகா வில்லாதி வில்லன்! - தேவராஜன் -------------------------------------------------------19-------------------------------------------------- உலகில் எத்தனையோ குற்றங்கள் நடைபெறுகின்றன. குற்றங்கள் செய்பவர்கள் குற்றவாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். சட்டத்துக்கு புறம்பாக சமுதாயத்தில் செய்யப்படும் செயல்கள் குற்றங்களாக கருதப்படுகிறது. இந்தச் செயல்களைச் செய்பவர்களை குற்றவாளிகள் என்று கருதி, காவல் துறையினர் அவர்களை கைது செய்து, விசாரணை செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, சட்டப்படி தண்டனை வாங்கி தருவது வழக்கமாக இருந்து வருகிறது. சில குற்றங்கள் நடைபெற்று, அந்தக்குற்றங்களைச் செய்தவர் யார்? எதற்காக செய்யப்பட்டது? ஏன் செய்யப்பட்டது போன்று தகவல்கள் தெரியாமலே போனதும் உண்டு. காவல் துறையினர் எத்தனையோ வழிகளில் துப்பறிந்தும், விசாரணை செய்தும், தேடியும், எந்த தடயமும் கிடைக்காமல் போனதும் உண்டு. குறிப்பாக தமிழகத்தில் சில அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதற்கான காரணமோ, குற்றவாளியின் அடையாளமோ இதுவரை தெரியாமலே இருக்கிறது. இப்படி அடையாளம் தெரியாத குற்றவாளிகள் உலகில் பலர் இருக்கிறார்கள்! இந்த வரிசையில் போலீசுக்கு தண்ணி காட்டிய, எமகாதகன், மகா வில்லாதி வில்லன் ஒருவன் இருக்கிறான்! அவன் எப்படி இருப்பான் குள்ளமா? நெட்டையா? கருப்பா? சிகப்பா? அவன் என்ன மொழி பேசுவான்? எங்கே இருப்பவன்? அவன் ஏன் பல குற்றங்கள் செய்தான்? யாருக்காக செய்தான்? அவன் நோக்கம் என்ன? இப்படி பல கேள்விகளுக்கு பதில்கள் ஒன்றைக் கூட லண்டன் போலீசாரால் கண்டுபிடிக்க இயலவில்லை! கிழக்கு லண்டன் நாட்டில் ஒயிட் சேபல் வட்டத்தில் ஹை ஸ்டீட் என்ற ஒரு தெரு இருக்கிறது. 1888ம் ஆண்டுகளில்இங்கு பல குற்றங்கள் நடைபெற்றுள்ளன. பல கொலைகள் நடந்துள்ளன. இந்த குற்றங்கள், கொலைகள் செய்த மர்ம நபருக்கு ஜேக் ரிப்பர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கொலையுண்டவர்கள் 36 அதிகமான பெண்கள் (விபசாரிகள்). இந்தத் தொடர் கொலைகள் புரிந்த அந்த மர்ம நபரை பல ஆண்டுகளாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும் கண்டு பிடிக்கவில்லை. அந்த நபர் குறித்து இன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைகாட்சி மூலமாக யார் அவர் என பல வதந்திகள் பரவி வருகின்றன. கிழக்கு லண்டனின் ஒயிட் சேப்பல் வட்டத்தில் உள்ள ஒரு தெருவில், ஜேக் ரிப்பர் என்று கருதப்படும் மர்ம நபரால் பலியானவர் பலர். அவற்றில் சில முக்கியமானவர்களின் பட்டியல் இது: மேரி ஆன் நிகல்ஸ் வயது:43 கொலை 31-8-1888 அன்னீ சேப்மன் வயது:47 கொலை 8-9-1888 எலிசபெத் ஸ்ட்ரைட் வயது:45 கொலை 30-9-1888 காதரின் எட்டோஸ் வயது:46 கொலை 30-9-1888 மேரி ஜேன் கெல்லி வயது:25 கொலை 9-11-1888 1888ம் ஆண்டுகளில் மற்றும் 30-40 பெண் கொலை வழக்குகள் அது தொடர்பான குற்றவாளிகள் அடையாளம் காணப்படாமல் உள்ளன. மேலே சொன்ன குற்றங்கள் பல ஜேக் ரிப்பர் என்ற மர்ம நபர் செய்திருக்கலாம் என ஒரு சாரார் சொல்கிறனர். இந்த கொடூர குற்றங்கள் நடைபெற்று 126 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது விஞ்ஞான முன்னேற்றத்தால் புலனாய்வு நுட்ப முறைகள் அதிவேகமாய் வளர்ந்துவிட்டன. குற்றம் நடந்து, அந்தக் குற்றத்தை செய்தது யார் என்பது பற்றிய விசாரணை என்பது சாட்சிகளை பேச வைப்பது, சாட்சிகள் கொடுக்கும் தகவலிலிருந்து கொலையாளி ஓரளவு எப்படியிருப்பார் என படம் வரைந்து மேலும் துப்பு தேடுவது , டி.என்.ஏ. அடையாளம் காட்டுவது போன்ற துப்பறியும் நுட்பங்கள் அப்போது இருந்திருக்கவில்லை. இந்தத் தொடர் கொலைகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கான கடிதங்கள், மொட்டை கடிதங்கள் காவல்துறைத் துப்பு குழுவிற்கு வந்தன. அதில் பல கடிதங்கள் ஜேக் ரிப்பரை எப்படி பிடிப்பது என காவல்துறைக்கு ஆலோசனைகள் சொல்லியிருந்தன. ஜேக் ரிப்பர் குற்ற வழக்கை புலனாய்வு செய்த காவல்துறையினரின் குறிப்பில் 6 பேர் மேல் சந்தேகம் இருந்தது. இவர்கள் முக்கியமாக சிறிய குற்றங்களை செய்து, சிறையில் காலம் கடத்தியவர்கள். இவர்களைத் தவிர, இன்னும் 4 பேர் மேலும் ஐயமிருந்தது. பிற்காலத்து எழுத்தாளர்கள் இன்னும் 19 பேரை சந்தேகிக்கிறனர். அப்படி சந்தேகிக்கப் பட்டவர்களில் முக்கியமானர்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தை சார்ந்த ஆல்பெர்ட் விக்டர், விக்டோ ரியா அரசியின் மருத்துவர் டாக்டர் ஜான் வில்லியம்ஸ், ஆல்பெர்ட் விக்டரின் ஆசிரியர் ஜேம்ஸ் ஸ்டீவன். இப்படி சிலர் மீது சந்தேகம் எழுப்பியதுதான் மிச்சம். கடைசி வரை காவல் துறையால் இவர்தான் இத்தகைய குற்றத்தை செய்தார் என்று நிரூபிக்கப்படவே இல்லை! *** பாக்ஸ் செய்தி: கொலைகள் நடந்து 126 ஆண்டுகள் ஆகியும் இலக்கியத்திலும், சினிமா, தொலைகாட்சியிலும் ஜேக் ரிப்பர் பற்றி கதைகள் சுவாரசியமாக சொல்லப்படுகின்றன. மக்களும் அதை ரசிக்கின்றனர். 2006ல் நடந்த பி.பி.சி.யின். ‘எல்லோரையும் விட மோசமான பிரிட்டிஷ்காரர் யார்?’ என்ற வாக்கெடுப்பில், முதலாக வந்தவர் ஜேக் ரிப்பர் தான்! *************************************************

நாய்களின் தற்கொலை பாலம்! - தேவராஜன்


நாய்களின் தற்கொலை பாலம்! - தேவராஜன் --------..........................................................18........................................ ஸ்காட்லாந்து நாட்டின் மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்தில் இருக்கும் ஓவர்டவுன் எஸ்டேட்டில் ஒரு பாலம் இருக்கிறது. இது ஒரு மர்மமான பாலம்! ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கும், அதில் அமைந்திருக்கும் மேன்சனுக்கும், சுற்றியிருக்கும் அழகான தோட்டத்துக்கும் 100 ஆண்டு கால வரலாறு உண்டு. 1893ல் இந்த எஸ்டேட்டை வாங்கினார் லார்ட் ஓவர்டவுன் என்பவர். அந்த எஸ்டேட்டை கிழக்கு, மேற்கு என பிரித்து விரிவுபடுத்தினார். இடைப்பட்ட பகுதியில் ஓர் அருவி விழுந்து நீரோடையாக ஓடியது. பாறைகளால் நிரம்பிய அந்தப் பகுதியில் நீரோடையைக் கடக்க ஒரு பாலம் கட்டினார். கருங்கற்களாலும் கிரானைட்டாலும் உருவாக்கப்பட்ட இந்தப் பாலம் அதிக அகலமோ, நீளமோ கிடையாது. 2 அடி உயரம். தடிமனான கைப்பிடிச் சுவர். சுவரின் குறிப்பிட்ட இடைவெளிகளில் பாலத்திலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பதாக அரைவட்ட வளைவுகள். இருபக்கமும் சேர்த்து மொத்தம் எட்டு வளைவுகள். பாலத்தைக் கடந்தால் அந்தப் பக்கம் மேன்சன். ஒரு நாயின் தற்கொலை ஒரு நாய் தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி, முன்னங்கால்களை பாலத்தின் கட்டைச் சுவர் மேலே வைத்துக்கொண்டு, கீழே ஓடும் நீரோட்டத்தை ரசிக்கும்படி பாலம் அமைந்திருந்தது. பாலத்திற்கும் தரைப்பகுதிக்கு இடைபட்ட ஆழம் 50 அடி இருக்கும். ஒரு நாள் பென் என்ற நாய் இந்த எஸ்டேட்டுக்கு வந்தது. நீண்ட மூக்கும் புசுபுசு முடியும் கொண்ட பெண் நாய் அது. அந்த ஊருக்கு வந்திருந்த டோனா தன் கணவருடனும், இரண்டு வயது மகனுடனும் செல்ல நாய் பென்னுடனும் வாக்கிங் சென்றாள். ஓவர்டவுன் பாலத்துக்கு அருகில் வந்தார்கள். அப்போது பென் துள்ளலோடு ஓடி,பாதி பாலத்தைத் தாண்டி, வலதுபுறமுள்ள கடைசி இரு வளைவுகளுக்கு இடையே,சட்டென கைப்பிடிச் சுவர் தாண்டி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுவிட்டது! ‘ஓ மை காட்!’ அலறோடு அவர்கள், பாலத்தின் கீழே பார்க்க, பாறைகளின் மேல் விழுந்து அலங்கோலமாகக் கிடந்தது பென். டோனாவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கென்னத் என்பவர் தனது செல்ல நாயுடன் வந்திருந்தார். ‘இவன்கூட இப்படித்தான். போன வருடம் ஒருநாள் அந்தப் பாலத்தின் மீதிருந்து குதித்துவிட்டான். நீங்கள் சொன்ன அதே இடத்தில்தான். நல்லவேளை மிகவும் பாதுகாப்பாக ஒரு புதர்மேல் விழுந்திருந்தான். அடி பலமில்லை. ஓரிரு நாள்கள் பயந்ததுபோலஇருந்தான். எதுவும் சாப்பிடவில்லை. பிறகு சரியாகிவிட்டான்.நாங்கள் இப்போது இவனை அழைத்துக் கொண்டு அந்தப் பாலத்தின்மீது செல்வதில்லை.’- என்று கென்னத்தும் தன் நாய் பற்றிய சம்பவத்தை சொன்னார். டோனாவுக்கு அதிர்ச்சி. ‘நிஜமாகத்தான் சொல்கிறீர்களா?’ ‘நீங்கள் மட்டுமல்ல, இந்நகரில் வசிக்கும் பலரும் தங்கள் செல்ல நாய்களை அங்கே பறிகொடுத்திருக்கிறார்கள். நாய்களோடு அங்கே செல்லவே எல்லோரும் பயப்படுகிறார்கள். அதை நாய்கள் தற்கொலை செய்துகொள்ளும் இடம் என்றுதான் அறிவித்திருக்கிறார்கள்.’- என்றார் அவர். சென்ற நூற்றாண்டிலிருந்து இன்றைய தேதி வரை நூற்றுக்கணக்கான நாய்கள், ஓவர்டவுன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கின்றன. 1950-லிருந்து வருடத்துக்கு குறைந்தது டஜன் நாய்களாவது இங்கே தற்கொலை செய்து கொள்கின்றன. பாலத்தில் அப்படி என்னதான் மர்மம் இருக்கிறது? சென்ற நூற்றாண்டின் மத்தியில் உலகத்தின் கவனம் இந்தப் பாலத்தின் மேல் குவிந்தது. விதவிதமான ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன. நாய்கள் குதிக்கும் நாள்களில் வானம் தெளிவாக இருக்கிறது. வெயில் அடிக்கிறது. இரவுகளில் நாய்கள் குதித்ததாகத் தெரியவில்லை. நீண்ட மூக்குகள் கொண்ட நாய்கள் மட்டுமே குதிக்கின்றன. ஆதி ஐரோப்பியர்களின் ஓர் இனமான செல்ட் மக்களின் நம்பிக்கைப்படி,அந்த இடத்தில்தான் உலகத்தின் சொர்க்கமும் நரகமும் சந்திக்கின்றன. ஏதோ அமானுஷ்ய சக்தி, அந்தப் பாலத்தில் இருக்கிறது. அதுவே நாய்களைத் தூண்டி விடுகிறது அல்லது மிரளச் செய்கிறது என்று ஆய்வுகள் தொடர்ந்தன. மனநல மருத்துவரான டேவிட் சான்ஸும் தனது கிழட்டு நாய் ஹென்றிக்ஸை வைத்து சோதனை செய்தார். ‘நான் அதைப் பிடிக்கவில்லை. அது சுதந்தரமாக பாலத்தின் மேல் நடந்துபோனது. வலதுபுறத்தின் அந்த இடம் வந்ததும், ஒருமாதிரி ஆகிவிட்டது. கட்டைச் சுவரின் மேல் கால்களால் பிராண்ட ஆரம்பித்துவிட்டது. வயதான காரணத்தினால் அதனால் எம்பிக் குதிக்க முடியவில்லை. அந்த இடத்தில் தான் நாய் ஏதையோ கண்டு, அல்லது கேட்டு, அல்லது ஏதோ வாசனையால் ஈர்க்கப்பட்டதால் அப்படிச் செய்துள்ளது. அது எதனால் என்று தெளிவாகக் கண்டறிய வேண்டும் என்றார். நாய்களைப் பயமுறுத்தும் விதமாக தோற்றத்தைக் கொண்ட எந்தப் பொருளும் அங்கில்லை. நாய்களை மிரளச் செய்யும் விதமான ஒலிகளும் அங்கே கேட்பதில்லை. எனவே ஏதோ வாசனைதான் காரணம் என்றார் டேவிட். இப்போது வரை ஓவர்டவுன் பாலத்தின் நாய்களின் தற்கொலை மர்மம் தொடர்கிறது. அந்த மர்மம் தெரிய வேண்டும் என்றால் நாமே நாயாக மாறி, ஓவர்டவுன் பாலத்துக்குச் சென்று குதிக்க வேண்டுமோ என்னவோ? ****************************************