






உலகின் மகா வில்லாதி வில்லன்!
- தேவராஜன்
-------------------------------------------------------19--------------------------------------------------
உலகில் எத்தனையோ குற்றங்கள் நடைபெறுகின்றன. குற்றங்கள் செய்பவர்கள் குற்றவாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
சட்டத்துக்கு புறம்பாக சமுதாயத்தில் செய்யப்படும் செயல்கள் குற்றங்களாக கருதப்படுகிறது. இந்தச் செயல்களைச் செய்பவர்களை குற்றவாளிகள் என்று கருதி, காவல் துறையினர் அவர்களை கைது செய்து, விசாரணை செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, சட்டப்படி தண்டனை வாங்கி தருவது வழக்கமாக இருந்து வருகிறது.
சில குற்றங்கள் நடைபெற்று, அந்தக்குற்றங்களைச் செய்தவர் யார்? எதற்காக செய்யப்பட்டது? ஏன் செய்யப்பட்டது போன்று தகவல்கள் தெரியாமலே போனதும் உண்டு.
காவல் துறையினர் எத்தனையோ வழிகளில் துப்பறிந்தும், விசாரணை செய்தும், தேடியும், எந்த தடயமும் கிடைக்காமல் போனதும் உண்டு.
குறிப்பாக தமிழகத்தில் சில அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதற்கான காரணமோ, குற்றவாளியின் அடையாளமோ இதுவரை தெரியாமலே இருக்கிறது.
இப்படி அடையாளம் தெரியாத குற்றவாளிகள் உலகில் பலர் இருக்கிறார்கள்!
இந்த வரிசையில் போலீசுக்கு தண்ணி காட்டிய, எமகாதகன், மகா வில்லாதி வில்லன் ஒருவன் இருக்கிறான்!
அவன் எப்படி இருப்பான் குள்ளமா? நெட்டையா? கருப்பா? சிகப்பா? அவன் என்ன மொழி பேசுவான்? எங்கே இருப்பவன்? அவன் ஏன் பல குற்றங்கள் செய்தான்? யாருக்காக செய்தான்? அவன் நோக்கம் என்ன?
இப்படி பல கேள்விகளுக்கு பதில்கள் ஒன்றைக் கூட லண்டன் போலீசாரால் கண்டுபிடிக்க இயலவில்லை!
கிழக்கு லண்டன் நாட்டில் ஒயிட் சேபல் வட்டத்தில் ஹை ஸ்டீட் என்ற ஒரு தெரு இருக்கிறது.
1888ம் ஆண்டுகளில்இங்கு பல குற்றங்கள் நடைபெற்றுள்ளன. பல கொலைகள் நடந்துள்ளன. இந்த குற்றங்கள், கொலைகள் செய்த மர்ம நபருக்கு ஜேக் ரிப்பர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
கொலையுண்டவர்கள் 36 அதிகமான பெண்கள் (விபசாரிகள்). இந்தத் தொடர் கொலைகள் புரிந்த அந்த மர்ம நபரை பல ஆண்டுகளாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும் கண்டு பிடிக்கவில்லை.
அந்த நபர் குறித்து இன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைகாட்சி மூலமாக யார் அவர் என பல வதந்திகள் பரவி வருகின்றன.
கிழக்கு லண்டனின் ஒயிட் சேப்பல் வட்டத்தில் உள்ள ஒரு தெருவில், ஜேக் ரிப்பர் என்று கருதப்படும் மர்ம நபரால் பலியானவர் பலர். அவற்றில் சில முக்கியமானவர்களின் பட்டியல் இது:
மேரி ஆன் நிகல்ஸ் வயது:43 கொலை 31-8-1888
அன்னீ சேப்மன் வயது:47 கொலை 8-9-1888
எலிசபெத் ஸ்ட்ரைட் வயது:45 கொலை 30-9-1888
காதரின் எட்டோஸ் வயது:46 கொலை 30-9-1888
மேரி ஜேன் கெல்லி வயது:25 கொலை 9-11-1888
1888ம் ஆண்டுகளில் மற்றும் 30-40 பெண் கொலை வழக்குகள் அது தொடர்பான குற்றவாளிகள் அடையாளம் காணப்படாமல் உள்ளன. மேலே சொன்ன குற்றங்கள் பல ஜேக் ரிப்பர் என்ற மர்ம நபர் செய்திருக்கலாம் என ஒரு சாரார் சொல்கிறனர்.
இந்த கொடூர குற்றங்கள் நடைபெற்று 126 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இப்போது விஞ்ஞான முன்னேற்றத்தால் புலனாய்வு நுட்ப முறைகள் அதிவேகமாய் வளர்ந்துவிட்டன.
குற்றம் நடந்து, அந்தக் குற்றத்தை செய்தது யார் என்பது பற்றிய விசாரணை என்பது சாட்சிகளை பேச வைப்பது, சாட்சிகள் கொடுக்கும் தகவலிலிருந்து கொலையாளி ஓரளவு எப்படியிருப்பார் என படம் வரைந்து மேலும் துப்பு தேடுவது , டி.என்.ஏ. அடையாளம் காட்டுவது போன்ற துப்பறியும் நுட்பங்கள் அப்போது இருந்திருக்கவில்லை.
இந்தத் தொடர் கொலைகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆயிரக்கணக்கான கடிதங்கள், மொட்டை கடிதங்கள் காவல்துறைத் துப்பு குழுவிற்கு வந்தன.
அதில் பல கடிதங்கள் ஜேக் ரிப்பரை எப்படி பிடிப்பது என காவல்துறைக்கு ஆலோசனைகள் சொல்லியிருந்தன.
ஜேக் ரிப்பர் குற்ற வழக்கை புலனாய்வு செய்த காவல்துறையினரின் குறிப்பில் 6 பேர் மேல் சந்தேகம் இருந்தது.
இவர்கள் முக்கியமாக சிறிய குற்றங்களை செய்து, சிறையில் காலம் கடத்தியவர்கள்.
இவர்களைத் தவிர, இன்னும் 4 பேர் மேலும் ஐயமிருந்தது. பிற்காலத்து எழுத்தாளர்கள் இன்னும் 19 பேரை சந்தேகிக்கிறனர்.
அப்படி சந்தேகிக்கப் பட்டவர்களில் முக்கியமானர்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தை சார்ந்த ஆல்பெர்ட் விக்டர், விக்டோ ரியா அரசியின் மருத்துவர் டாக்டர் ஜான் வில்லியம்ஸ், ஆல்பெர்ட் விக்டரின் ஆசிரியர் ஜேம்ஸ் ஸ்டீவன்.
இப்படி சிலர் மீது சந்தேகம் எழுப்பியதுதான் மிச்சம். கடைசி வரை காவல் துறையால் இவர்தான் இத்தகைய குற்றத்தை செய்தார் என்று நிரூபிக்கப்படவே இல்லை!
***
பாக்ஸ் செய்தி:
கொலைகள் நடந்து 126 ஆண்டுகள் ஆகியும் இலக்கியத்திலும், சினிமா, தொலைகாட்சியிலும் ஜேக் ரிப்பர் பற்றி கதைகள் சுவாரசியமாக சொல்லப்படுகின்றன. மக்களும் அதை ரசிக்கின்றனர்.
2006ல் நடந்த பி.பி.சி.யின். ‘எல்லோரையும் விட மோசமான பிரிட்டிஷ்காரர் யார்?’ என்ற வாக்கெடுப்பில், முதலாக வந்தவர் ஜேக் ரிப்பர் தான்!
*************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக