










ஜல சமாதியான ஒரு நகரம்!
- தேவராஜன்.
1500 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலை. அது இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே தந்த தமிழ் இனம் வசித்த ஒருநகரத்தை கடல் வாய்க்கொண்டு குடித்துவிட்டது.
அந்த அழகிய நகரத்தின் பெயர் காவிரிப்பூம்பட்டினம்!
இந்த நகரின் அருமை, பெருமை, அழகை, சிறப்பை மிக அழகாக வர்ணிக்கும் இலக்கியங்களில் முதன்மையானது இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம்.
மேலும் சீத்தலைச்சாத்தனார் எழுதிய மணிமேகலை காவியம்,
சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை நூல்களுள் சில பாடல்களும், பத்துப்பாட்டில் பொருநர் ஆற்றுப்படையும், பட்டினப்பாலையும் சொல்லலாம்.
சிலப்பதிகாரம் இந்த ஊர் எழிலை வர்ணிப்பதைப் பார்க்கலாமா!
காவிரிப்பூம்பட்டினம் நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது. ஒன்று கடலோரம் இருந்த மருவுர்பாக்கம்.
மற்றொன்று இதன் மேற்கே அமைந்த பட்டினப்பாக்கம்.
இந்த இரண்டு ஊர்களையும் பிரித்து, குறுக்கே அமைந்த அழகிய மரத் தோட்டங்கள்.
இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது! பகல், இரவு என 24 மணி நேரமும் செயல்பட்டுள்ளது! பகல் அங்காடியின் பெயர் ‘நாளங்காடி‘, இரவில் நடப்பது ‘அல்லங்காடி‘ !!
மருவுர்பாக்கம்
மாட மாளிகைகள் இருந்தன. அதில் நிலாமுற்றமும் அழகிய அறைகளும் மான் கண் போன்ற அமைப்பில் காற்றுவரும் சாளரங்களும் கொண்டிருந்தன.
யவனர் எகிப்தியர் மற்றும் கிரேக்கர் வீடுகள் இருந்தன.
நகரவீதியில்வண்ணக்குழம்பு,சுண்ணப்பொடி,சந்தனம்,தொடுத்தபூக்கள்,, புகை தரும் அகில் முதலானவை விற்றனர்.
பட்டுநூல், எலிமயிர்,பருத்திநூல் நெய்யும்தொழில் புரியும் சாலியர் வீதி காருகர் வீதி எனப்பட்டது.
பொன் வணிகர் வீதியில் பவளம், அகில், முத்து மாணிக்கம் பொன் ஆகியன விற்கப்பட்டது.
எண் வகைக்கூலமும் தானியம் விற்கும் கூலக்கடைத்தெரு. பிட்டு வணிகர் , அப்பம் சுடுவார், கள்விற்பார், மீன் விற்கும் பரதவர், உப்பு விற்கும் உமணர், வெற்றிலை விற்பார்,கயிறு விற்பார், ஆட்டிறைச்சி விற்பார்,எண்ணை வணிகர்,வெண்கலகன்னார்,செப்புக்கலன் விற்பார்,மரவேலை செய்யும் தச்சர்,கொல்லர்,சித்திரம் வரைவோர்,மண்ணால் உருவம்செய்வோர்,பொன்செய்கொல்லர்,
மாணிக்க வேலை செய்யும் தட்டார்,தையல்காரர்,துணியால் உருச்செய்வோர்,குழல் யாழ் இசைக்கும் பாணர்,சிறிய கைத்தொழில் செய்வாரும்,குற்றேவல் செய்யும் வேலைக்காரர்களும் வாழ்கின்ற இடங்களும் மருவூர்ப்பாக்கத்தில் இருந்தன.
பட்டினப்பாக்கம்:
அரசர்வாழும் வீதி,தேர் ஓடும் வீதி,கடைதெரு, பெரியகுடிப்பிறந்த
வணிகரது மாடங்கள் கொண்ட தெரு, வேதியர், உழவர்,சோதிடர், மாணிக்கவேலை செய்வோர், நின்று புகழ் படும் சூதர், அமர்ந்து புகழும் மாகதர் வேதாளிகர் , நாழிகை கணக்கர், சாந்திகூத்தர், காமக்கிழத்தியர் ஆகும் பரத்தையர் , ஆடல் கூத்தியர், அப்போதைக்குப்பூச்சூடும் மடந்தையர், ஏவல் தொழில் செய்வோர், பல்வகை வாத்தியம் வாசிப்போர்,விகட கவிகள், குதிரை வீரர் ,யானப்பாகர்,தேர்ப்பாகர்,காலாட்படைத்தலைவர் ஆகியோர் அரசனின் பெரியகோயிலைச்சூழ வசிக்கும் பெரியோர் நிறைந்த பகுதி பட்டினக்பாக்கம்.
ஐவகை மன்றங்கள்
பொருளைக் களவு செய்வோரை வெளிப்படுத்திக் காட்டுவது வெள்ளிடை மன்றம்.
‘இலஞ்சி மன்றம்‘ எனும் பொய்கை மன்றில், கூன், குருடு, ஊமை, செவிடு, தொழுநோயர் ஆகியோர் மூழ்கி வலம் வந்தால் குறை நீங்கி நலம் பெறுவர் எனக் கருதப்பட்டது.
நெடுங்கல் மன்றத்தில் ஒளி வீசும் நெடிய கற்கள் நடப்பட்டிருக்கும். வஞ்சகர்களால் மருந்து வைக்கப்பட்டுப் பித்தம் கொண்டோர் - நஞ்சுண்டு துன்புறுவோர், நச்சவரம் தீண்டப்பட்டோர் ஆகியோரெல்லாம் ஒள்ளிய நெடிய கற்களைச் சுற்றி வந்து நலம் பெறுவர்.
செங்கோல் தவறினாலும், அறங்கூறவையத்தார் நடுவுநிலை பிறழினும், அதனை நாவாற் கூறாமல், கண்குறிப்பில் காட்டும் பாவைப் படிவத்தைக் கொண்டிருந்தது பாவை மன்றம்.
ஏற்றுமதி- இறக்குமதி
காவிரிப் பூம்பட்டினம் துறைமுகத்தில் அயல்நாட்டுக் குதிரைகள் வந்து இறங்கின. தமிழக மிளகு, அகில், துகில், முத்து, மணி, பவளம் முதலியன பிறநாடுகளுக்கு மிகுதியாக அனுப்பப்பட்டன.
இவ்வளவு சிறப்பு பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த கோவலன், கண்ணகி,மாதவியின் கதையைக் கடலோர உப்புக்காற்று காலந்தோறும் பேசிக்கொண்டே இருக்கிறது.
பாக்ஸ் செய்தி
வருடா வருடம் தவறாமல் ‘இந்திர விழா‘ கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது மணிமேகலை.
இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் ‘சிலப்பதிகார அருங்காட்சியகம்‘ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.