செவ்வாய், 12 மார்ச், 2013
வேகாத பச்சை மண்சட்டி/81/ 24.3.2013/
வேகாத பச்சை மண்சட்டி/81/ 24.3.2013/
வருத்தத்தோடு இருந்த நாம தேவரிடம்,
“ஏன் வருந்துகின்றாய்? என்ன நடந்தது?” என்றார் விட்டல்.
“ஒரு பானை செய்பவன் சட்டி தட்டுங்கட்டையால் என் தலை மேல் தட்ட வந்தான்! நான் தடுத்தேன். அவன் என்னை, ‘இது வேகாத பச்சை மண்சட்டி!’ என்று இழித்துரைத்தான்” என்றார்.
“மற்றவர்கள் தலையிலும் தட்டினாரா?” என்றார் விட்டல்.
“ஆமாம். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. நான் உமது பக்தன். என் தலையில் எப்படி அவன் தட்டலாம்? ” என்றார் நாமதேவர்.
“நான் கடவுளின் பக்தன்; எனக்குப் பக்தி அதிகம்; இறைவன் என் பிரியன்’ என்ற அகங்காரம் உன்னிடம் உள்ளது. இந்த அகங்காரத்தை நீ விட்டொழிக்கணும். அதற்காக,
பெற்றோர் தம் பிள்ளைகளை மற்றோர் ஆசிரியரிடம் அனுப்பி அறிவு புகட்ட வேண்டியிருப்பது போல, நானும் உன்னை ஒரு குருவிடம் அனுப்புகிறேன். நீ அறிவையும் பணிவையுங் கற்றுக் கொள். அது வரையிலும் நீ வேகாத பச்சை மண்சட்டியே தான்!” என்றார் பண்டரீபுரவிட்டல்!
“இறைவா, தங்களைவிட மேலானவரா குரு?”
“ஆம். உன் குரு அருகிலுள்ள காட்டில் ஒரு மண்டபத்தில் படுத்திருக்கின்றார். அவரிடம் போ” என்றார்.
அவர் சொற்படியே காட்டிற் புகுந்தார். மண்டபத்தில் படுத்திருக்கும் வயோதிகர் ஒருவரை கண்டார். அக்கிழவர் அங்கிருந்த ஒரு சிவலிங்கத்தின் மேல் தன் கால்களைப் போட்டு கொண்டுபடுத்திருந்தார்! சிவலிங்கத்தின் மேல் கால் படக்கூடாது என்ற சாதாரண உண்மை கூட இவருக்குத் தெரியவில்லையே” என்று கருதி அருகில் சென்றார்.
“வா, விட்டல் அனுப்பினாரா?” என்றார் கிழவர்!
“குருவே, விட்டல் என்னை அனுப்பிய விஷயம் கூட அறியும் நீங்கள் இப்படிச் சிவலிங்கத்தின் மேல் காலை போட்டுக் கொண்டிருக்கக் கூடாதென்பதை அறியாதது ஏன்?” என்று கேட்டார்!
“ அப்படியா? சிவலிங்கத்தின் மேலேயா என் கால் கிடக்கின்றது? எனக்கு வயோதிகத்தால் கால்கள் உணர்வற்றுப் போனதால் அவை எங்கு கிடக்கின்றன என்பதை ஸ்பரிசத்தால் அறிய முடியவில்லை; பார்வை மங்கி விட்டதால் கண்ணால் பார்த்தறியவுங்கூட இயலவில்லை. கால்களை நகர்த்தவும் சக்தியில்லை. நீ தயவு செய்து அக்கால்களைச் சிவலிங்கமில்லாத இடத்தில் எடுத்துப்போட்டு விடு” என்றார்.
உடனே அக்கிழவரின் இருகால்களையும் பிடித்துத் துõக்கி வேறோரிடத்தில் நகர்த்திப் போட்டார்.
என்ன ஆச்சரியம்! சிவலிங்கம் அக்கால்களின் அடியில் வந்து நின்றது! எத்தனை முறை எத்தனை வெவ்வேறிடங்களில் அவர் கால்களை மாற்றி மாற்றி இழுத்துப் போட்ட போதும், அத்தனை முறையும் அங்கங்கேயும் சிவலிங்கம் குருவின் காலடியில் வந்தே நின்றது!
இப்போது நாமதேவரது உள்ளம் உண்மை விழிப்புற்றது!
இறைவன் இல்லாத இடமே இல்லை. தன்னுள்ளும் இறைவன் இருக்கிறார் என்ற ஞானம் நாம தேவருக்குப் பிறந்தது. அவர்,வெந்த மண் சட்டியாகிவிட்டார்!
- தேவராஜன்.
******************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக