ஞாயிறு, 16 டிசம்பர், 2012
இலக்கியங்களில் சமய ஒற்றுமை/64/25.11.2012/
இலக்கியங்களில் சமய ஒற்றுமை/64/25.11.2012/
வேம்பம் பூவிலும் சிறு துளி தேனுண்டு என்பது போல, சமய காழ்ப்புணர்ச்சி காலத்தில் தமிழுக்கு தேவார திருமுறைகளும், நாலாயிரதிவ்ய பிரபந்தமும் கிடைத்தது.
தொல்காப்பியர் காலத்திலும் அவருக்கு முந்தைய காலத்து மக்கள், ஐம்பூதங்களையும், முருகன், திருமால், கொற்றவை தெய்வங்களை
வழிபாடு செய்தனர்.
‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்’
இப்பாடல் அக்காலத்தில் பல தெய்வங்களை வணங்கும் நிலை இருந்தது. ஆனாலும், அவர்களுக்கு சமயக்காழ்ப்புணர்ச்சி இல்லை என்பதை அறியலாம்.
தமிழ் பேரிலக்கியங்கள் அனைத்தும் சமயத் தொடர்புடையது.
சிற்றிலக்கியங்களாகிய பிள்ளைத்தமிழ் , குறவஞ்சி , பள்ளு , உலா ஆகியவைகளும் சமயத் தொடர்பு கொண்டவைதான்.
காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், சீவக சிந்தாமணி போன்றவை அந்தந்தக் காலத்துச் சமய ஒற்றுமையினை எடுத்துக் காட்டுகிறது.
சிலப்பதிகாரத்தில் சைவம், வைணவம்,பவுத்தம் முதலிய சமயங்களையும் குறிப்பிடுவதால் சமயச் சார்பற்ற காலமாகச் சிலப்பதிகாரம் இருந்துள்ளது.
சைவ சமயக் கடவுள் சிவனைப் பற்றி
மதுரை காண்டத்துள் வேட்டுவ வரியில், ‘சிவனுக்கு நெற்றிக்கண் உண்டு என்பதையும்,தேவர்களுக்காக நஞ்சுண்டு நீலகண்டன் என்பதையும், வாசுகியை நாணாகவும்,இமயத்தை வில்லாகவும் கொண்டு திரிபுரத்தை எரித்தான் என்றும், கொன்றை மாலையைத்
தரித்தவன்’ என்றும் சிவனை பிறவா யாக்கை பெரியோன் என்றும் போற்றுகிறது.
வைணவ சமயக் கடவுள் திருமாலைப் பற்றிச் சிலம்பில், ஆய்ச்சியர் குரவையிலும், காடுகாண் காதையிலும் காணலாம். ஆய்ச்சியர் குரவையுள்,
” கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்’ ‘ திருவரங்கம் ‘ பற்றிய குறிப்பும்,திருமால் பாம்பின் மீது பள்ளி கொண்டுள்ளான் என்ற குறிப்பும் ‘ காடுகாண் காதையில் காணப்படுகிறது.
வைணவக் காப்பியமான கம்ப ராமாயணத்தில் பிற சமயக் கடவுள் பற்றியும் கூறுகின்றது.
ராவணன், வாலி முதலானோரைச் சைவ சமயக் கடவுளான சிவனின் பக்தர்களாகவே படைத்துள்ளார்.
வாலி பற்றி‘ அட்டமூர்த்தி தாள் பணியும் அன்பன் ‘ என்றும் ராவணைனைப் பற்றி‘ சிவபெருமானால் முக்கோடி வாழ்நாள் வழங்கப் பெற்றவன் ‘ என்றும், ‘ துள்ளுநீர் வெள்ளம் சென்னி ஏற்றவன் ‘ என்றும் குறிப்பிடுகிறார்.
சிந்தாமணி, மணிமேகலை முதலிய காப்பியங்களும், சமயக் காழ்ப்பற்ற நிலையினை விளக்க பல தெய்வங்களைக் குறிப்பிடுகின்றன.
இன்றைய காலத்திலும் நாம் சமயபொறை காக்க வேண்டியது நம் கடமை மட்டுமல்ல; அது இறைவனின் விருப்பமும்கூட.
-தேவராஜன்.
*********************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக