



கடல் கொண்ட பழைய தமிழகம்!
- தேவராஜன்.
2004 டிசம்பர் 26ம் நாள் நம்மில் சிலர் நேரடியாகவும் பலர் தொலைக்காட்சிகளிலும், செய்திதாள்களிலும் அறிந்து கொண்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையை பழந்தமிழகம் பலமுறை கண்டிருக்கிறது என்பது வியப்பு மட்டுமல்ல சோகமும்கூட.
1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் நாளன்று வீசிய கடும்புயலின்போது, ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர எல்லையான தனுஷ் கோடியை ஒரு பேரலை தாக்கியது. அதிகாலை 3 மணியளவில் 20 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத ஆழி பேரலையால் ராமேஸ் வரம் தீவின் கிழக்கு முனையில் இருந்த தனுஷ்கோடி என்ற 500 வீடுகளைக் கொண்ட அழகிய மீனவப் பகுதி முற்றிலுமாக அழிந்தது. ( இதே பகுதியில் இது பற்றி விரிவாக ‘ மனிதர்கள் வசிக்கு முடியாத நகரம்’ என்ற கட்டுரையில் முன்பு படித்திருப்பீர்கள்!)
பழைய தமிழகத்தைத் தாக்கிய நான்காவது கடற்கோள்(ஆழிபேரலை), காவிரிப்பூம்பட்டினம் என்கிற பூம்புகாரை தன்னுள் சுருட்டிக்கொண்டது.
ஏதென்ஸ், ரோமாபுரி போன்ற ஐரோப்பிய கண்டத்தின் பழம்பெருமைமிக்க நகரங்களுக்கு இணையாக கட்டமைப்பிலும் வணிகத்திலும் சிறந்து விளங்கிய துறைமுக நகரம் பூம்புகார்.( இதே பகுதியில் இது பற்றி விரிவாக ‘கடல் குடித்த நகரம் ’ என்ற கட்டுரையில் முன்பு படித்திருப்பீர்கள்)
கடலால் விழுங்கப் பட்ட தமிழகத்தின் பூம்புகாரும், குஜராத்தின் காம்பேவும் ஹரப்பா- மொகஞ்ச தாரோ நாகரிகத்திற்கும் முற்பட்டவை.
பழந்தமிழ் நிலப்பரப்பை நான்கு கடற்கோள்கள் தாக்கியிருக்கின்றன. முதல் கடற்கோள், முதல் தமிழ்ச் சங்கம் அமைத்த தென்மதுரையை இரையாக்கியது. இரண்டாவது கடற்கோள், நாகநன்னாட்டை காவு கொண்டது. மூன்றாவது கடற்கோள், இடைச்சங்கம் அமைத்த கபாடபுரத்தை விழுங்கியது. இப்படி மூன்று சங்கங்கள் கொண்ட நிலப்பரப்புகளை ஆழிப்பேரலை குடித்துவிட்டது என்று மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்படி ஓர் ஆழிப்பேரலையில்தான் குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியா கண்டம் கடலடி சேர்ந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் சீனிவாசய்யர், சேசைய்யர், ராமச்சந்திர தீட்சிதர்,
தேவநேயப்பாவாணர் உள்ளிட்டோரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த குமரி கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்குதான் நம் பண்பாடு, கலாசாரம், நாகரீகம் வளர்ந்து செழித்தது. இப்படிப்பட்ட பெருமைமிக நிலப்பரப்பு இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கிறது.
இப்போது காணப்படும் தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சிறு, சிறு தீவுகள் இணைந்திருந்த ஒரு பெரிய நிலப்பரப்பு தான் அன்றைய குமரிக்கண்டம்.
இந்த நிலப்பரப்பில் ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழு முன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது!
இந்த நிலப்பரப்பில் பறுளி, குமரி என்ற இரண்டு பெரிய ஆறுகள் ஓடியுள்ளது !
குமரிக்கொடு(மலை), மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது!
தென்மதுரை, கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன!
இலக்கிய ஆய்வாளர்களின் ஆய்வுகளும், உலக செம்மொழி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளிலும் கீழ்கண்ட நிகழ்வுகள் குமரி கண்டத்தில் நிகழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அவை:
தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள ‘ தென் மதுரையில் கி.மு 4440ல் 4449 புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது . இதில் அனைத்துமே அழிந்து விட்டது.
இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700 ல் 3700 புலவர்களுடன் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது . இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850 ல் 449 புலவர்களுடன் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.
ஒவ்வொரு கடற்கோளும் நாடு நகரங்கள் மக்களோடு சேர்த்து, தமிழ் பண்பாட்டு,வரலாற்று அடையாளங்களையும் கடலுக்குள் கொண்டு புதைத்து வைத்திருக்கிறது.
கடலுக்குள் புதையுண்ட நகரங்களை ஆய்வு செய்யும் பணியை தொடர்ந்து மேற்கொண்டால், நமக்கு முன் தோன்றிய மூத்தகுடியின் அடையாளங்களைக் கண்டுபிடிக்கலாம்! காப்பாற்றலாம்! அடுத்த தலைமுறைக்கும் நம் பெருமையை எடுத்துச் சொல்லி பெருமிதம் கொள்ளலாம்!
**