வியாழன், 19 டிசம்பர், 2013


மனிதர்கள் மாயமாகும் மர்ம தீவு! -தேவராஜன் உலகில் ஏராளமான மலைகளும், தீவுகளும், கடல் பகுதிகளும் மர்மத்தின் புதையலாக புதைந்து கிடக்கிறது. விளக்க முடியாத வியப்புகளைச் சுமந்துகொண்டிருக்கும் ரகசியங்கள் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது! அவற்றில் ஒன்று மனிதர்களை கொல்லும் மர்ம தீவு! இந்த மர்மத் தீவில் கண்ணுக்கு எட்டிய துõரம் வரை விரிந்த ஏரியும் குட்டி குட்டியாக தீவுகள் இருக்கின்றன. இத்தீவில் ஒன்று ‘என்வைட்டினெட்’. இங்கே காலடி வைக்கும்மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள். இந்த மர்மத் தீவு கென்யாவில் துர்கானா ஏரி அருகே உள்ளது. துர்கானா ஏரி ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. ஆப்பிரிக்கா கண்டத்தின் மையத்தில் கென்யாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ருடால்ப் ஏரி. நீண்டு குறுகலான வடிவத்தில் அமைந்திருக்கும் இதன் பரப்பளவு சுமார் 6475 சதுர கி.மீ. இந்த ஏரியைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன. கி.பி. 1888ம் ஆண்டு ஆஸ்திரிய ஆய்வாளர் கவுண்ட் பால் டெலிக்கி என்பவர் இந்த ஏரியைக் கண்டுபிடித்தார். ஆஸ்திரியாவின் இளவரசர் ரூடால்ப் என்பவரின் பெயரால் ரூடால்ப் ஏரி என வழங்கப்படுகிறது. இந்த ஏரியைச் சுற்றி எரிமலைகள் அமைந்துள்ளன. இந்த ஏரியின் நீர் வெளியேற இயலாத நிலை உள்ளது. முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட். கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரைஅனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர, விஞ்ஞானிகள் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை. இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான்அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்’ என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர். பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா,அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்குவிடை கிடைக்கவில்லை. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை. ஆளே இல்லாத ஒரு அமானுஷ்யக் கிராமமாக அது அமைதிக்குள் உறைந்து கிடந்தது. பாக்ஸ் : கென்யா நாட்டின் துர்கானா ஏரியின் படுகையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனத்தின் எலும்புக் கூடுகளின் படிமங்கள் கிடைத்துள்ளன.மிகப் பழமையான மனித உடல்களின் படிமங்கள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு ’மனித குலத்தின் தொட்டில்’ என்ற பெயரே உண்டு. இங்கு கிடைத்துள்ள மனித உடல் படிமங்களை ஆராய்ந்ததில், அவை ஹேமோ சேப்பியன்ஸ் இனத்தின் படிமம் அல்ல என்பது தெரியவந்துள்ளது. மாறாக அவை மனித இனத்தின் இன்னொரு வகையான உயிர் என்பது தெரியவந்துள்ளது. இந்த மனித வகையினரின் மூளை மிகப் பெரிதாக இருந்துள்ளதும், தலை நீண்டு இருந்ததும், அதே நேரத்தில் முகம் வட்ட வடிவமின்றி ஒடுங்கி இருந்ததும், கீழ் தாடை மிக மிக பலமானதாகவும் இருந்ததும் தெரியவந்துள்ளது. மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ், ஹேமோ ஹபிலிஸ் ஆகியவை. இதிலிருந்து பரிமாண வளர்ச்சி அடைந்தே ஹேமோ சேப்பியன்ஸ் என்ற இப்போதைய மனித இனம் உருவானது. ஹோமோ சேப்பியன் மனித இனமும் ஒரே காலகட்டத்தில் வசித்துள்ளனர் என்கிறார் மீவ் லீக்கி. ***************

ஆவிகளுக்காக ஒரு பிரமாண்ட மாளிகை! - தேவராஜன்


ஆவிகளுக்காக ஒரு பிரமாண்ட மாளிகை! - தேவராஜன் நாம் நேசித்த ஒருவருக்காக நினைவு சின்னம் எழுப்புவது வழக்கமான ஒன்றுதான்! அந்த நினைவுச்சின்னம் யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம். பாசமான அம்மாவுக்காக, அன்பான அப்பாவுக்காக, அண்ணன்- தம்பி, அக்காள்- தங்கை, நண்பருக்காக, காதலுக்காக என பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்! ஆனால், பேய் அல்லது ஆவிகளுக்காக ஒரு பிரமாண்ட மாளிகையை யாராவது கட்டுவார்களா? கட்டியிருக்கிறார் ஒருவர்! ஆம் ஆச்சரியமாக இருக்கிறதா? இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி? இந்த மாளிகையைப் பற்றி இன்னும் தெரிந்து கொண்டால் நீங்கள் வியப்பின் உச்சத்திற்கே செல்வீர்கள்! அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் ஒரு பிரமாண்டமான மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகையை ஒருமுறை பார்த்தவர்கள் அப்பாடா! இப்படி ஒரு மாளிகையா! என்பார்கள். இந்த மாளிகைக்குச் சொந்தக்காரர் ஒரு பெண். அந்தப் பெண்ணின் பெயர் சாரா. சாரா 1840 ல் பிறந்தவள். 1862ல் திருமணம். சாராவின் கணவர் பெயர் வின்செஸ்டர். இந்த தம்பதிக்கு இரு மகள்கள். சாரா பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவள். அவள் பெரிய பணக்காரி. 1866ல் தன்னுடைய குழந்தைகளைப் பறிக்கொடுத்தாள்! 1881 தன் கணவனையும் பறிக்கொடுத்தாள். இந்த அடுக்கடுக்கான சோக நிகழ்வுகளுக்குப் பிறகுதான் சாராவுக்கு எப்படியோ இந்த மாளிகையை கட்டிப் பார்க்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தன் வீட்டில் அதிகப்படியான ஒரு அறையைக் கட்டினாள் சாரா. இப்படி தொடர்ந்து 36 ஆண்டுகள் கட்டிக் கொண்டே இருந்தாள் அந்த மாளிகையை! சாரா எதிர்பாராமல் 1922ல் இறந்து விட்டாள்! அவள் இறந்த போது அவள் கட்டியிருந்த மாளிகையை பெரும் நிலப்பரப்பில் பரவி இருந்தது. மாளிகையில் 160 அறைகள் இருந்தன. சாரா வின்செஸ்டரின் வீட்டில் பல அறைகள் பயன்படுத்தப்படவே இல்லை. சில அறைகளின் அகலம் வெகுசில அங்குலங்களே இருந்தன. மாளிகையில் இருக்கும் மாடிப்படிகள் எங்கே போகிறதென்றே தெரியாது. சாளரங்கள் வெற்றுச் சுவரை நோக்கி இருந்தது. எட்டுமாடிக் கட்டடமான இதில் 3 லிப்டுகள். 2,000 கதவுகள். 10,000 ஜன்னல்கள். பல மைல்கள் நீளத்துக்கு ரகசியப் பாதாளப் பாதைகள், கூடங்கள். எப்பப்பா... இன்று வின்செஸ்டர் மாளிகை ஒரு மியூசியம் ஆகிவிட்டது. உலகின் விந்தையான இந்தமாளிகையைக் காண பலரும் வருகின்றனர். வின்செஸ்டர் மாளிகை உருவானது எப்படி? சாரா வின்செஸ்டர் ஒரு இளம்பெண். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்தாள். அவள் ஒரு பங்களாவைக் கட்டி வந்தாள். இவளது குழந்தைகள் சிறுவயதிலேயே நோய்வாய்பட்டு இறந்துவிட்டன. அடுத்து அவர் கணவரும் இறந்து விட்டார். அவளை துன்பம் துரத்திக் கொண்டே இருந்தது. சோதனைமேல் சோதனை. இந்த மீளா துயரில் இருந்து மீள்வது எப்படி என்று யோசித்தாள். ஒருநாள் ஒரு பாதிரியாரைச் சந்தித்தாள். அவரிடம் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் தான் இழந்ததையும் சொல்லி சொல்லி அழுதாள். இதை எல்லாம் கேட்ட அந்த பாதிரியார், “உனக்கு ஒரு சாபக்கேடு இருக்கிறது. உன் கணவர் போர்க்கருவிகள் செய்து கொடுத்ததால் இரண்டாம் உலகபோரில் ஏராளமானவர்கள் கொல்லபட்டனர். அவர்களின் ஆத்மாக்கள் உன் குடும்பத்தை பழி வாங்குகின்றன. அதுதான் உன் குழந்தைகள் இறக்கக் காரணம். அந்த ஆத்மாக்கள்தான் உன் மாளிகையில் வசிக்கின்றன. அந்த மாளிகையை ஆவிகளுக்கு வசதியாகக் கட்டு. மாளிகையை நீ கட்டிக் கொண்டே இருக்கணும். கட்டுவதை இடையில் நிறுத்தினால் நீ இறந்துபோவாய்” என்றார். இதைக் கேட்ட அதிர்ந்தவள் என்ன செய்வது சற்று குழம்பினாள். பிறகு, பாதிரியார் சொன்னதை முழுமையாக நம்பிய சாரா, தனது பங்களா முழுவதும் நுõற்றுக்கணக்கான ஜன்னல்கள், நுõற்றுக்கணக்கான கதவுகளும் வைத்துக் கட்டினாள். அப்படி கட்டிக்கொண்டிருக்கும் போது 1906ம் ஆண்டு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவும் ஆத்மாக்களின் கோபம் என்று எண்ணிய அவள் மேலும் ஜன்னல், கதவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தாள். மாளிகை முழுமையாக கட்டி முடிக்கும் முன்பே சாரா இறந்துவிட்டாள். இப்படி ஒரு கதை இந்த மாளிகை உருவான விதம் பற்றி கூறப்படுகிறது. இன்றைக்கும் இந்த மாளிகை சுற்றுலா பயணிகளை திகைக்கவும், ஆச்சரியபடவும் வைக்கும் மாளிகையாகத் திகழ்கிறது.

வெள்ளி, 13 டிசம்பர், 2013

அட்லாண்டிஸ் எனும் மாயாலோகம்! - தேவராஜன்


இன்றைய தேதி வரை அட்லாண்டிஸ் பற்றி ஆயிரக் கணக்கில் ஆய்வுகள் , தேடல்கள், புத்தகங்கள், திரைப்படங்கள், கதைகள் என்று கொண்டே இருக்கிறது. கிரீசின் அருகில் ,ஸ்பெயினின் அருகில் , இத்தாலியின் அருகில் என்று எத்தனையோ இடங்களில் அட்லாண்டிசைக் கண்டு பிடித்து விட்டதாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இப்படி ஒரு நகரம் இந்த பூமியில் இருந்ததா, இல்லையா? இது ஒரு நல்ல எழுத்தாளனின் மிகப் பெரிய கற்பனையின் வெளிப்பாடா? போன்ற புதிர்களைச் சுமந்து கொண்டுதான் இருக்கிறது இந்த அட்லாண்டிஸ் என்னும் மாயாலோகம். அட்லாண்டிஸ் பற்றிக் கிடைத்த எழுதப்பட்ட ஆவணக் குறிப்பு என்று பார்த்தால் அது பிளாட்டோவின் தைமியஸ் மற்றும் க்ரிடியஸ் உரையாடல்கள் மட்டுமே. கி.மு 428- கி.மு 348 காலப்பகுதியில் கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவ அறிஞரான சாக்ரடீசின் மாணவன்தான்பிளேட்டோ . இவர் தான் முதன் முதலில் அட்லாண்டிஸ் பற்றிக் குறிப்பிட்டார். பிளாட்டோ எழுதிய இந்த உரையாடல் சாக்ரடிஸ்,ஹெர்மோகிரெடஸ்,தைமியஸ் மற்றும் க்ரிடியஸ்ஸுக்கு நடுவில் நடக்கிறது. சாக்ரடிஸ் சிறந்த சமூக அமைப்புகள் பற்றிப் பேசியதற்கு பதிலளிக்கும் போது, தைமியஸும், க்ரிடியஸும் அப்படிப் பட்ட சமூகத்தின் ஒரு உண்மையான கதையை சாக்ரடிசுக்கு கூற முன்வருகின்றனர். அட்லாண்டிஸ் பற்றி சொன்னதாக ப்ளாட்டோவின் உரையாடலில் சாக்ரடிஸுக்கு இந்தக் கதையைச் சொல்லும் பேர்வழி குறிக்கப்படும் தைமியஸ் நீங்கலாக இந்த உரையாடலில் குறிப்பிடப் படும் அனைவரும் புராதன கிரேக்கத்தில் இருந்ததற்கான சரித்திரக் குறிப்புக்களும் ஆவணங்களும் இருந்திருக்கின்றன என்று வரலாற்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மேலும், பல நூல்களில் இவர்களது வாழ்வும் செயல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.இதனால் இதை முழுவதும் கட்டுக்கதை என்றும் புறந்தள்ள முடியவில்லை என்று கருதுகின்றனர் சில ஆராய்சியாளர்கள். கதையில் சொல்லப்பட்டபடி ,அட்லாண்டிஸின் தலைநகர் மிகச்சிறந்த கட்டிடக்கலை மற்றும் பொறியியலுக்கு உதாரணம். பல அடுக்கு வளையமாக கட்டப்பட்ட மாளிகைகள் , பல கால்வாய்கள், அரங்கங்கள் என அனைத்தும் உண்டு அட்லாண்டிஸில் . நடுவில் உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கோயிலில் கடல் கடவுள் பொசைடான் இறக்கைகளுள்ள ஆறு குதிரைகள் கொண்ட ரதத்தைச் செலுத்துவது போன்ற பெரிய சிலை தங்கத்தில் வடிக்கப்பட்டிருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் பெண்களை முதன்மைப் படுத்திய மிகவும் முன்னேறிய சமுதாயமாக இருந்தனர். இப்படிப் போகிறது (பிளாடோவின்) வருணனை. பலர் இதனை ஒரு கட்டுக்கதை என்றும் பிளாட்டோ தன் உரையாடல்களை சுவாரசியமாக்குவதற்காக உருவகப் படுத்தியதென்று சொல்கிறார்கள். மறு தரப்போ சீரியசாக அப்படி ஒரு இடம் இருந்ததென நம்புகிறது. பிளாட்டோ சொன்ன கதை ஒரு புறம் இருக்கட்டும். இன்னொரு கதையும் இருக்கிறது. அது அட்லாண்டிசின் புராணக்கதை. அந்தப்புராண கதையின்சுருக்கம். கிரேக்கக் கடல் கடவுளான பொசைடான் ஒரு தீவில் க்ளெய்டோ என்ற அழகான ஒரு பெண்ணைப் பார்த்து காதல் கொள்கிறார். இருவருக்கும் பத்து குழந்தைகள் பிறக்கின்றன. முதல் குழந்தை பெயர் அட்லஸ். பொசைடான் ஒரு சந்தேகப் பேர்வழி. க்ளெய்டோவைக் கூட நம்பாமல் அந்த இடத்தில் யாரும் நெருங்க முடியாதபடிக்கு கடல் அகழிகள் அமைத்து ஒரு தீவு நகரமாக்கி விடுகிறார். அதுவே அட்லஸின் பெயரால் அட்லாண்டிசாக ஆகி அட்லஸ் முதல் அனைவராலும் ஆளப் பட்டது. இது கடல் கன்னிகளால் காக்கப்படும் நகரமாக இருந்தது. அங்குள்ள உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கடல் கடவுள் பொசைடான் கோயில் ஒரு உலக அதிசயம். மேகங்களே கோயிலுக்குள் உலவும் அளவு பிரம்மாண்டம். இப்படிப் போகிறது அட்லான்டிஸ் புராணக் கதை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாக நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் மீதங்களை கண்டுபிடித்துள்ளதாக சமீபத்தில் கூட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந்நகரின் சில இடிப்பாடுகளை தென் ஸ்பெயினில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும், அது ஸ்பெயினின் காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செயற்கைக்கோள் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இவ்வாராய்ச்சியை மேற்கொண்டவர் ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் . அட்லாண்டிஸ் இருந்ததற்கான சாத்தியப்பாடுகள் நிறைய இருந்தாலும் அதனை நிரூபிப்பதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் கிடைக்காதது ஒரு குறை தான். என்றாலும் அந்தக் குறைக்காக அப்படி ஒரு தேசம் இல்லையென்றே கருதுவது ஏற்புடையதாகாது என்று புவிச்சரிதவியலாளர்கள் கருதுகின்றனர். **********

வியாழன், 5 டிசம்பர், 2013

இத்தாலியில் ஒரு பயங்கர அரங்கம்! - தேவராஜன்.


‘எல்லாச் சாலைகளும் ரோம் நோக்கி’ என்ற வழக்குச் சொல், ஒரு மனிதன் தான் இறப்பதற்குள் ஒரு முறையேனும் ரோம் நகரை பார்த்துவிட வேண்டும் என்ற அர்த்தத்தில்தான்! அப்படிப்பட்ட ரோம் நகரில் இருக்கும் ஒரு பயங்கரமான அரங்கத்தைத் தெரிந்துகொள்வோமா! ஒரு பிறந்த நாள் கேக்கை உள்பகுதியில் குடைந்து வைத்தது போல் இருக்கிறது சிதலமடைந்த அந்த அரங்கம். அதன் பெயர் கொலோசியம். இது ஒரு பயங்கரமான அரங்கம். இத்தாலியின் தலைநகர் ரோமில், கேலியன், எஸ்க்யூலன், பாலட்டைன் மலைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கில் இந்த கொலோசியம் அமைந்துள்ளது. கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். இது நீள்வட்ட வடிவமான கட்டிடம். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை அம்ஃபிதியேட்டர் எனப்பட்டது. இலத்தீன் மொழியில் வட்டவடிவ அரங்கம் என்று பொருள். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள். கி.பி 72 ம் ஆண்டில், வெஸ்பாசியன் என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. 217 ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சேதமாகும் வரை, கொலோசியம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தது. 238 ல் மீண்டு புதுப்பிக்கப்பட்டது. காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுகளுக்காகவும், வேறு நிகழ்ச்சிகளுக்காகவும், கொலோசியம் 524 ம் ஆண்டுவரை பயன்பட்டது. 847 மற்றும் 1349 ஆகிய ஆண்டுகளில் புவியதிர்வுகளால் கடுமையாகச் சேதமடைந்த இது, பின்னர் ஒரு கோட்டையாக மாற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது. நீண்ட காலமாக ஆம்ஃபி தியேட்டர் என்றே அழைக்கப்பட்டு வந்த அந்தரங்கினை பெடெ என்ற வரலாற்று ஆய்வாளர் கொலோசியம் என்று பெயர் மாற்றினார். நீரோ பூங்காவுக்கு அருகில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்திருந்த நீரோவின் சிலையை ஒட்டி அந்த அரங்கு அமைக்கப்பட்டதால் அந்த பெயர் வந்தது. ஆறு ஏக்கர் நில பரப்பில் 615 அடி நீளமும், 510 அடி அகலமும் உடைய அந்த அரங்கின் சுற்றுச்சுவர் 157 அடி உயரம் கொண்டது. மொத்தம் ஒரு லட்சம் க்யுபிக் மீட்டர் ட்ராவெல்டன் கற்கள் அருகிலிருந்த டிவோலி மலைப்பிரதேசத்திலிருந்து 2,40,000 முறை வண்டிகளில் எடுத்துவரப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கட்டுமானப் பணிகளில் 40 ஆயிரம் யூத அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர். இத்தனை சிறப்புகள் கொண்ட கொலோசியம், கட்டப்பட்டதற்கான காரணம் அத்தனை உன்னதமானது இல்லை. மனித மனத்தின் வக்கிர எண்ணங்களுக்கு வடிகாலாய் அந்த காலத்தில் அரசுகளை ஆண்ட மன்னர்களே பல அநீதியான காரியங்களை சட்டப்பூர்வமாக செய்திருக்கின்றனர். அதற்கு உதாரண சாட்சியாக இருப்பதுதான் அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கொலோசியம். கொலோசியம் அரங்குகளில் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளோடு மோதி அவற்றைக் கொல்லும் விளையாட்டுக்களும் உண்டு. டைட்டஸ் காலத்தில் அரங்கின் துவக்க விழா நிகழ்ச்சியின்போது 9000 விலங்குகள் கொல்லப்பட்டிருக்கின்றன. கிறுஸ்துவ சமயம் வேகமாக இத்தாலியில் பரவத்தொடங்கிய பின் க்ளேடியேட்டர் விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டு 6ம் நூற்றாண்டில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. வரலாற்றின் பக்கங்களை கொலோசியம் பயங்கரத்தை நிரப்பினாலும், இத்தாலி நாடு அதன் பயங்கரத்தை அழித்து, அதனை ரோமன் -கிரேக்க கட்டடக்கலைக்கு உதாரணமாக சொல்லும்படி மாற்றிவருகிறது. பெட்டிச்செய்திகள்: இத்தாலிய அரசு 1948 ம் ஆண்டு தனது நாட்டில் மரணதண்டனையை முற்றிலுமாக ஒழித்து சட்டம் இயற்றியது. அதன் அடையாளமாக கொலோசியத்தை அலங்கரித்து பிரகாசிக்கச்செய்து உலகுக்கு அறிவித்தது. மரணதண்டனைக்கு எதிரான குரலை பிரதிபலிக்கும் சின்னமாக கொலோசியத்தை அப்பொழுது பிரகடனப்படுத்தியது. அன்றிலிருந்து எந்த நாட்டில் மரணதண்டனையை ஒழித்து சட்டம் இயற்றினாலும், கொலோசியம் பொன்விளக்குகளால் மின்னும். ஒரு காலத்தில் மரண ஓலங்களால் நிரம்பிய கொலோசியம் இன்று மரணதண்டனைக்கு எதிரான அடையாளச்சின்னமாக கருதப்படுவது விசித்திரமான வரலாற்று முரண்தானே! (20.12,13) ***

செவ்வாய், 3 டிசம்பர், 2013

பாபிலோன் தொங்கும் தோட்டம் சொல்லும் கதை - தேவராஜன்


பழங்கால சிறந்த நகரங்களுள் ஒன்று பாபிலோன். இதுபுகழ்பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. பாபிலோனை ஹமுராபி என்பவர் சிறப்பாக ஆட்சி செய்தார். ஹமுராபி ஆட்சிக்குப் பிறகு இவரது தளபதி நெபோபலாசர் என்பவர் மன்னரானார். அதன் பிறகு, நெபோபலாசரின் மகன் நெபுகட்நேசர் மன்னரானார். இவர் ஆட்சி காலத்தில் தான் பாபிலோனில் தொங்கும் தோட்டம் அமைக்கப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தொங்கு தோட்டத்தை அமைத்த பெருமைக்குரியவர் நெபுகட்நேசர். இத்தோட்டத்தினை அமைத்ததற்குக் காரணமான ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. மீட்ஸ் அரசர் சையாக்சரசின் மகள் அமிடிசை. அழகு ராணி. இவளை நெபுகட் நேசர் திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு பாபிலோனில் வசிக்கும் போது, அந்த நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை. எனவே, எப்போதும் வருத்தமாகவே இருந்தார். இதனைக் கவனித்த மன்னன் , ராணியிடம் காரணம் கேட்டார். அதற்கு, ராணி அமிடிஸ், “என் அன்புக்குரிய மன்னா! என் மனதில் இருப்பதைச் சொல்கிறேன். நான் மலைநாட்டு இளவரசி. என் நாட்டில் உயர்ந்த குன்றுகளும், மலைகளும், காடுகளும், நறுமண மலர்களும், கொடிகளும் அழகழகாய், வண்ண வண்ணமாய் கண்ணையும் மனதையும் நிறைத்துக் கொண்டிருக்கும். அப்படி ஒரு சூழ்நிலையில், இடத்தில் நான் வளர்ந்ததால் என் மனம் இயற்கையையே நாடுகிறது. இங்குள்ள பரந்த வயல்வெளிகள், வெற்றிடங்களைப் பார்த்துப் பார்த்து என் மனம் சோர்வடைகிறது” என்றார் சோகமாக. இதனைக் கேட்ட மன்னன், “ அவ்வளவு தானே! இனி கவலை வேண்டாம். உன் ஆசைப்படியே நீ இருக்கும் இடம் அமையும்” என்றார். அரசவையினைக் கூட்டினார். பாபிலோனில் மலைக் குன்றுகளை உண்டாக்க முடியுமா என விவாதித்தார். பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர். எல்லாருடைய ஆலோசனைகளைக் கேட்ட மன்னர், செயலில் ஈடுபட்டார். அரண்மனையின் ஒவ்வொரு அடுக்கின் மேலும் சற்று உட்புறமாக பல மாடிகளைக் கொண்ட சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டது. 56 மைல் நீளத்தில், 80- அடி அகலத்தில், 320 அடி உயரத்தில் அமைத்து, இரு சுவர்களுக்குமிடையில் ஏராளமான மண் கொட்டப்பட்டது. சுவரின் உள், வெளிப்புறத்தில் மிக மெல்லிய ஓட்டைகளுடன் கூடிய அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்டன. இத்தகடு, உட்புற மண் சரிந்து விழுந்துவிடாதபடி மிக கவனமாகப் பலப்படுத்தப்பட்டது. அதற்குமேல் சற்று உட்புறம் தள்ளி இரண்டாவது மாடச்சுவர் கட்டப்பட்டது. இடைப்பகுதியில் மண்போட்டு நிரப்பி அலுமினியத் தகடுகள் பதிக்கப்பட்டன. இப்படியே 8 மாடங்கள் ஒன்றன்மீது ஒன்றாகக் கட்டப்பட்டன. இந்தக் கட்டடச் சுவர்களின் இடையில், பழம் தரும் மரங்கள், செடார், பைன், பர்ச், புரூஸ் போன்ற மரங்களும், பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்ச் செடிகளும், கொடிகளும் அமைக்கப்பட்டன. படர்ந்த கொடிகள் மேல் மாடத்திலிருந்து கீழ் மாடத்திற்குப் படர்ந்து ஒரு தொங்கும் தோட்டம்போல் காட்சியளித்தது. பூத்துக் குலுங்கிய வண்ண மலர்கள் பார்ப்பவர்களின் கண்ணிற்கும் மனதிற்கும் விருந்தளித்து நின்றன. திராட்சைக் கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டு, பழங்கள் பழுத்துத் தொங்கின. உச்சி மாடத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாடத்திற்கும் செல்ல, உட்புறமும் வெளிப்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அலுமினியத் தகடுகளிலிருந்து உட்புறத்திற்குத் தண்ணீர் கசிந்துவிடாதபடி கவனமாக வெளியேற்றப்பட்டது. ஒவ்வொரு மாடத்திலும் 4 வாயில்கள் இருந்தன. எட்டாவது திறந்த மாடத்திலும் மாடவெளியிலும் நந்தவனம் அமைக்கப்பட்டிருந்தது. மலர்ச் செடிகளிலும் பழ மரங்களிலும் பலவிதமான பறவைகள் சிறகடித்துப் பறந்தன; வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டன. பறவைகளின் இனிய ஓசை மனதிற்கு இதமளித்தது. செயற்கையான முறையில் ஓர் இயற்கைக் காட்சி அழகாக உருவாக்கப்பட்டது. யூப்ரடீஸ் நதியிலிருந்து நீரை மேலே ஏற்றி, தொங்கு தோட்டத்திற்கு நீர் பாய்ச்சினர். இவ்வளவு பெரிய அளவிற்கு மண்ணை ஏற்றினாலும், ஒவ்வொரு மாடமும் சரியாமல் திட்டமிட்டுக் கட்டிய பணி, அக்கால அறிஞர்களின், பொறியியல் வல்லுநர்களின் திறமையை நினைத்துப் பிரமிக்க வைத்துள்ளது. வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் ஹெரடோட்டஸ் எழுதிய தொங்கு தோட்டத்தின் வருணனை மிகவும் புகழ் பெற்றதாகும். கி.மு. 400 ல் பெரோசஸ் என்பவர்தான் முதன் முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம்பற்றி எழுதியதாக கூறப்படுகிறது. இது கி.மு. 600 ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. இப்போது இருக்கும் ஈராக்கின் பாக்தாத் நகருக்குத் தெற்கே முப்பது மைல்கள் துõரத்தில் யூப்ரட்டீஸ் நதிக்கரையோரத்தில் அமைக்கப்பட்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தால் இந்தப் பாபிலோனின் தொங்கும் தோட்டம் அழிக்கப்பட்டுவிட்டது.

இன்கா மக்களின் தொலைந்த நகரம் - தேவராஜன்

இன்கா மக்களின் தொலைந்த நகரம் - தேவராஜன் பெரு நாட்டில் இயற்கையின் அழகின் நடுவே அமைந்திருக்கும் இந்த மச்சு பிச்சு இப்போது உலக அதிசயங்களில் ஒன்று எனும் பெருமையைப் பெற்றுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகர் இன்கா நாகரீக மக்களின் கட்டடக்கலைக்குச் சான்றாகவும், அவர்களுடைய ரசனைக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது. உருபாமா பள்ளத்தாக்கின் அருகே அடர் காட்டில், அருவிகளின் ஆரவாரத்தில், அழகின் உச்சத்தில் இந்த நகர் அமைந்துள்ளது. கஸ்கோ நகரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. பளபளப்பாக்கப்பட்ட உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது மச்சு பிச்சு அரண்மனை. இத்தனை ஆயிரக்கணக்கான கற்களை எப்படி இந்த மலை உச்சிக்கு கொண்டு வந்தார்கள் என்பது வியப்பின் உச்சம்! இன்கா நகரின் கதை இந்த நகர் இன்கா மன்னனின் கோட்டையாக இருந்திருக்கலாம் எனவும், ஆயிரம் பேர் இந்த அரண்மனை நகரில் வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த நகரின் வரலாற்றுக் கதை சிலிர்ப்பும், வியப்பும், அதிர்ச்சியும், சோகமும் கலந்து கிடக்கிறது. பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய பெரு நாட்டு இன்கா மக்கள், கஸ்கா நகரை விட்டு அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது. காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர். நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஸ்பானியர்கள் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். 36 ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள். வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கண்ணில் பட்ட இன்கா மக்களைபடுகொலை செய்தனர். இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான். அவனை கஸ்கோ நகருக்குக் கொண்டு வந்து பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வைத்து படுகொலை செய்தனர் ஸ்பானியர்கள். என்று சில ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. பெரு நாட்டில் வாழ்ந்த இன்கா சாம்ராஜ்யம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த 1450ம் ஆண்டில் மச்சுபிச்சு மலை கட்டுமானங்கள் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இன்கா சாம்ராஜ்யத்தின் தலைநகரான குஸ்கோ நகரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அடர்ந்த காடுகளுக்கு இடையே மச்சுபிச்சு அமைந்துள்ளது. இதன் மூன்று புறமும் சூழ்ந்து பாயும் உருபாமா நதி மச்சுபிச்சுவுக்கு இயற்கை அகழிபோல் அமைந்துள்ளது. இது இன்கா சக்கரவர்த்தியின் மலை வாசஸ்தலம் எனவும், எதிரிகள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுக்கப்பட்ட பகுதி எனவும் கூறப்படுகிறது. கண்டு பிடிக்கப்பட்டது எப்படி? ஹிராம் பிங்காம் எனும் யேல் பல்கலைக்கழக தத்துவ ஆசிரியருக்கு ஆர்வம் வாய்க்காமல் போயிருந்தால் இந்த மச்சு பிச்சு எப்போது உலகிற்கு அறிமுகமாயிருக்கும் என்று சொல்ல முடியாது. இன்கா மக்களின் கதைகளிலும், அவர்களுடைய கலாச்சார வாழ்க்கை முறையிலும் ஆர்வம் கொண்ட ஹிராம் பிங்காம் 1911ம் ஆண்டு தன்னுடன் சிலரையும் அழைத்துக் கொண்டு கஸ்கோ வை விட்டு காட்டுக்குள் பயணமானார் தொலைந்து போன நகரைக் கண்டுபிடிக்க. இவர்கள் பயணம் துவங்கிய சில நாட்களிலேயே இன்கா மக்களின் நகர் இடிபாடுகள் ஒன்றைக் கண்டனர் அதற்கு பட்டாலக்டா என்று பெயரிட்டனர். அற்புதமாய் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு நகரே இருந்தது. இதுவே இன்றைய மச்சு பிச்சு ! “இன்கா மக்களின் தொலைந்த நகரம்” என அதை அவர் அழைத்தார். வரலாற்று சின்னம் 1913ம் ஆண்டு மச்சு பிச்சுவுக்கு ஒரு ரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பமானது. அது படிப்படியாக நடந்து 35 ஆண்டுகளுக்குப் பின் மச்சு பிச்சுவைச் சென்றடைந்தது. 1981ம் ஆண்டு மச்சு பிச்சு இருக்கும் இடத்தையும் சேர்த்து 325 சதுர கிலோமீட்டர்களை பெரு அரசு வரலாற்று இடமாக அறிவித்தது. யுனஸ்கோவின் அங்கீகாரம் இரண்டு ஆண்டுகளில் கிடைத்தது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது. எத்தனையோ ஆண்டுகால கடின உழைப்பினால் இன்கா மக்களால் உருவான வில்காபாம்பா நகர், சில பத்து ஆண்டுகளிலேயே காலி செய்யப்பட வேண்டுமெனில் ஏதோ ஓர் மிகவும் வலுவான காரணம் இருந்தே ஆக வேண்டும். இடிபாடுகளுடன், சிதைந்து, பாழடைந்து கானகத்தின் சிதைந்த ஓவியமாய், ஓர் இனம் அழிந்த வரலாற்றின் சோகத்தை சொல்லிக்கொண்டிருக்கிறது இன்கா மக்களின் தொலைந்த நகரம்.