வியாழன், 7 ஏப்ரல், 2011

எதுக்கான கவிதை இது?

சின்ன சின்னக் கல் அடுக்கி
சிங்காரமாய் கோட்டைக்கட்டி
கோட்டை மேலே ஏறிகிட்டு
கோமாளி வேஷம் போட்டுக்கிட்டு
போனது போனது யாரடி ஞானப்பெண்ணே?

என்னவோ ஆசைவைச்சி
ஆனந்தமா ஆடவைச்சி
கனவுக்குள்ள குடுத்தனமாச்சி
முழிச்சிப்பார்த்தா விடிந்தபொழுதாச்சு
ஆனது ஆனது ஏனடி ஞானப்பெண்ணே?

நானும் சொன்னதில்லே
அதையாரும் கேட்டதில்லே
எள்ளுப்பூ நாசிக்குள்ள
எட்டெறும்பு முச்சதில்லே
காரணம் காரணம் தெரியலடி ஞானப்பெண்ணே?

அழவும் தெரியலே
சிரிக்கவும் முடியலே
யாருக்கும் நிழல் கறுப்புத்தான்
வாழ்க்கை விளங்காத விடுகதை
புரியல புரியல ஏனடி ஞானப்பெண்ணே?